சுவிஸ் சுதந்திர நாளை முன்னிட்டு அல்ப்ஸ் மலைச் சிகரங்களில் ஒளிவெள்ளம்!

0
254

சுவிட்சர்லாந்து நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி அல்ப்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதி நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஒளியூட்டப்பட்டது. சுமார் நூறு கிலோ கிராம் மக்னீசியம் (magnesium) துகள்களை மலை மீது வீசி அதன் சிகரப்பகுதிகளை ஒளிரச் செய்த கண்கவர் காட்சிகளை பல இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளி பேணியவாறு கூடி நின்று பார்வையிட்டனர். சுவிஸ் ஊடகங்கள் அந்தக் காட்சிப் படங்களை வெளியிட்டுள்ளன.

இம் முறை சுவிஸ் மக்கள் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக வழமையாக இடம்பெறும் பொது வாண வேடிக்கைகள் போன்ற கோலாகல வைபவங்களைத் தவிர்த்து சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் சுதந்திர நாளைக் கொண்டாடி உள்ளனர்.

எனினும் நாட்டின் தெற்கு கன்ரன் பிரதேசத்தினுள் வரும் அல்ப்ஸ் மலையின் சுமார் நான்காயிரம் மீற்றர் உயரம் கொண்ட Veisivi மற்றும் Dent de Perroc சிகரங்கள் ஒளிரச் செய்யப்பட்டன. இக்காட்சிகளை சுமார் இருபது கிலோ மீற்றர் தூரம் வரை காணமுடிந்தது.

நாடு கொரோனா சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்த சமயத்தில் தமது அளப்பரிய சேவைகளை நல்கிய பல் துறைசார்ந்த 54 பேரை நாட்டின் அதிபர் Simonetta Sommaruga
ஒர் உத்தியோகபூர்வ வைபவத்துக்கு அழைத்து மதிப்பளித்தார்.

சுவிஸ் கூட்டாட்சியின் தொடக்க நாளாகக் குறிக்கப்படும் 1291 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் முதல் திகதியே ஆண்டு தோறும் நாட்டின் சுதந்திர நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

01-08-2020
சனிக்கிழமை.

குமாரதாஸன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here