வரலாற்றுப் பகை தீர்க்க எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் வீழ்த்துங்கள்- வ.கௌதமன்

0
614

தாய் தமிழீழ உறவுகளே! ஆகஸ்ட் ஐந்து நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றுப் பகை தீர்க்க எதிரிகளோடு சேர்த்து துரோகிகளையும் வீழ்த்துங்கள்.

வ.கௌதமன்

எனது உயிருக்கு நிகரான தாய் தமிழீழ உறவுகளுக்கு வணக்கம்.

நேர்மை மிக்க நமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளையும் அவர்கள் உள்ளிட்ட மூன்றரை லட்சம் தாய்த்தமிழ் உறவுகளையும் துள்ள துடிக்க எதிரிகளுக்கு பறிகொடுத்து நிற்கிறோம். இதற்கெல்லாம் காரணமான நம் எதிரிகளையும் மன்னிக்கவே முடியாத நம்மின துரோகிகளையும் பகை தீர்க்கும் வரலாற்றுக் கடமையை ஆகஸ்ட் ஐந்து நடக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்கவிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இலங்கை தேசம் கணக்கிட முடியாத காலத்திற்கு முன்பே நம் தமிழ் மன்னனான ராவணனால் ஆளப்பட்டது. அறமிக்க எல்லாளனால் பெருமை பெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசிய நாடுகள் முழுக்க கட்டியாண்ட நம் ராஜராஜ சோழனாலும் அவரின் மகன் ராஜேந்திர சோழனாலும் மும்முடி சோழ மண்டலமாக பெருமை கொண்டது. ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்திற்கு பின்பு நம் தமிழீழ தேசம் அடிமை கொண்டது. அந்த வெள்ளையர் கூட்டம் வெளியேறியபோது ஆள்கைக்குரிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் சென்றதனால் வந்த வினை நம் தேசம் சிங்களத்திடம் நிரந்தர அடிமையானது. இழந்த உரிமைகளை மீட்க வேண்டுமென்பதற்காக சுதந்திரம் பெற்ற இந்த எழுபத்தியிரண்டு ஆண்டுகளில் தந்தை செல்வா அவர்களின் முப்பது ஆண்டுகால அறவழிப் போராட்டமும் அதன் பின்னரான எங்களின் உயிருக்கு நிகரான தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் முப்பத்து மூன்று ஆண்டுகால ஆயுத வழிப் போராட்டமும் நடைபெற்ற சூழலில்தான் அறம் மிகுந்த நம் அண்ணன் பிரபாகரன் அவர்களின் அரசாட்சியினை பொறுக்க முடியாமல் நேர்மையற்ற பல வல்லரசு நாடுகள் சிங்கள அதிகார வர்க்கத்தோடு ஒன்றிணைந்து 2009ஆம் ஆண்டு உலகம் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் இன அழிப்பு போரை நடத்தி முடித்தது.
முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த இந்த பதினோரு ஆண்டுகளில் உலகமும், உலகத்தின் நீதிமன்றங்களும், தமிழினத்தின் இன அழிப்பிற்கு நீதி தருவதற்கு பதிலாக அதனை மூடிமறைக்கவே சிங்களத்தோடு கைகோர்த்து நின்றுகொண்டிருக்கிறது. நடக்கும் எதற்கும் துவண்டு போகாத, அயர்ந்து போகாத தமிழினம், நடந்து முடிந்த இன அழிப்பிற்கான நீதியையும், நிரந்தர விடுதலையையும் அடைந்தே தீர வேண்டுமென்கிற வேட்கையோடும், அறுந்து போகாத நம்பிக்கையோடும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான கால சூழலில்தான் இனப் பகையை வேர் அறுக்க நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. இதில் நாம் யாரை வெற்றியடையச் செய்ய போகிறோம் என்பதை விடவும் யார்யாரை படுதோல்வி அடையச் செய்யப்போகிறோம் என்பதுதான் மிக மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவனுக்கு இலங்கையில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன வேலை என்று எம்மினத்தின் எதிரிகளும் துரோகிகளும் கேள்வி எழுப்புவார்கள். 2009 இன அழிப்பிற்கு முன்பும் பின்பும் யுத்தத்தை காரணம் காட்டி எம்மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுந்த துக்கம் தாங்காமல் தமிழ்நாட்டின் கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி எண்ணற்ற போராட்டங்களும் அதற்காகவென்றே பல சிறைக்கொட்டடிகளுக்கும் சென்று வந்தவர்கள் நாங்கள். யுத்தம் தொடங்குவதற்கு முன்பே “இனி என்ன செய்யப் போகிறோம்? என்கிற காட்சி குறும் படத்தில் தொடங்கி இறுதி யுத்தம், விழ விழ எழுவோம், ரத்த காட்டேரி ராஜபக்சே, எங்கள் அப்பா என இருபதுக்கும் மேற்பட்ட ஆவண படைப்புகளை எனக்கு கடுமையான மன சிதைவு ஏற்படும் வரை படைப்பாக்கம் செய்திருக்கிறேன். சேனல் 4 தொலைக்காட்சி ஐநாவில் திரையிடப்பட்ட ஆவணப்படத்திற்கு பிறகு நான் ஆக்கம் செய்த பர்சூயூட் ஆஃப் ஜஸ்டிஸ்
(போருக்கு முன்பும் பின்பும் பெண்களின் நிலை) என்கிற ஆங்கில ஆவணப்படம் ஐநா சபையில் திரையிடப்பட்ட போது உலகெங்குமிருந்து வந்திருந்த மனித உரிமை மீட்பு போராளிகள் கதறி அழுதிருக்கிறார்கள்.

அதோடு மட்டுமில்லாமல் ஐநா சபையின் பிரதான அரங்கில் இரண்டு முறை தமிழீழத்தின் விடுதலைக்காக வாதாடி இருக்கிறேன். உலகம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களால் எம் உறவுகள் குத்தி குதறபட்டபோது துக்கம் தாங்காமல், தூக்கம் வராமல் தலையணை நனைத்த எத்தனையோ பொழுதுகள் இப்பொழுதும் வந்து வந்து போகிறது. அந்த வலி மறவாத
நிலையில்தான் இன்று உங்களிடம் வரலாற்று பகை தீர்க்க உரிமையோடு வேண்டி நிற்கிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் வந்த செய்தித்தாள்களில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து தனி தேசம் வேண்டும் என்று கேட்பவர்களை ரத்த சகதியில் மூழ்கடிப்போம் என்று சிங்களத்தின் புத்த பிக்குகள் கொக்கரித்த செய்தியினை படித்தபோது மனம் கொந்தளித்து போனது. இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது?

எனது பேரன்புக்கும் பெரும் பாசத்திற்குமுரிய வடக்கு கிழக்கினை சேர்ந்த எம் பல்கலைக்கழக தம்பிகளும், தங்கைகளும் பிரகடனப்படுத்தியதைப்போன்று ஐயா பெரியவர் இரா.சம்மந்தர் அவர்களையும், சுமந்திரன் அவர்களையும், ஸ்ரீதரன் அவர்களையும், படுதோல்வி அடையச் செய்யுங்கள். ஏதோ ஒரு வகையில் வலிமையாக இருந்தாலும் கூட இனத்திற்காக என்றும் பச்சை துரோகம் செய்கின்ற டக்ளஸ் தேவானந்தா அவர்களையும், இடையில் தடம் மாறி இனத்தின் பேரழிவுக்கு காரணமான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அவர்களையும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை மட்டுமே பரிசளியுங்கள்.

மட்டக்களப்பு பகுதியில்
தையல் மிஷின் சின்னத்தில் நிற்கும் கர்ணா அவர்களின் மனைவி தொடர்ந்து புலம்பெயர்
தேசத்திலிருக்கும் புலிகள்தான் நாட்டிலிருக்கும் தமிழீழ மக்களை திசைதிருப்பி சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள் என அபாண்டமாக குற்றம்சாட்டடுவதற்கு இத்தேர்தலின் மூலமாக தகுந்த பாடம் புகட்டுங்கள்.

தமிழ் மக்கள் சிலரை கொன்று தமிழ்ப்பெண்களை கடத்தி கப்பம் கட்ட கோரியும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியும் கொடூரமாக நடந்து கொள்ளும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிள்ளையான் அவர்களை படுதோல்வி அடைய செய்யுங்கள்.

தமிழ் தேசியத்தில் பற்றுக் கொண்ட கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழினத்திற்கு துரோகம் இழைக்கும் கட்சிகளாக இருந்தாலும் சரி சிங்கள இனவாத கட்சிகளாக இருந்தாலும் சரி தேர்தல் காலம் என்றால் வீரம் செறிந்த நம் விடுதலைப் புலிகளையும் நமது தமிழீழ தேசியத் தலைவர் அவர்களையும் தமிழ் தேசியத்தையும் முன்னிலைப் படுத்துவதும் தேர்தல் ஆட்டம் முடிந்து வெற்றி கண்டதும் மேற்கொண்ட அனைத்தையும் கறை பூசி காலில் போட்டு மிதிப்பதுமாக கேடுகெட்ட ஈன செயலில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் இந்த தேர்தலில் அவர்களை முற்று முழுதாக புறக்கணித்து அவர்களுக்கான தோல்வியினை நிரந்தரமாக்குங்கள்.

இத்தகைய பச்சை துரோகத்தை கூச்சமில்லாமல் செய்துகொண்டே தேவைக்கேற்ப சிங்கள கொடியையும் ஏந்தி நிற்கும் ஐயா சம்பந்தர் அவர்கள் இந்த முறை மட்டுமல்ல இனி எப்பொழுதுமே நாடாளுமன்றம் செல்ல முடியாத நிலையை உருவாக்குங்கள்.
சிங்கள அரசோடு கைகோர்த்து உலகம் முழுக்க சுற்றி வந்து இறுதியில் ஐநா சபையிலும் ஏறி நின்று நடந்தது போர்க்குற்றமே தவிர அங்கு இனப்படுகொலை நடக்கவில்லை என்று ஐக்கிய நாட்டு விசாரணையையே நீர்த்துப் போகச் சதி செய்த சுமந்திரன் அவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத படுதோல்வியினை பரிசளியுங்கள்.

என்னைப் போல் யாருண்டு, இனி தமிழ் தேசியத்தின் காவலன் நான்தான் என பிரகடனப்படுத்திக்கொண்டவர் இன்று தன் சுயலாபத்திற்காக மட்டுமே துரோகக் கூட்டத்தோடு கைக்கோர்த்த ஸ்ரீதரன் அவர்களுக்கும் மிகச் சரியான பாடம் புகட்டுங்கள்.

இவர்களெல்லாம் பாராளுமன்றத்திற்கு சென்று வந்த காலத்தில் தான் 700 நாட்கள் காணாமல் போனவர்களுக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள் முன்னால்தான் சிங்கள குடியேற்றம் தொடர்ந்து கொண்டே இருந்தது. வேடிக்கை பார்த்தது தவிர இவர்கள் வேறு எதுவும் செய்யவில்லை. இன அழிப்பு நடந்து பதினோரு ஆண்டுகள் கடந்தும் பிடுங்கிய தாயக நிலங்களை இதுவரை விடுவிக்காத சிங்கள அதிகாரத்தை நோக்கி ஒற்றை வார்த்தை கூட பேசாத பெருவீரர்களான இவர்களெல்லாம் பாவம் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்று இனி எதனை கிழிக்கப்போகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் நிரந்தர ஓய்வு கொடுங்கள். அது மட்டுமே அவர்களுக்கு மாபெரும் தண்டனையாக அமையும்.

நான் அறிந்தவரையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் நீதியரசர் ஐயா விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்கள் இயற்றியது போன்று 2009-இல் நடந்தது “இன அழிப்பு” என வடக்கு மாகாணசபையில் தீர்மானம் இயற்றியதனை மிக உயர்வாக கருதுகிறேன். மதிப்புமிக்கதாக போற்றுகிறேன்.

அது ஒரு வரலாற்றுக்குரிய முன்னெடுப்பு. ஆனாலும்கூட அவர் ஒன்றுபட்ட தேசத்திற்குள் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சிறு நெருடலை ஏற்படுத்துகிறது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் “ஒரு நாடு இரு தேசம்“ என்கிற கொள்கை வரைவு ஒரு நம்பிக்கையும் புது உற்சாகத்தையும் தருகிறது.

நடந்து முடிந்த இனப்படுகொலைக்குப் பிறகு சிந்தாமல் சிதறாமல் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தின் உரிமைகளையும் நிரந்தரமாக மீட்டெடுக்க தமிழின தலைவர்கள் ஒன்று சேரவில்லையே என்கிற பெரும் ஏக்கமும் கவலையும் எல்லோரையும் போன்று எனக்கும் உண்டு. “லட்சியத்தை அடைய கௌரவத்தைக் கூட இழக்கலாம்“ என்கிற எம் தமிழீழ தேசியத் தலைவரின் பொன்மொழியை உள்வாங்கி ஒரு பெரும் வரலாற்றை உருவாக்கவேண்டிய அரசியல் காலகட்டத்தில் இப்படி பிரிந்து நிற்பது துயரத்திலும் பெரும் துயரம்தான். ஆனாலும்கூட எச்சூழலாக இருந்தாலும் நம் இனத்தின் நிரந்தர எதிரி சிங்கள அதிகார வர்க்கம், ஒருபோதும் வெற்றி அடைந்து விடக்கூடாது. சிங்களத்தோடு கைகோர்த்து நிற்கும் எம் இனத்தின் துரோகிகளும் ஒருபோதும் வெற்றி அடைந்து விடவே கூடாது. எனது இந்த அறிக்கையின் நோக்கமெல்லாம் முன்பு குறிப்பிட்டதைப்போல எம் தமிழீழ மண்ணில் யார், யாரையெல்லாம் படுதோல்வி அடைய செய்யவேண்டும் என்பதுதான்.

எம் தமிழீழ மக்களே… குழப்பத்திற்கு ஒருபோதும் ஆளாகாமல் சுயநினைவோடு சிந்தித்து தீர்க்கமாக முடிவெடுத்து எதிரிகளையும் எம் இனத்தின் துரோகிகளையும் விரட்டி அடியுங்கள். ஐயா விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலோ சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலோ எவரெவரெல்லாம் மிகச்சரியான நபர்களோ அவர்களை மட்டும் வெற்றி பெற்ற வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்து உலகத்திற்கு பிரகடனப்படுத்துங்கள்.
மாறாக நம் எதிரிகளையும் நம் இன துரோகிகளையும் நம் மண்ணில் வெற்றி பெறச் செய்தால் நம் நிலத்தில் கதறி சிதறி ரத்தச் சகதியில் விழுந்த நம் வீட்டு பிஞ்சுக்குழந்தைகள் உள்ளிட்ட மூன்றரை லட்சம் தமிழ் உயிர்களுக்கு நாம் செய்கிற பச்சை துரோகமாக அமையும். அப்படி ஒரு நிலை ஏற்படாது என்று நம்புகிறேன். கடல் கடந்து தாய் தமிழ்நாட்டில் இருந்தபடி ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழீழ மண்ணின் மீதும், மக்களின் மீதும் அக்கறைக்கொண்ட தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற மகிழ்வான செய்தியினை கேட்க இங்குள்ள மாணவர்களோடும், இளைஞர்களோடும் மானமுள்ள தமிழர்களோடும் கண்விழித்து காத்திருப்பேன்.
வெல்வோம்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!.

பேரன்போடு,
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
‘’சோழன் குடில்’’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here