பிரான்சில் மிகக் குறைந்த வாக்குப் பதிவு: தலைநகரில் ஆன் ஹிடல்கோ பெருவெற்றி!

0
418

பிரான்ஸில் இன்று நடைபெற்று முடிந்த நகரசபைத் தேர்தல்களின் சுருக்கமான பார்வை இது.

நகரசபைத் தேர்தல் வாக்குப்பதிவு கொரோனா வைரஸ் நெருக்கடியின் ஆரம்பத்திலும்(மார்ச் 15) முடிவிலுமாக (ஜூன்28) இரு கட்டங்களில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

இம்முறை சுகாதார நெருக்கடி காரணமாக வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியாக மொத்த வாக்காளர்களில் 60 வீதமானோர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

முற்கொண்டு வெளியான முடிவுகளின்படி-

Le Havre நகரின் வேட்பாளரான பிரதமர் எத்துவா பிலிப்( Édouard Philippe) 58.83% வாக்குகள் பெற்று மீண்டும் மேயராகத் தெரிவாகி உள்ளார். இந்தப் பெரு வெற்றி குறித்து அதிபர் மக்ரோன் உடனடியாகவே தொலைபேசி ஊடாக அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

பாரிஸ் நகரின் சோஷலிச கட்சி மேயரான ஆன் ஹிடல்கோ (Anne Hidalgo) 49.5% வாக்குகளுடன் முதன்னிலை பெற்று தொடர்ந்து இரண்டாவது பதவிக் காலத்துக்கும் மேயராக முடி சூடியுள்ளார்.பசுமைக் கட்சி ஒன்றுடன் கூட்டணி வைத்து தனது வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.

தலைநகரின் மேயர் பதவியை 19 வருடங்கள் சோஷலிசக் கட்சி தொடர்ந்து தன்வசம் தக்கவைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆன் ஹிடல்கோவை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய இரு பெண் வேட்பாளர்களான La Republic கட்சியின் Rachida Dati 31.7% வாக்குகளையும் மக்ரோனின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சுகாதார அமைச்சர் Agnès Buzyn 14.4% வாக்குகளையும் பெற்றுத் தோல்வியடைந்தனர்.

நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லியோன் நகரை முதன் முறையாக பசுமைக்கட்சி (ecologist) கைப்பற்றியுள்ளது. மேயராக அங்கு பதவியில் இருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் Gérard Collomb அவர்களது அணியை தோற்கடித்து சூழலியலாளர் Gregory Doucet அங்கு புதிய மேயராகின்றார்.

இம்முறை பசுமைக்கட்சிகள் மேலும் பல நகரசபைகளில் தனித்தும் கூட்டணியாகவும் வென்று உள்ளூர் அரசியலில் பெரும் பசுமை அலையை உருவாக்கி உள்ளன.

அதிபர் மக்ரோனின் ஆளும் La République En Marche கட்சி முக்கிய நகரங்கள் எதனையும் நெருங்கவில்லை. இரண்டு சுற்றிலும் அக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

முழுமையான இறுதி முடிவுகள் இன்றிரவு க்குள் எதிர்பார்க்கப்படுகின்றன.

(படம் :பாரிஸ் மேயர் ஆன் ஹிடல்கோ)

28-06-2020
ஞாயிற்றுக்கிழமை.

(குமாரதாஸன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here