நடை பாதைகளை ஆக்கிரமிக்கும் பாரிஸ் உணவகங்கள்!

0
516

பாரிஸ் நகரில் உணவகங்கள் நடைபாதைகளை ஆக்கிரமித்து வெளி இருக்கைப் பகுதிகளை (terraces) விஸ்தரிக்கத் தொடங்கியுள்ளன.

கட்டணம் ஏதும் இன்றி வெளி இருக்கைப் பகுதிகளை விரிவு படுத்திக்கொள்ள உணவக உரிமையாளர்களுக்கு நகரசபை அனுமதி வழங்கி இருக்கிறது. இதனை அடுத்து வெளி இருக்கைகளை விரிவுபடுத்தும் பணிகளை உணவக உரிமையாளர்கள் முழு வீச்சில் ஆரம்பித்துள்ளனர்.

உணவகங்களின் முன்புறங்களில் நடைபாதைகளிலும் தரிப்பிடங்களிலும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாத விதமாக உரிய இடைவெளிகளில் இருக்கைகளைப் போட்டு உணவு பரிமாற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விசேட அனுமதி எதிர்வரும் செப்ரெம்பர் 30 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று பாரிஸ் நகர முதல்வர் அறிவித்துள்ளார்.

வெளி இருக்கை(terraces) வசதி இல்லாத உணவகங்களும் அருந்தகங்களும் கூட தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நடை பாதை ஓரங்களில் இருக்கைகளை போடத் தொடங்கியுள்ளன.

பொதுவாக இவ்வாறு வெளியில் இருக்கைகளைப் போடுவதாயின் நகர சபையின் அனுமதி பெற்று அதற்கான வாடகை செலுத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.ஆனால் தற்போதைய வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு உணவகங்களை ஊக்கப்படுத்த இந்த சலுகையை நகரசபை வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உணவகங்கள் ஜூன் 2 ஆம் திகதி முதல் முழு அளவில் திறக்கப்படுகின்றன. ஆனால் பாரிஸ் பிராந்தியத்தில் மட்டும் அவை வெளி இருக்கைகளில் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து பாரிஸ் நகரில் சுமார் 18 ஆயிரம் உணவகங்களும் (restaurants) அருந்தகங்களும் ( bars, cafes) கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தொழில் இழந்துள்ளனர். இவர்களில் கணிசமானோர் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவர்.

படம் :பரிஷியன்.

30-05-2020

(குமாரதாஸன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here