சவப்பெட்டி கூட தேவைப்படாத எங்கள் வாழ்வு…!

0
828

நாங்கள் மாத்தளன்…சாள்ஸ் மண்டபத்திற்கு பின்பக்கம்
கிளியண்ணையின் காணிக்குள் தான் இருந்தோம் ..கூடவே வெள்ளை…குலஸ்.
( பங்குனி மாத கடைசியில் ) ஒருநாள் காலை வேலை
எங்கள் காவலரணுக்கு வந்த எனது நண்பன் முதல்நாள் ஓர் உடைப்பு சமரில் (கேப்பாப்புளவு பகுதி ) இராணுவத்தினரிடம் இருந்து எடுத்ததாக கூறி ஒரு தொகை பனடோலும்…குளொக்ஸ்சசிலின் ( காயத்துக்கு கொடுப்பது ) தந்தான்.

அப்போது அங்கு பெரும் தட்டுப்பானது அவை இரண்டும்
அங்கிருந்த சக போராளிகளுக்கு பகிர்ந்தளித்துவிட்டு…எனது பங்கினை யசோவுக்கு என எடுத்துவைத்தேன். வேலையும் வந்தது..வேலை முடித்து இடையில் மாத்தளன் வந்தேன்.

வழமையாக காலையில் 7.00 மணியிலிருந்து 9.00–10.00
மணிவரை அனைவரும் …மக்கள் கூட கவனமாக இருப்பர். அது தான் சண்டை இல்லாட்டிலும்…ஷெல்
அடிக்கிற நேரம். அன்றும் அப்படித்தான் குடிமனைகள் நோக்கி ஷெல் அடித்து ஓய்ந்திருந்த நேரம்…

அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. அப்போது தான்
மதிய உணவினை தேட தொடங்குவார்கள் …அப்படித்தான் எங்கள் கொட்டிலின் முன் வீதியின் மறு பக்கம் ஓா் குடும்பம் . பங்கரில் தனது இரு மகள்களை
இருக்கச்சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த தென்னை மரத்தின் மறைவில் இருந்த அடுப்பினை மூட்டி பிள்ளைகளுக்கு சமைக்கத்தொடங்கியிருந்தார்…
திடீரென குண்டுமழை…
ஆமி ஷெல்அடிக்க தொடங்கிவிட்டான்…
எல்லாரும் பதுங்கு குழி தேடி ஓடினர் ..பிள்ளைகள் தாயை தேடினர்..அவள் பக்கத்து குழிக்குள் இருப்பாள் என தன் பிள்ளைகளை சமாதானப்படுத்தினாராம்…

குண்டுமழை ஓய்ந்தது…
அவலக்குரல்களும்….அலறல்களும்
அதிகரித்துக்கொண்டிருந்தது.
பதுங்கு குழியிலிருந்து வெளிவந்த கணவன் தன் மனைவியை தேடினார்..
அங்கே மரத்தின் அடியில் பிள்ளைகளுக்காய் சமைக்கபோனவள்….எறிகணையில்
சிதைந்து போயிருந்தாள்..
அப்போதுதான் நானும் வாசலுக்கு வந்து சேர்ந்தேன்…
அந்த தாயின் தலைப்பகுதியும்…கால்களும் அவள் அணிந்திருந்த சேலை யின் கிளிசல்களுமே மிஞ்சியிருந்தது.
‘யாராவது வாங்கோ ‘ என்று அழைத்ததற்கு நானும்…கிளிஅண்ணையின் மகனும் உதவிக்கு சென்றோம்.
அருகிலிருந்த கிளிந்த தர்ப்பால் துண்டில் எல்லாவற்றையும்
அள்ளிப் போட்டு சுற்றிக் கட்டினார்..
அருகில் இருந்த கடற்கரைக்கு சென்று .சிறு பலகை கொண்டு மண்ணை கிளறி (இரண்டடி கிண்டினால் போதும்) மூட்டையை போட்டு மூடினார் .வீடு திரும்பினார்.இது தான் அப்போதய அங்கிருந்த வாழ்க்கை
அழுவதற்கு நேரமில்லை…அடுத்த ஷெல் வரலாம்
மிச்சமிருப்பவரை பாதுகாக்க வேண்டும்.

வீடு வந்த அவர் .தன் மகள்மாரை எனது கொட்டிலின் பக்கத்திலிருந்த கொட்டிலுக்கு அழைத்து வந்தார்.அது அவரது சகோதரியின் கொட்டில். இன்னும் தங்கள் தாயை காணாத பிள்ளைகள்
‘அப்பா..அம்மா எங்கே’ என்றனர்.
“அம்மா செத்திட்டா….கொண்டுபோய் தாட்டிட்டம்”
என்றவர் அப்போது தான் வீறிட்டு கத்தியழுதார்..

கு. கரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here