மீண்டும் தொடங்கும் இலக்கு நோக்கிய பயணம் – ஈழமுரசு

0
144

eelamurazu-21-225x300ஈழமுரசு இதழ் மீண்டும் உங்கள் கைகளை வந்தடைந் ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். கடந்த செப்டெம்பர் மாதம் ஊடக இல்லத்தின் மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதல் முயற்சியை அடுத்து அதனை இடை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

சுமார் 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்த ஈழமுரசு இதழை, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேர ழிப்பின் பின்னர் தடுத்து நிறுத்துவதற்கு பல்வேறு வகையிலும் சிங்களப் பேரினவாத அரசின் எல்லை கடந்து நீளும் பயங்க ரவாதக் கரங்களும், தமிழ்த் தேசியத்தை அழிக்க முனையும் சக்திகளும் கூட்டுச் சேர்ந்து முயற்சி எடுத்துவந்தன. ஆனால் அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி வெளிவந்துகொண்டிருந்த ஈழமுரசு இதழ் கடந்த செப்டெம்பர் மாதம் ஊடக இல்ல ஊடகவியலாளர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியையும் அதன் பின்னர் ஊடகஇல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் பயங்கரவாத அச்சுறுத்தல் களையும் அடுத்து இடை நிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்த அச்சுறுத்தலின் பின்னால் இருக்கும் சக்திகளைக் கண்டுபிடிக்க பிரெஞ்சுக் காவல்துறையின் உதவியை நாடியி ருந்தோம். பிரெஞ்சுக் காவல்துறையினர் குற்றவாளியைக் கண்டுபிடித்து, நீதிமன்றில் நிறுத்தி தண்டனையை வாங்கிக் கொடுக்க ஆண்டுகள் பல ஆகும். இதனால் ஈழமுரசு மீண்டும் வெளிவருவது சாத்தியமற்றுப்போகும் என்று சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர். அத்துடன், பொருளாதார நெருக்கடியால் மூடப்பட்டுள்ளது என்றும், உள்வீட்டு முரண்பாடுகளால் மூடப்பட்டுள்ளது என்றும் பொய் வதந்திகளை சிலர் பரப்பிக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில், ஊடகஇல்ல நடவடிக் கையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு பிரெஞ்சுக் காவல்துறையினர் காட்டிய வேகமும், குற்ற வாளியைச் சில நாட்களிலேயே கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக்கொடுத்ததும் எமக்குப் பெரும் மகிழ் வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இரவு பகல் பாராது இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பிரெஞ்சுக் காவல் துறையினருக்கு எமது நன்றியையும், பாராட்டுதல்களையும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். அத்துடன், விசாரணைகளின் போது, ஈழமுரசு மீண்டும் வெளிவரவேண்டும் என்பதை வலியுறுத்திய காவல்துறையினர் அதற்கான பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் கூறியிருந்தனர். அதற்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேவேளை, எத்தனையோ ஆயிரம் குற்றங்கள் இன் னமும் விசாரணைக்காக நிலுவையில் காத்திருக்கும் நிலை யில், ஈழமுரசுக்கு எதிரான நடவடிக்கை விசாரணையை துரிதமாகக் கையிலெடுத்து விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிக்குத் தண்டனையையும் வழங்கிய பொபினி நீதிமன்ற நீதியாளர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓர் அச்சு ஊடகத்தை இடைநிறுத்திவிட்டு அதனை மீள ஆரம்பிப்பதென்பது இலத்திரனியல் ஊடக வளர்ச்சி உச்சத்தைத் தொட்டுவிட்ட இந்தக் காலத்தில் அத்தனை இலகுவானதல்ல. அதற்கான சட்ட அங்கீகாரத்தை, பொரு ளாதாரத்தை ஈடுகட் டும் பலத்தை மீண்டும் பெறவேண்டும். சட்ட ரீதியான அங்கீகாரத்தைப் பெற்றுவிட்ட நிலையில், ஈழமுரசுக்கு ஆதரவுதந்த வர்த்தகப் பெருந்தகைகள் மீண்டும் தங்கள் ஆதரவை வழங்குவார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எமக்கிருந்தது. இருந்த அலுவலகத்தையும் இழந் துவிட்டு வெற்று வெளியில் நின்றே இப்போது எமது பயணத் தைத் தொடங்குகின்றோம். இந்தப் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க உடனடியாகவே முன்வந்த அனைத்து வர்த்தகர்களையும் ஆதரவாளர்களையும் நன்றியுடன் பற்றிக் கொள்கின்றோம். அதேவேளை, ஈழமுரசு இடைநிறுத்தப் பட்டதன் பின்னர் அதனை வெளிக்கொண்டு வரவேண்டும் என பல்வேறு வகையிலும் எம்மை வலியுறுத்திவந்த உள்ளங்க ளுக்கும் இந்த வேளையில் நாம் நன்றி கூறுகின்றோம்.

தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவு நாட்களில் உங்களிடம் இருந்து இடைவிலகிய நாம், இன்று 21ம் நூற்றாண்டின் முதல் மிகப்பெரும் இனப்படுகொலையான முள்ளிவாய்க்கால் படுகொலையின் 6வது ஆண்டு நினைவு நாளில் மீண்டும் வெளிவருகின்றோம். அடக்குமுறைகள் தொடரும் வரைக்கும் விடுதலைக்கான போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அந்த விடுதலையைப் பெறும் வரைக்கும் இலக்குநோக்கிய பயணம் நிற்காது. எனவே, இது முடிவல்ல. தற்காலிக ஓர் இடைவிலகலே… என்று கூறியிருந்த நாம், மீண்டும் எமது பயணத்தைத் தொடங்கியிருக்கின்றோம்.

ஊடக இல்லம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றவாளி அனைத்துக் குற்றங்களையும் தன்மீது போட்டுக்கொண்டு மற்றையவர்களைத் தப்பிக்க வைக்க முனைந்தாலும், அது ஒரு வெறும் அம்புதான் என்பதை நாம் அறிவோம். எனவே, இந்தப் பயணமும் பெரும் தடைக ளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும் மக்களுக்கு உண்மைகளைச் சொல்லிக் கொண்டிருப்பதில் இருந்து நாமும் ஓயப்போவ தில்லை.

– ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம் (15 மே – 31 மே 2015)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here