
கிழக்கில் தமிழரின் குருதியை கூட்டாக குடித்த சிங்களஇராணுவமும் முஸ்லிம் ஆயுதகுழுவும் அழித்த படுகொலை!
இன்றைய நாள் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை சிறுபான்மை இனம் மீதான படுகொலை செய்ததில் கொலையாளிகளுக்கு இதுவரை சர்வதேசம், நீதித்துறை எந்தவிதத்திலும் தண்டித்ததும் இல்லை தமிழர் எப்பொழுதும் மற்றயவர் உரிமைகளை நசுக்குவதில் உடன்பாடற்ற சமூகம் என்பதால் என்னவோ தமிழினத்தை கொலை செய்வதில் மற்றைய இரு இனங்கள் தமிழின கொலையை பார்த்து சந்தோசம் அடைந்தார்கள்.
1987ஆம் ஆண்டு பேரினவாத அரசாங்கங்களால் நடைபெற்ற கொலைக்கு தண்டனை வழங்கப்பட்டு இருந்தால் அதன் பின்னான 2009 முள்ளிவாய்க்கல் இனவழிப்பு வரை தொடர்ந்திருக்காது.

கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய இன்றைய நினைவு தினப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 33 வருடங்கள் ஆகிவிட்டன.
கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும்.
கொக்கட்டிப் பிரதேசமே குருதியில் நனைந்த கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பு இறால்பண்ணை படுகொலை என்றும் நினைவுகூறப்படுகிறது. சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் திட்டமிட்ட அன அழிப்பு நடவடிக்கைளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒரு குரூரமாகும்.

1987ஆம் ஆண்டில் தை 28,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் சிறிலங்கா அரசின் விசேட அதிரடிப்படைகள் நடத்திய கோர இனப்படுகொலை அதுவாகும். கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் உள்ள கிராமங்களே இரத்ததினால் உறைந்த அந்தப் படுகொலையில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே காணாமல் போயினர். கொக்கட்டிச்சோலைக் கிராமங்களை சிறிலங்கா அரசின் விசேட படைகள் சுற்றி வளைக்க வான் வழியாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மண்முனைத்துறைக்கும் மகிழடித் தீவுக்கும் இடையில் உள்ள இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்ளைத்தான் முதலில் படுகொலை செய்தனர் அதிரடிப்படையினர். அன்று இறால் பண்ணையே இரத்தப் பண்ணையாக மாறியது என்று எழுதுகிறார் மணலாறு விஜயன். அந்த மக்களை கைது செய்து தமது துப்பாக்கிளால் சுட்டு வெறிதீர்த்த பின் ரயரிட்டு எரித்து தமது இனவெறியை தீர்த்துக் கொண்டனர் அதிரடிப்படையினர்.

இறால் பண்ணையில் தொடங்கிய இரத்தவேட்டை தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை என்று தொடர்ந்தது. பிரதேசத்தின் கிராமங்களை சுற்றி வளைத்த அதிரடிப்படையினர் எதிரில் வந்தவர்கள் எல்லோரையும் வெட்டி வீசினர். கிராமம் அல்லோலகல்லோலமானது. படகுகளில் தப்பிச் சென்ற அப்பாவி மக்களை வான்வழியாக துரத்தித் துரத்தி சுட்டுக்கொன்றழித்தனர்.
வீட்டுக்கு வீடு மரணம். கொன்றழிக்கப்பட்டவர்கள் எல்லாம் உறவினர்கள். ஒரு வீட்டில் பலர் கொலை. குடும்பம் குடும்பாக கொன்றொழிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலை எளிதில் மறக்கவோ எளிதில் ஆறவோ முடியாத பெரும் காயமாக நிகழ்ந்தது. ஒரு சிலரை தவிர அத்தனை பேரையும் அழித்தனர் சிறிலங்கா அதிரடிப்படையினர்.
பலரை சிறைப்பிடித்த அதிரடிப்படையினர் அவர்களை மிகவும் மோசமாக சித்திரவதை செய்து துடிதுடிக்க கொன்று போட்ட கொடூரச் செயல்களை உயிர் தப்பிய சிலரது வாக்குமூலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படுகொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் அனைத்தையும் தடயம் தெரியாமல் அதிரடிப்படையினர் அழித்தனர்.
கொக்கட்டிச்சோலைப்படுகொலை நடந்தேறி இன்றைக்கு 33 வருடங்கள் கழிந்துவிட்டன என்று கூறுவதைவிடவும் அந்தக் கொடூரப் படுகொலைக்காய் நீதிக்கு காத்திருந்து 33 வருடங்கள் என்று கூறலாம். ஈழத்தில் தமிழ் இனத்திற்கு எதிராக நடந்த இன அழிப்புப் படுகொலைகள் பலவும் விசாரணை நடக்கிறது என்றும் விசாரணை இல்லை என்றும் இழுத்தபடிப்பதைப் போல இலங்கை அரசுகள் கொக்கட்டிச்சோலைப் படுகொலையையும் கடந்து 33 வருடங்கள்.
கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் சர்வதேள அளவில் இலங்கை அரசின் இன அழிப்பு முகத்தை அம்பலம் செய்தது. மாமனிதர் யோசப் பரராசசிங்கம் இந்தப் படுகொலைக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் எழுப்பி கவனப்படுத்தினார். அவரது கடுமையான முயற்சியினால் இப்படுகொலை குறித்து சர்வதேச அரங்கில் அதிகம் பேசப்பட்டது. அதனாலேயே ஜே.ஆர். அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.
யோசப் பரராசசிங்கம் அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்.

படையினர் பொறுப்பின்றி நடந்து அப்பாவிகளை பலியாக காரணமாக இருந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னபோதும் அந்த அறிக்கையுடன் கொக்கட்டிச்சோலைப் படுகொலை விவகாரத்தை அன்றைய இலங்கை அரசு மறைக்க முனைந்தது. படைகளைகளுக்கு தண்டனையை ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரை செய்ய ஜே.ஆர். அரசு அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கி வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்து இனழிப்பு படுகொலைகளை ஊக்குவித்தது.
கொக்கட்டிச்சோலைப் படுகொலையை மட்டக்களப்பில் மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழமும் சர்வதேச அளவிலும் நினைவுகூரல் நிகழ்வுகள் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெறுகின்றது. அத்துடன் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனையும் இடம்பெறுகிறது.
மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத் தமிழ் மக்களை துடைத்தெறிந்து அந்த மண்ணை அபகரிப்பதற்காகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஓர் அரசியல் நோக்கம் கருதிய இராணுவ நடவடிக்கையே கொக்கட்டிச்சோலைப் படுகொலை. மிகவும் நன்கு திட்டமிட்ட இன அழிப்பாக அன்றைய அரசால் தனது படை எந்திரத்தின் மூலம் நடாத்தப்பட்ட கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் ஆறாத காயமாக நிலைத்துவிட்டது.
உலங்கு வானூர்தி
சத்தம் கேட்டு
ஒன்று சேர்ந்த நாள்!
குருதி படியவைத்து
மண்ணீரும் செந்நீராய்
மாறிய நாள்!
கனவிலேனும் கண்டிராத
கொடுமையான
கரிநாள்!
நூற்றுக்கும் மேற்பட்டவரை
கொலை செய்த
நாள்!
தஞ்சம் புகுந்தோரை
பூதவுடலாக்கிய
கொடுநாள்!
கும்பிட்ட கையை
காலால் உதைத்த
நாள்!
வெள்ளை வேட்டி கட்டி வந்தவரை
கவசவாகனத்தால் அடித்து
கொன்ற நாள்!
குரவளையை குரடு கொண்டு
நசுக்கி உயிரை
குடித்த நாள்!
துப்பாக்கியால் சுட்டவேளை
குருதி நிலத்தில்
குழிதோன்றிய நாள்!
நாலுபேராய் வாருங்கோ
கண்ண முளியுங்கோ – பல
நான்கு சத்தம் கேட்ட நாள்!
சொந்த உறவின் பூதவுடல் மேல்
ஏறவைத்து உயிரை
பலியெடுத்த நாள்!
இறாலை காவல் காத்த
சிறுவனையும்
காவெடுத்த நாள்!
அப்பன், மகன், மருகமகன் – என்று
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும்
பலியெடுத்த நாள்!
ஒரு பிரதேசமே
மானிடத்தினை இழந்து
மாண்டநாள்!
பலியெடுத்த உடலை உழவு இயந்திரத்தில்
தேடாக்கயிறால் கட்டிக்
கொண்டுபோன நாள்!
இன்றைக்கும் தம் உறவுகளின்
உடல் எங்கே – என்று
தெரியாதநாள்!
பெண்கள் பலரின்
நெற்றியில் இருந்து குங்குமம்
இறங்கிய நாள்!
சம்பவத்தை நேரில் கண்டு
சுயநினைவை – பலர்
இழந்தநாள்!
ஊரெல்லாம்
ஓலமிட்ட
நாள்!
மக்கள் மனதை
விட்ட அகலாத
கொடுமைநாள்!
சர்வதேசம் வரை
பெயர் போன
நாள்!
தீர்வொன்றும் கிடைக்காத
மன நீதியற்ற
நாள்!
அந்நாள்!
கொக்கட்டிச்சோலை
படுகொலை நாள்!