சிங்களப் பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட தொடர்ச்சியான தமிழினவழிப்பு நடவடிக்கைகளின் அதியுச்சம் பெற்ற இனவழிப்பு நாள் மே 18 ஆகும்.
இலங்கைத்தீவினை சிங்களவருக்கு மட்டுமேயுரிய சிங்கள பௌத்த நாடாக்கும் மகாவம்சப் பேரினவாத இனவெறிச் சிந்தனைகளில் ஊறித்திளைத்திருக்கும் சிங்கள தேசம் இலங்கைத்தீவிலிருந்து தமிழர்களை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கம் வேலையைக் காலம் காலமாகச் செய்து வருகின்றது. இதற்குப் பல நயவஞ்சகச் சூழ்ச்சி வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. அதிலொன்றுதான் தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக முத்திரை குத்தி வல்லாதிக்க சக்திகளின் துணையோடு இலட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்றொழித்துத் தனது பேரவாவினை நிறைவேற்றியுள்ளது.
முள்ளிவாய்க்காலோடும் முற்றுப்பெறாத இனவழிப்பு நடடிக்கை இன்னும் தொடர்ந்து வருகிறது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழினவழிப்புப் போரின் இரத்த ஆறு ஓடி ஆறு ஆண்டுகளாகிவிட்டன. தீராத பெருவலியின் நினைவுகள் எம்மைத் தினமும் உயிருடனேயே கொன்று கொண்டிருக்கின்றன. நடந்தவை வெறும் கனவுகளாக இருந்துவிக்கூடாதா? என்ற ஏக்கமும் பரிதவிப்பும் எம்மை அலைக்கழிக்கின்றன. ஆயினும் உண்மையை ஏற்றுக்கொண்டும் துயரத்திலும் கழிவிரக்கத்திலும் நாம் தேங்கி நின்றுவிடாமல் முன்னோக்கி நகர்ந்தேயாக வேண்டும் என்று போராளிகளினதும் மக்களினதும் தீரச்செயல்களும் தியாகங்களும் நமக்கு வழிகாட்டுகின்றன.
காலனியாதிக்கவாதிகள் இலங்கைத்தீவினைவிட்டு வெளியேறிய காலத்திலிருந்து, நாம் எமது உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். அமைதிவழி முயற்சிகள் அத்தனையும் தோற்றுப்போக தமிழர்க்குத் தலைமையேற்று நின்ற தமிழ்த்தலைவர்கள் ஒன்று சேர்ந்து தனித்தமிழீழத் தனயரசே ஒரே வழியென வரலாற்று முக்கியத்துவம்மிக்கத் தீர்மானத்தை இன்றைய நாளிலேயே (14/05/1976) நிறைவேற்றியிருந்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முள்ளிவாய்க்காலில் புதைத்துவிட்டதாக போரின் முடிவில் சிங்களம் எள்ளிநகையாடியதை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம்!
தமிழரின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் மே மாதம் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது என்பதை நாம் மறந்துவிக்கூடாது. எங்கு நாம் வீழ்ந்தோமோ அங்கிருந்தே நாம் மீண்டெழ வேண்டும்.
எம்மீது விழுந்த ஒவ்வொரு அடியும் எம் இலடசியத்தின் மீது உரமேற்றட்டும்! நாம் அடைகாக்கும் அமைதியுனுள்ளே விடுதலையின் தணல்கள் கொழுந்துவிட்டுப் பற்றிக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கட்டும்.
எமது விடுதலைப்போராட்டம் அனைத்துலக நியமங்களுக்கு உட்பட்டதும் ஏற்றுக்கொள்ள வேண்டியதுமான ஓர் உண்மையான போராட்டமாகும். எமது சுதந்திர இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழரின் அரசியல் வாழ்வுரிமைப் போராட்டத்திற்குத் தலைமையேற்றிருந்தார்கள். சிங்களதேசமும் உலகமும் இந்த உண்மையை நன்கே உணர்ந்துள்ளன. அண்மையில் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கான காரணத்தைக்கூறும்போது ‘தமக்கு விடிவு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த போரட்டத்தை அழித்த என்னை அவர்கள் எப்படி மன்னிப்பார்கள?; ” என்று கூறினார்.
எமது போராட்டத்ததின் நியாயப்பாட்டை எதிரியும் உணர்ந்துள்ளான். எதிரியை மட்டுமல்ல சிங்களத்தோடு உறவாடி தழிழர் நலனை விலைபேசி விற்றுவரும் நம்மினத்தில் பிறந்த ஈனப்பிறவிகளான துரோகிகளையும் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.
மே 18, இன்னூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட நாள்.
தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சிறைக்கம்பிகளை எண்ணாமல் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இனவழிப்பை மேற்கொண்ட சிங்களப்படையினரில் கைகளிலேயே தமிழரின் பாதுகாப்பு உள்ளது. தண்டனைபெறாத, தவறை உணராத கொலைவெறியர்கள் இன்னொரு தடவை இனவழிப்ழிப்பை மேற்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?
சர்வதேச விசாரணைக்கூண்டில் இவர்களை நாம் ஏற்றியே ஆகவேண்டும். எமக்கான நீதியை நாம் பெற்றே ஆகவேண்டும். எமக்கான விடிவும் அதன் தொடர்ச்சியாகவே வந்து சேரும்!
அன்பான உறவுகளே ! மே 18 இனவழிப்புநாள் நினைவேந்தலில் அனைவரையும் பங்கேற்குமாறு அன்போடு வேண்டிநிற்கின்றோம்.
தாயகத்தில் படையினரின் அச்சுறுத்தல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மத்தியலேயே எமது உறவுகள் இந்நிகழ்வுகளை அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளை நினைவுகூர்வது அரசினால் தடைசெய்யப்பட்டுள்ளது. எமது அன்பிற்குரிய போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வது எமது உரிமை! எமது கடமை! இனவழிப்பின் மூலமும் தோற்கடிக்கப்பட முடியாத நமது இலட்சிப்பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறுவோம்!
ஊடகப்பிரிவு
:பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை