எங்கள் செயல் திட்டங்கள் எங்ஙனம் உள்ளதென்று அறிக!

0
461

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்ற திருக்குறளை ஒரு கூட்டத்தில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.

இதன்போது கூட்டத்தில் இருந்த அன்பர் ஒருவர் எழுந்து பேராசிரியர் அவர்களே! மெய்ப் பொருள் காண்பது அறிவா? அனுபவமா? என்ற தர்க்கத்தை எழுப்புகிறார்.

மெய்ப்பொருள் காண்பதில் அனுபவத்துக்கும் இடமுண்டாயினும் அறிவுதான் மெய்ப் பொருளைக் கண்டறியவல்லது என்பதாக பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் கருத் துரை அமைகிறது.

இஃது ஒரு காலத்தில் இப்படியான அறிவார்ந்த தர்க்கிப்புகள் இருந்தன என்பதைக் கூறுவதற்கானது மட்டுமே.

இவை ஒருபுறமிருக்க, அறிவும் அனுபவமும் ஒன்றுசேரும் போதுதான் எந்தச் செயற் றிட்டமும் வெற்றி தரும்.

தனித்து புத்தக அறிவோடு செயற்றிட்டங்களை அமுலாக்க நினைத்தால், செய்த வேலையை மீளச் செய்ய வேண்டி வரும்.

உதாரணத்துக்கு மழை காலத்தில் எங்கள் குடாநாட்டின் தற்போதைய நிலைமையை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

இப்போதெல்லாம் வீதி எங்கும் மழை நீர் வெள்ளக்காடாய் தேங்கி நிற்கிறது.

அதிலும் வீதியின் வளைவுகள், சந்திகளில் இந்நிலைமை படுமோசம் எனலாம்.

காபற் வீதிகள், குச்சொழுங்கைப் புனரமைப்புகள், தார் வீதிகள் என எங்கும் வீதிப் புனர மைப்புகள் நடந்து முடிய இப்போது வீதியெல்லாம் வெள்ளம் என்றால் எங்களின் திட்டமிடல்களில் கடும் தவறுகள் உண்டென்பது உணர்தற்குரியது.

அண்மையில் திருநெல்வேலியில் வதியும் அன்பர் ஒருவர் வலம்புரி அலுவலகத்துக்கு வந்தார்.

அவர் வதியும் ஒழுங்கையை கொங்கிறீற் வீதியாக மாற்றிய பின்பு அந்த ஒழுங்கை முழு வதும் வெள்ளமாக ஆகிவிட்டது.

குறித்த ஒழுங்கையை கொங்கிறீற் வீதியாக மாற்றுவதற்கு முன்பாக, உங்கள் புனர மைப்பு முறைமையால் வெள்ளம் தேங்கும் நிலைமை ஏற்படும் என்பதைத் தாம் எடுத்துக் கூறியபோதிலும் நல்லூர் பிரதேச சபையானது எல்லாம் தமக்குத் தெரியும் என்பது போல நடந்து கொண்டது.

இப்போது அந்த ஒழுங்கையால் போகவே முடியவில்லை என்பதை புகைப்படங்கள், வீடி யோக்களின் ஆதாரம் கொண்டு விளக்கினார்.

என்ன செய்வது அந்தந்த இடங்களில் வதிபவர்களின் கருத்துக்களையும் செவிமடுத்து, மூத்தவர்களின் அனுபவங்களையும் உள்வாங்கிக்கொண்டு செயற்றிட்டங்களை மேற் கொள்ளாமல் எழுந்தமானமாக வீதிப்புனரமைப்பைச் செய்துவிட; வீதியயங்கும் வெள்ளக் காடாகக் கிடக்கிறது.

இது ஒன்றுபோதும் எங்கள் திட்டமிடல்களின் சிறப்பைப் புரிந்து கொள்வதற்கு.

எனவே இப்போது எங்கெல்லாம் வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறதோ அவற்றை கண் டறிந்து அதற்கேற்ற நடவடிக்கை எடுங்கள். 

(வலம்புரி-ஆசிரியர் தலையங்கம் 03.11.2019)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here