தமிழீழ விடுதலைப் போராளிகளின் அன்புத்தாய் ‘வாகரை அம்மா’ காலமானர்!

0
631

வன்னியில் இருந்து காட்டுவழியாக பல நாட்கள் பயணம் செய்து பசி, தாகத்தோடு கிழக்கிற்கு வரும் போராளிகளுக்கு ஒரு வாய் தண்ணீரோ அல்லது ஒரு பருக்கைச் சோறோ வழங்கும் ஒரு தமிழ் தாய் அவர்.

எதிரிகள், துரோகிகள், போட்டிக் குழுக்கள் என்று அத்தனை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், ‘பசிக்கிறது..” என்று யார் வந்தாலும், குறிப்பாக பசியுடன் வரும் அத்தனை போராளிகளுக்கும் பாசத்தோடு ஆதரவு அளித்துவந்த அந்த தாய் இன்றையதினம் காலமாகிவிட்டார்.

1986 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியாக இருந்தாலும் சரி அதற்கு பிற்பட்ட காலப்பகுதியாக இருந்தாலும் சரி அனைத்திலுமே “வாகரை அம்மா” என்ற அந்த வீரத்தாய் விடுதலை போராட்டத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்புடன் இருந்துள்ளார்.

திருகோணமலை மாவட்டம், திருகோணமலை போராளிகளின் ஆளுகைக்குள் இருந்தபோது பல போராளிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் உள்ள வாகரை அம்மாவின் வீட்டியேயே தங்குவார்கள்.

சண்டை முடித்து திரும்பிவரும் போராளிகள் “வாகரை அம்மா வீட்டிற்கு சென்று ரொட்டி, மீன் சொதியுடன் சாப்பிடோணும்” என்ற ஆசை இருப்பதாக போராளிகள் கூறும் அளவிற்கு போராளிகளுடடைய மனங்களில் ஒன்றிப்போயிருந்த ஒருவர்தான் இந்த வாகரை அம்மா.

விடுதலை போராட்டத்திலும் போராளிகளிலும் அதீத ஈர்ப்புடைய வாகரை அம்மா நோய் வாய்ப்பட்டு நம்மை விட்டு பிரிந்தது ஒரு பெரும் இழப்பே.

ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு தனது கையால் உணவளித்த வாகரை அம்மா இன்று நம்மை விட்டு பிரிந்துள்ளார்.

தனது மூன்று பிள்ளைகளை இராணுவத்தின் மூலம் பறிகொடுத்த பின்னரும் வாகரை அம்மா தனது எண்ணத்தில் இருந்து பின்வாங்காமல் போராட்டத்தின் மீது தனது அதீத பற்றை வெளிப்படுத்தி ஆயிரக்கணக்கான போராளிகளைத் தனது பிள்ளைகளாக நினைத்து வாழ்ந்துவந்த ஒருவர்.

தனது நான்காவது மகன் போராட்டத்தில் இணைந்ததபோதும், அதனை மனப்பூர்வமாக ஏற்று, தொடர்ந்தும் போராட்டத்திற்கு பல வழிகளிலும் உதவிசெய்துவந்துள்ளார்.

போராட்டத்தின் போது இடுப்பில் வெடி பட்டு இடுப்பிற்கு கீழ் இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டு தற்போதும் இடுப்பின் கீழ் இயங்காத நிலையில் தாயுடன் வாழ்ந்து வந்த அந்த முன்நாள் போராளி, இன்று மரணமடைந்த தனது தாய் பற்றிக் குறிப்பிடும் போது,

தமது பிள்ளைகளுக்கு உணவு இல்லாட்டிலும் போராளிகளுக்கு உணவு அளித்து விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் அவர் நேசித்த விதம் பற்றி பல விடயங்களைப் பகிர்ந்திருந்தார்.

முகம் தெரியாத இதுபோன்ற பல தாய்மாரின் அர்ப்பணிப்புத்தான் போராட்டத்தின் பெரும்பகுதியை தாங்கி நின்றது என்றால் மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here