தமிழீழத் தேசியத் தலைவரால் மதிப்பளிக்கப்பட்ட பன்முகக் கலைஞர் லங்கா சாவடைந்தார்!

0
852

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தமிழகம் சென்னை கொட்டிவாக்கத்தை  தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பன்முகக் கலைஞரான சிற்றம்பலம் இலங்கைநாதன் (லங்கா) அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று தனது 74 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.

இவர் 05.08.1997 அன்று மல்லாகம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடிமோதலில் வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் செல்லக்கிளி (காண்டீபன்) அவர்களினதும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தின் செயற்பாட்டாளரும் அறிவிப்பாளருமான கஜேந்திரன் கவிதா அவர்களினதும் தந்தையார் ஆவார்.

சிற்றம்பலம் இலங்கைநாதன் தமிழீழத்தின் சிறந்த ஓவியராகவும், திரைப்பட, நாடக நடிகராகவும் விளங்கியவர். பல வர்த்தக விளம்பரங்களுக்கும் தனது ஆற்றலைக் காட்டிவந்துள்ளார். ஆரம்ப காலங்களில் யாழில் மணிக்குரல் விளம்பரசேவையிலும் இவருடைய குரல் ஓங்கி ஒலித்துள்ளது. புலிகளின் குரல் வானொலியில் நாடகங்களைத் தயாரித்து அதில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அத்தோடு தனது ஓவியத் திறமையை பத்திரிகைகளிலும் நூல்களின் அட்டைப்படங்களிலும் வெளிப்படுத்தி பலராலும் மதிப்பளிக்கப்பட்டுவந்துள்ளார்.

இவருடைய தமிழீழத் தேசியம் சார்ந்த ஓவியங்கள் மிகவும் பேசப்பட்டவை. அத்தோடு பல குறுப்படங்களையும் தயாரித்து நடித்துள்ளார். இவருடைய பன்முகக் கலைத் திறமைகளைப் பாராட்டிய தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட பதக்கத்தை வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தார். அத்தோடு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும் இவருக்கு மதிப்பளிப்புச் செய்திருந்தார்.

தொடர்ந்து தமிழகம் சென்னைக்குச் சென்ற இவர், தனது நடிப்புத் திறமை, ஓவியத்திறமைகளை மேலும் சிறப்பித்து வந்துள்ளார். தென்னிந்திய சினிமாவிலும் இணைந்து பல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார். இராமேஸ்வரம், பள்ளிக்கூடம், வெள்ளையாய் இருக்கிறவன் பொய்சொல்ல மாட்டான், கருங்காலி, பாரதி, ஒன்பது ரூபா நோட்டு போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளதோடு சில மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். ஆதிஅருணாச்சலம், சிவரகசியம் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் முக்கிய பாத்திரங்களில் நடித்துமுள்ளார். இவருடைய ஓவியங்கள் இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1993 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் நடத்தப்பட்ட தென்கிழக்காசிய சுற்றுச்சூழல் அமைப்பின் இலச்சினை உருவாக்கப் போட்டியில் இவருடைய இலச்சினை ஓவியமே தெரிவாகி அதற்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்.

அத்தோடு, ஓவியக்கலையைப் பல மாணவர்களுக்கு கற்பித்து இன்று அவரது மாணவர்கள் சிறந்த ஓவியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் பல குறுப்படங்களில் நடித்து அவரது நடிப்பாற்றலை மேலும் வெளிப்படுத்தியுள்ளார். தீராக்கதை, கிஸ்ஸா, புலம்ஈழம், 18 தீக்குச்சிகள் போன்ற பல குறும்படங்களில் நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற 12 ஆவது ரொறொன்ரோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ’18 திக்குச்சிகள்” குறும்படம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

2014 ஆம் ஆண்டு 18 தீக்குச்சிகள் குறும்படம் பந்நாட்டு குறும்பட விழாவில் இரண்டாவது இடத்தையும் பாராட்டையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. சென்னை திரைப்பட இசையமைப்பாளர் சங்க அரங்கில் 24.09.2014 அன்று கலகம் அமைப்பினர் நடாத்திய திரைக்கலைஞர்களைப் பாராட்டும் விழாவில் சிறந்த ஈழத்து நடிகர் விருது வழங்கிப் பாராட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு தமிழ் பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் நாட்டுப்பற்றாளர் நாளிற்கு தமிழீழத் தாயவள் அன்னை பூபதி அவர்களின் திருஉருவப்படம் தாங்கிய பிரமாண்டமான பதாதையை வரைந்து கொடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளித் தொலைக் காட்சியின் கிராமிய நடனப்போட்டியான ஊரகப்பேரொளி விருதினை வடிவமைத்துக் கொடுத்துள்ள பெருமையும் இவரையே சாரும். இவ்வாறான பல பெருமைகளுக்கு உரித்தான ஒரு பெரும் பன்முகக் கலைஞனை இந்த தமிழ்த் தேசிய சமூகம் இன்று இழந்துள்ளது. இவரது இழப்பானது இவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல் தமிழ்த் தேசியப் பரப்பில் இட்டுநிரப்பப்படமுடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. – கந்தரதன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here