சீனாவில் நிலநடுக்கம்:12பேர் பலி!

0
369

சீனாவின் தென் மேற்கில் உள்ள சிச்சுவான் மாநிலத்தில் நேர்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12க்கு உயர்ந்துள்ளது. இதில் 134 பேர் காயமடைந்துள்ளனர். சேதமடைந்த கட்டடங்களிலிருந்து மீட்புப் படையினர் உடல்களையும் உயிர்பிழைத்தவர்களையும் மீட்டு வருகின்றனர்.

4,000க்கும் அதிகமானோர் இடம் மாற்றப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம், உள்ளுர் நேரப்படி கடந்த திங்கள் இரவு 11 மணியளவில் நேர்ந்தது. 16 கிலோமீற்றர் ஆழத்தில் அது மையங்கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மண் சரிவை அடுத்து வீதி ஒன்று மண்ணில் மூடப்பட்டு தடைப்பட்டிருக்கும் காட்சிகளை சீன மத்திய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

மீட்பு நடவடிக்கைகளில் 500க்கும் அதிகமான தீயணைப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதோடு 5,000 கூடாரங்கள் மற்றும் 10,000 மடிப்புக் கட்டில்கள் நிறுவப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

நிலநடுக்கம் நேர்ந்த சுமார் முக்கால் மணி நேரத்தில், குறைந்தது 4 முறை, நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்தது. சிச்சுவான் மாநிலம் அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

சீனாவின் வட மேற்கு சங்டு பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,000 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here