கொடிய வரட்சியின் கோரப் பிடியில் அம்பாறை மாவட்டம்!

0
346

அம்பாறை மாவட்டத்தில் கொடிய வரட்சி நீடித்து வருவதால் விவசாயம்வெகுவாகப் பாதிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளதோடு குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பெரும்பாலான வயல்நிலங்களில் பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருகின்றன. வாய்க்கால்கள் நீரின்றி வரண்டு காணப்படுகின்றன.குளம் குட்டைகள் வற்றியுள்ளன. கால்நடைகள் தீவனங்களுக்காக அங்குமிங்கும் அலைகின்றன. நெல்பயிர்கள் ஒரு மாத ஒன்றரை மாத பயிராகவுள்ளன. இந்நிலையில் இந்த வரட்சி ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. நிச்சயம் இலங்கையில் மொத்த நெல்உற்பத்தியில் கணிசமான பாதிப்பை இந்த வரட்சி ஏற்படுத்துமென அஞ்சப்படுகிறது.நாவிதன்வெளியில் வீரச்சோலை பிரதேசம் தண்ணீரின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளிப் பகுதியிலுள்ள வாய்க்கால்கள் தண்ணீரின்றி வரண்டுள்ளன.

பார்க்குமிடமெல்லாம் பச்சைப்பசேலென்று காணப்படும் பிரதேசங்கள் தற்போது மஞ்சள் நிறமாகி வரண்டு காணப்படுகின்றன. பகலில் தாங்க முடியாத வெப்பம் நிலவுகின்றது. குழந்தைகள் முதல் வயோதிபர் வரை காய்ச்சல், தடிமன் என பலவகை நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

வீதிகளில் தாகம் தீர்க்கும் பழவகைகளின் அங்காடிக் கடைகள் அதிகரித்து வருகின்றன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 11381 குடும்பங்களைச் சேர்ந்த 39421 பேர் இதுவரை வரட்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

நெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பை செலுத்தி வரும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் 2649 குடும்பங்களைச் சேர்ந்த 8329 பேரும், திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரும், பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 3738 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1078 குடும்பங்களைச் சேர்ந்த 3577 பேரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும், மஹாஓயா பிரதேசத்தில் 1574 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேரும், அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேரும்,பதியத்தலாவ பிரதேசத்தில் 3168 குடும்பங்களைச் சேர்ந்த 11282 பேரும், தமன பிரதேசத்தில் 531 குடும்பங்களைச் சேர்ந்த 2124 பேரும், உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 145 நபர்களும்,தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 690 குடும்பங்களைச் சேர்ந்த 2570 பேரும் அம்பாறை மாவட்டத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீரை பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதும் மேலதிக தேவைகளுக்கான நீரை பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை மேற்குப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வீதியெங்கும் தண்ணீர் கொள்ளும் பெரிய பாத்திரங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேசங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வரட்சியால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மழை பொய்த்தால் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்க வேண்டி வரலாம்.

குடிநீர்ப் பிரச்சினை ஒருபுறம் தமது பிரதான தொழிலான விவசாயத்தை கைவிடும் நிலை மறுபுறம்… இத்தனைக்கு மத்தியில் மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்.

மாவட்டத்திலுள்ள பெரிய, சிறிய குளங்கள், கால்வாய்கள் வற்றி விட்டன.

அம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீரை வழங்கும் பிரதான நீர்வழங்கு மையமாகத் திகழும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

மொத்தமாக 7இலட்சத்து 70ஆயிரம் ஏக்கர்அடி நீர் கொள்ளளவு கொண்டது இச்சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று குறைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நீர் குறைந்த வேளாண்மைச் செய்கைக்காகவும் குடிநீருக்காகவும் மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும்.தற்போது சிறுபோக நெற்செய்கை ஒரு ஒன்றரை மாதகால பயிராகவுள்ளது. எனினுமும் பல பிரதேசங்களில் நீரின்றிஅவை மஞ்சள் நிறமாக மாறி வருகின்றன.

வரட்சி தொடர்ந்தால் நீர்த் தட்டுப்பாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளது. இன்றைய வரட்சிநிலை நீடித்தால் சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதி வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றும் என நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here