நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்கள் தமிழ்வேங்கை என மதிப்பளிப்பு!

0
438

பிரான்சைத்  தலைமையகமாகக் கொண்ட தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தையும்    எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்பற்றாளர் சின்னத்துரை கமலநாதன் அவர்களின் ஆதன் இறை நிழலில் அமைதியுறும் இறுதி நிகழ்வு   18.03.2019 அன்று யேர்மனியில் அவர் வாழ்ந்த சிற்றூரில்   நடைபெற்றது.

மாலை 16.00 மணியளவில் தமிழ்ப்பற்றாளர்கள் அவரது வித்துடலுக்கு வணக்கம் செலுத்தினர். 

  புலம்பெயர் நாடுகளில் வாழும் பல்லாயிரம் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்வியில் அக்கறை கொண்டு அவர்களுக்கான பாடநூல்களை ஆக்கும் பணியில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையுடன் தன்னை முழுமையாகவே இணைத்துச் செயற்பட்டவர்.

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பில் இணைந்துள்ள   நாடுகளுக்குச் சென்று ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை மிகத் திறம்பட நடாத்திப்   பல ஆசிரியர்களை உருவாக்கியவர். 

புலம்பெயர் நாட்டிலே அனைத்துச் சிறார்களின் கைகளிலும் தவழும் வளர்தமிழ்     நூல்கள் அத்தனையும் இவரின்   தலைமையில் ஆக்கப்பட்டவை. அவை மட்டுமல்லாமல் இவரால் ஆக்கப்பட்ட இலக்கியமாணி பட்டப் படிப்புக்கான      நூல்களுள் “நாமார்க்கும் குடியல்லோம்” என்னும் இலக்கிய வரலாற்று நூல் இவரின் சிறந்த படைப்புக்களில் முதன்மையானது.  பல சான்றோர்களின் பாராட்டைப் பெற்றதுடன் இவரால் உருவாக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் மனதையும் கவர்ந்த நூலாகும்.

 தேசியத்தின் மீது அளவு கடந்த பற்றுக் கொண்ட இவர் இறுதிக்காலம் வரை தமிழ்ப்பணியாற்றி   தமிழர்   கல்வி மேம்பாட்டுப் பேரவைக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை தேடித்தந்தவர் .

இவர் தனது காலத்தில் இன விடுதலைக்காக ஆற்றிய பணிகள் பெரு மதிப்புக்குரியவை என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழுக்கான அளப்பரிய பணியை இவர் ஆற்றியதால் தமிழ் வேங்கை  என்ற உயரிய மதிப்பை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை 18.03.2019 அன்று வழங்கி மதிப்பளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here