வேலூரில் 1000 தொண்டர்களுடன் வைகோ கைதாகி விடுவிப்பு!

0
117

vaiko43-600திருப்பதி வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தொழிலாளிகள் சுட்டுக் கொள்ளப்பட்டதைக் கண்டித்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  முற்றுகை போராட்டம் நடத்த வேலூரில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்ட வைகோ தொண்டர்கள் 1000 பேருடன் கைது செய்யப்பட்டார். மாலையில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய காவல்துறை, வைகோ சித்தூர் மாவட்டத்திற்கு செல்வதற்கு தடை விதித்தது. அத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்ட அண்ணா கலையரங்கம் முதல் மக்கான் சிக்னல் வரையிலான சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள், தடுப்பு வேலிகளை நிறுத்தி போக்குவரத்து தடையை ஏற்படுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸôர் ஆர்ப்பாட்ட பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வைகோ 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து சிறிதுநேரம் ஆந்திர மாநில அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பேசிய பிறகு வைகோ உரையாற்றினார். அப்போது அவர் ஆந்திர மாநில அரசின் படுகொலைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தொண்டர்களுடன் அண்ணா சாலையில் நடக்கத் தொடங்கினார். கோட்டை முகப்பு பகுதி அருகே தொண்டர்களுடன் நடந்து வந்த அவரை போலீஸôர் தடுத்து நிறுத்தினர். சித்தூர் செல்வதற்கு வழிவிட வைகோ கேட்டுக் கொண்ட நிலையில், அதற்கான அனுமதியில்லை என கூறிய போலீஸôர் கைது செய்வதாகத் தெரிவித்தனர்.

அதையடுத்து தொண்டர்கள் 600 பேருடன் கைது செய்யப்பட்ட அவர் தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டார். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மத்திய அரசுக்கு கண்டனம்

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியது: 20 தமிழர்களின் படுகொலையில், சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என சொன்னதற்கு காரணம் ஆந்திர மாநில அரசை கண்டிப்பதற்காக. ஆனால் தமிழக போலீஸôர் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. ஆந்திர மாநில போலீஸôர் தடுத்தால் அர்த்தம் உண்டு.

உயிரிழந்த தமிழகத் தொழிலாளர்களின் சடலங்களை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். படுகொலைக்கு காரணமான டிஐஜி காந்தாராவ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்படும் வரை தொடர்ந்து மதிமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபடும்.

தமிழக அரசு உடனடியாக ஆந்திர மாநிலத்தில் சிக்கியுள்ள, காணாமல் போன தமிழர்களை மீட்டு வர வேண்டும். 20 பேர் படுகொலைக்கான நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையுண்ட தொழிலாளர் குடும்பங்களுககு ஆந்திர அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை தேவை.

இப்படுகொலை சம்பவத்தில் மத்திய அரசு மனிதாபிமானம் இன்றி நடந்துகொள்வதற்கு மதிமுக தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்றார் வைகோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here