இராணுவத்தினருடன் வராததால் நிவாரணம் இல்லை : கிராமசேவகர் அதிரடி!

0
363

அண்மையில் கிளிநொச்சியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் அரச திணைக்களங்களாலும், சுயாதீன அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த இலட்சுமணன் தம்பதியினருக்கு எந்த நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளப் பெருக்கின்போது, இராணுவத்தினால் மீட்கப்பட்ட 83 வயதான இலட்சுமணனும், அவரது மனைவி 82 வயதான கன்னியம்மாவும் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தனர். வயது முதிர்ந்த நிலையில் தமது தேவைகள் எதனையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத வயதில், உறவினரது ஒத்துழைப்புடனேயே இவர்கள் தமது நாட்களை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் அவ் உறவினர் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். இக் கிராமத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட, வறிய நிலையில் இருப்பவர்களின் லட்சுமணனன் – கன்னியம்மாள் குடும்பமும் ஒன்று. வீட்டுத்திட்டம் முதல் எந்த உதவிகளும் கிடைக்காத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ள நிவாரணமும் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் தமக்கும் வழங்குமாறு இவர்கள் கேட்டுள்ளனர். இராணுவத்தின் படகில் வந்து பாடசாலையில் தங்கியிருந்தால்தான் நிவாரணம் என்றும் எந்த உதவியும் இவர்களுக்கு வழங்க முடியாது என்றும் கிராம சேவையாளர் கூறியுள்ளார். பாடசாலை – இடைத்தங்கல் முகாமில் வந்து தங்கியிருக்க கூடிய உடல் நிலை தமக்கு இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளில் தமக்கும் வழங்க வேண்டும் என்றும் இதற்கு மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரியுள்ளனர். இதேவேளை அண்மையில் குடும்ப தலைவரை இழந்த ஒரு குடும்பமும் வெள்ளத்தின்போது வீட்டிற்குள் பரணி அமைத்து தங்கியுள்ளனர். இவர்களுடன் இராணுவத்தினர் அழைத்தபோது, வீட்டை விட்டு வெளியேற மறுத்த முன்னாள் போராளி குடும்பம் உள்ளிட்ட 5 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here