யாழ். வர்த்தகர் தலையிலேயே மிளகாய் அரைத்த ஆசாமி!

0
236

கடந்த சில நாட்களுக்கு முன் பேராசைப்பட்ட யாழ்ப்பாண வர்த்தகருக்கு நடந்த கேவலத்தை இங்கு தருகின்றோம்.

ஈயத்திற்கு தங்கமுலாம் பூசி, அதை விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருந்த தங்கம் என்று கூறி, யாழ் வர்த்தகரிற்கு 23 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல விடுதியொன்றின் உரிமையாளரின் தலையிலேயே மிளகாய் அரைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பவம் அண்மையில் கிளிநொச்சியில் நடந்துள்ளது.

யாழ் விடுதி உரிமையாளருடன் நெருக்கமாக பழகி, அவரை நூதனமாக வலையில் வீழ்த்தி, இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.ஒரு மாதத்தின் முன்பாக, யாழ் விடுதி உரிமையாளரிறகு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. யாழில் தங்குவதற்கு அறைகள் தேவையென தொலைபேசியில் பேசியவர் கேட்டுள்ளார். அனுராதபுரத்தை சேர்ந்த அந்த நபர், பின்னர் அந்த விடுதியில் தங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் விடுதி உரிமையாளருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது.

ஜேசிபி கனரக இயந்திரம் இயக்குபவராக அவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். விடுதி உரிமையாளருடன் நெருங்கிப் பழகிய பின்னர், வன்னிப்பகுதியில் வேலைசெய்யும்போது, விடுதலைப்புலிகள் புதைத்து வைத்த தங்கம் தன்னிடம் சிக்கியதாகவும், அதனை விற்பனை செய்யவே யாழ்ப்பாணம் வந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

தங்க கட்டிகளை வாங்குவதாக விடுதி உரிமையாளர் குறிப்பிட்டார். ஒரு தங்கக்கட்டியின் விலை 23 இலட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டது.அதை கிளிநொச்சியில் கொள்வனவு செய்ய கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு பின்னால் உள்ள இரண்டாவது வீதிக்கு விடுதியின் உரிமையாளர் அழைக்கப்பட்டுள்ளார். அதன் பொருளையும் பணத்தையும் பரிமாறிக் கொண்டனர். அனுராதபுரத்தில் இருந்து வந்தவர் பணத்தை பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டார்.

யாழ்ப்பாணத்திற்கு வந்த விடுதி உரிமையாளர், தங்கத்தை பரிசோதித்தபோது, அது போலியானது என்பது தெரிய வந்தது. இதனால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக, சம்பவம் நடைபெற்ற இடமான கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

பொருள் பரிமாறப்பட்ட வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார். அவர் பயன்படுத்திய கார் இலக்கத்தை வைத்து, அனுராதபுரத்திற்கு சிவில் உடையில் பொலிசார் சென்றனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அது வாடகைக்கு அமர்த்தப்பட்ட கார் என்பதும், அதனை வாடகைக்கு விட்டவர் எந்தவித பதிவுகளும் இன்றியே அதனை வாடகைக்கு விட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது

பொலிசாரின் அறிவுறுத்தல்படி, வாடகைக்கு விட்டவர் தனது தொலைபேசியிலிருந்து சந்தேகநபருடன் பேசினார். காருக்குள் பொருள் ஒன்று இருப்பதாக கூறி, அவரை அந்த இடத்திற்கு அழைத்தனர். அதனை நம்பிய சந்தேகநபர் அங்கு வந்தார்.சிசிரிவி கமராவில் காணப்பட்ட ஆசாமி அவர்தான் என்பதை உறுதி செய்து அவரை கைது செய்தனர் பொலிசார்.

அவரது வீட்டில் சோதனையிட்டபோது அங்கு போலி நாணயங்கள், ஆறு கைத்தொலைபேசிகள், அடையாள அட்டைகள், டயறிகள் கைப்பற்றப்பட்டன. டயறியில் ஏராளம் தொலைபேசி இலக்கங்கள் காணப்பட்டன. வீதியால் செல்லும்போது, கடைகளின் தொலைபேசி இலக்கங்களை குறித்து வைப்பதாகவும், பின்னர் அவற்றுடன் தொடர்புகொண்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.

பல வர்த்தகர்களை இவர், நூதனமான முறையில் ஏமாற்றயிருக்கிறாரென்பது தெரிய வந்துள்ளது.தங்கக்கட்டி விற்பனை மோசடியில் இன்னும் இருவர் தொடர்புபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிற்கும் பொலிசார் வலை விரித்துள்ளனர்.அனுராதபுரத்தை சேர்ந்த ஆசாமி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here