முதலாம் உலகப் போரின் 100 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு கனடாவில் மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
சின்னஞ்சிறு சிறார்கள் முதல் வயோதிபர்கள் வரை கனேடிய தேசியக் கொடியை ஏந்தியவாறு, நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த போர்வீரர்களை நினைவுகூர்ந்தனர்.
உலகப் போரில் கனேடிய வீரர்கள் பெருமளவானோர் பங்கெடுத்திருந்த நிலையில், அவர்களை நினைவுறுத்தி மக்கள் கோஷம் எழுப்பினர். ”நீங்கள் எம் நினைவுகளில் மீண்டும் வருவீர்கள் என எதிர்பார்த்திருந்தோம்” என மக்கள் குறிப்பிட்டனர்.
கனேடிய துருப்புகள் கறுப்பு உடையில் பொப்பி மலர் அணிந்து பேரணியாக சென்றனர். அதன் பின்னர் மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
அத்தோடு, மக்களும் கறுப்பு உடையில் பொப்பி மலர்களை அணிந்தவாறு அணிவகுத்துச் சென்றதோடு, போர்வீரர்கள் நினைவிடத்தில் பொப்பி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.
முதலாம் உலகப் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு நேற்றுடன் 100 வருடங்கள் நிறைவடைந்தன. உலகப் போரில் பங்குபற்றிய மில்லியன் கணக்கான துருப்புக்கள் தமது உயிரை தியாகம் செய்தன. அந்த தியாகத்தை நினைவுறுத்தி உலகின் பல பாகங்களில் நேற்று சிறப்பு நினைவுதின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.