யாழ்ப்பாணம் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

0
266


இன்று (09) காலை 10 மணி முதல், யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டோர், திடீரென வீதி மறியலிலும் ஈடுபட்டனர்.


இதேவேளை வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 11 மணியிலிருந்து ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்குளை வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றியுள்ள நிலையில், அவர்கள் தொடர்ச்சியாக கடந்த 16 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ள நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் இப் போராட்டம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே! ஜனாதிபதியின் வாக்குறுதியை அரசியல் கைதிகளுக்குத் தெரிவித்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தீர்களே, அதன் அடிப்படையில் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி அரசிற்கு அழுத்தம் கொடுங்கள்,
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களே! ஆயுதப் போராட்டம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த காரணிகள் இன்னமும் அப்படியே இருக்கிறது, என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல், அதனை ஏற்றுக்கொண்டுள்ள தாங்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துங்கள், சர்வதேச சமூகமே! எந்த வழியில் பார்த்தாலும் பல்லாண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் காரணங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும், இந்த நாட்டு மக்களுக்கும் நன்றாகவே தெரியும், எனவே, நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும், நாங்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை அங்கீகரிப்பதற்காகவும் சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யுங்கள், தமிழ் அரசியல் தலைவர்களே, மக்கள் பிரதிநிதிகளே! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாங்கள் வீதிகளில் இறங்கிவிட்டோம். இனியாவது நீங்கள் எம்முடன் இணைவீர்களா? என அவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புதிய மாக்சிச லெனினிச கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here