அப்பாத்துரை விநாயகமூர்த்தியின்  இறுதி நிகழ்வுகள் இன்று!

0
701
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல்வாதியும் மனித உரிமை வாதியுமான சட்டவாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி  அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்றைய தினம் கொக்குவிலில் அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாகத்   அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள்   கடந்த 28.05.2017 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.
சுகவீனம் காரணமாக கடந்த இரண்டு வாரகாலமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் ஞாயிற்றுக்கிழமை தனது 84 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.
சட்டவாளரான விநாயகமூர்த்தி, ஜி.ஜி. பொன்னம்பலத்துடன் இணைந்து அகில இலங்கை தமிழ்  காங்கிரஸ் ஊடாக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் பின்னர் குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து செயற்பட்டார். தமிழீழ விடுதலை  புலிகளின் அரசியல் சித்தாந்தத்தை முழுமையாக ஏற்பதாக பகிரங்கமாக அறிவித்த அவர் தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதியுடன் செயற்பட்டவராவார்.
குமார் பொன்னம்பலத்தின் மறைவின் பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்ற அவர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசிய  கூட்ட மைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் ஒருவரான அவர் அதன்  பிரதித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
2015ஆம் ஆண்டு வரை யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். கொழும்பு  பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை பூர்த்திசெய்த அவர் குமார் பொன்னம்பலத்துடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக  பாடுபட்டார். வயதான காலத்திலும் மனித உரிமைக்காகப் பாடுபட்ட இவர் தனது 84ஆவது வயதில் நேற்றைய தினம் இயற்கையெய்தியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் நேற்றைய தினம் கொழும்பு பொரல,  ஜெயரட்ண மலர்சாலையில் காலை  10 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதுடன் இன்று செவ்வாய்க்கிழமை  கொக்குவிலில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 11 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து இரங்கல் உரை இடம்பெற்று பிற்பகல் 2 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here