வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உதவி

0
227

tna-help_001யாழ்.மாவட்டத்தில் தற்போது அடைமழை பெய்து வருகின்ற நிலையில் தாழ்நிலப் பகுதிகளிலும், இடம்பெயர்ந்தோர் முகாம்களிலும் வசித்து வரும் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பலர் வீடுகளை விட்டு வெளியேறி கோவில்களிலும், பொது மண்டபங்களிலும் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் வடமராட்சி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச்சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

வடமராட்சியின் பல பகுதிகளுக்கும் இன்று விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை.சேனாதிராசா தலைமையிலான கூட்டமைப்பின் மாகாணசபை பிரதேசசபை உறுப்பினர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

பருத்தித்துறை, தும்பளை கிழக்கு பகுதிக்கும், பொலிகண்டி இடம்பெயர்ந்தோர் முகாமிற்கும், கரவெட்டி இராஜ கிராமப்பகுதிக்கும் விஜயம் மேற்கொண்ட கூட்டமைப்பினர் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்துகொண்டதுடன், உலருணவு நிவாரணப் பொதிகளையும் வழங்கினர்.

பாதிக்கப்பட்ட மக்களின் குடிநீர்ப்பிரச்சனை, மலசலகூடப்பிரச்சனை, முதலியவற்றை உடனடியாக நிறைவேற்றுமாறு உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டது.

பின்னர் அண்மையில் கடலில் மீன் பிடிக்கச்சென்று காணாமற்போய், பின்னர் கரை திரும்பிய பருத்தித்துறை, சக்கோட்டையைச் சேர்ந்த 03 மீனவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவர்களின் கடலில் மூழ்கிய பெறுமதிமிக்க படகு மற்றும் வலைகளை மீட்டெடுக்க உதவி புரிவதாகவும் உறுதியளித்தனர்.

இவ்விஜயத்தில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை.சேனாதிராசா, வடமாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான வே.சிவயோகன், பா.கஜதீபன், ச.சுகிர்தன், வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் க.சதீஸ், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் மற்றும் வடமராட்சிப்பகுதி பிரதேசசபைகள், நகரசபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here