தமிழர்களுக்கான உரிமையை எந்தப் பேச்சுவார்த்தை மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது !

0
379

பேரினவாதிகளிடமிருந்து தமிழர்களுக்கான உரிமையை எந்தப் பேச்சுவார்த்தை மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை உலகுக்கு சிவராம் எடுத்து உரைத்து வந்தார். இன்றும் அவ்வாறான சிந்தனையில் நாம் இருந்தாலும், ஆயுதத்தை ஒதுக்கி வைத்து ஆளுமைமிக்க நெருக்குதல்கள் மூலம் நிலைமையில் முன்னேற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சில் நேற்றையதினம் நடை பெற்ற ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் நினைவு தினத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி என அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை வடக்கு கிழக்கினைச் சேர்ந்த ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து யாழ் ஊடக அமையத்தின் தலைமையில் முன்னெடுக்கின்ற இந் நிகழ்வில் என்னை பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுமாறு அழைத்ததையிட்டு மகிழ்வடைகின்றேன்.
இலங்கைத் தமிழினத்தின் சிறந்த ஒரு ஊடகவியலாளராகத் திகழ்ந்த தராகி டி.சிவராம் கொழும்பில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ் மக்களிடத்திலும் ஊடகவியலாளர் மத்தியிலும் மிகப் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தராகி என்றும் டி.சிவராம் என்றும் எஸ்.கே என்றும் நன்கு அறியப்பட்ட தர்மரட்ணம் சிவராம் மிகத்துணிச்சலானதொரு ஊடகவியலாளர்.
மனித உரிமைகள் நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர்களும், இலங்கையின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான சிவராமின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக முன்வந்தனர். இதனால் அவர் ஐரோப்பிய, ஆசிய, வடஅமெரிக்கநாடுகள் பலவற்றிற்கு இராஜதந்திரக் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்காக பலமுறை சென்று வந்தார்.
அவரின் இறப்பு ஏற்பட்ட தினத்தில் கூட ஐப்பானிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் ஒன்றிற்காக செல்ல இருந்தார் என்பது பின்னர் அறியக் கிடைத்தது.இவரின் கொல்லப்பட்ட பூத உடல் தலையில் பலத்த காயங்களுடன் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்திற்கும் வைத்தியசாலைக்கும் இடையில் புதர்கள் உள்ள ஒரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அடக்கு முறை என்பது இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்ட விடயம் அல்ல தொழிலாளர்கள் மீது தொழில் வழங்குனரின் அடக்கு முறைகள், வர்க்க அடக்குமுறைகள், இன அடக்கு முறைகள், மத அடக்குமுறைகள் என அடக்குமுறைகள் பல வடிவங்களில் நலிவடைந்த மக்கள் மீது வலிமை மிக்கவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.
எனினும்அடக்கு முறைகள் அதிகரிக்க அதிகரிக்க வீறுகொண்டெழுகின்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் காலம் சென்றாவது தமது கோரிக்கைகளில் கொள்கைகளில் வெற்றி பெற்றிருப்பதை சரித்திர வாயிலாக நாம் அறிந்திருக்கின்றோம் என்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here