பாடகர் சாந்தன் மறைந்த பெரும் சோகத்தில் தமிழீழ மக்கள் !

0
411

தாயகத்தின் பிரபல பாடகர் சாந்தனின் மரணம் தொடர்பிலான அதிகாரப் பூர்வ தகவலை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியசீலன் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் அறிவித்திருந்தார்.

இதேவேளை காணி உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மக்கள் இவரது மரணம் தொடர்பிலான தகவலறிந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறியார் வந்தவன்! நீர்வளமும் உண்டு! நில வளமும் உண்டு! நின்மதி ஒன்றுதான் இல்லை” என்னும் பாடல் ஊடாக புகழ்பெற்றவர் பாடகர் S.G.சாந்தன்.

குறித்த கலைஞனின் மரணமானது முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பேரிழப்பாக மாறியுள்ளது.

பாடகர் சாந்தனின் பிட்டுக்கு மண் சுமந்த பெருமானே’ என்கிற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பக்திப்பாடல் சிவரத்திரி தினத்தன்று ஒட்டு சுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஒளிக்கவிடப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று பிற்பகல் 2.மணி03நிமிடத்திற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.

முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.

1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

தமிழீழப் பாடகர் சாந்தனின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 தொடக்கம் 11.00 வரை ஓட்டுமடம் அன்பன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. பின்னர் அன்னாரின் உடல் முன்னிரவு 11 மணியளவில் மாங்குளத்தில் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு அஞ்சலிக்காகவைக்கப்படவிருக்கின்றது.

நாளை திங்கட்கிழமை அவரது உடல் மு.ப 11 மணியளவில் இறுதிக்கிரியைகளுக்காக கிளிநொச்சியிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here