கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

0
163


வவுனியா மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று (10) காலை 9.30 மணியளவில் ஒன்றிணைந்த சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் முல்லைத்தீவு கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட மைத்திரி-ரணில் அரசு ஏன் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் உள்ளது என்பது பற்றி உரிய தரப்புக்கள் வாய் திறந்து கேள்வி எழுப்புதல் வேண்டும் என்று தெரிவித்து இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை வவுனியாவில் நடாத்தியுள்ளார்கள்.
கேப்பாப்புலவு மக்களுக்கு நீதிவேண்டும், வேண்டும் வேண்டும் காணி நிலம் வேண்டும், மக்களின் நிலங்களிலிருந்து இராணுவமே வெளியேறு, கேப்பாப்புலவு மக்கள் இலங்கையர் இல்லையா? காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன?, அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், பயங்கரவாதச்சட்டத்தை இரத்துச் செய், மைத்திரி ரணில் அரசே அரசியல் வாக்குறுதி என்னாச்சு? தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ன? நாட்டில் நடப்பது நல்லாட்சியா? அல்லது காட்டாட்சியா? நல்லாட்சியில் மக்களுக்கு கிடைத்தது என்ன? போன்ற கோசங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டதுடன் இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர், வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் கலந்து கொண்டனர்.
தங்களுடைய வாழ்வாதாரத்துக்காக காணிகளை விடுவிக்கக்கோரி கேப்பாப்பிலவு மக்கள் விமானப்படைத் தளத்திற்கு முன்பாக அமர்ந்து பத்தாவது நாளாக தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here