ஜெயலலிதாவின் பூதவுடல் எம்.ஜீ.ஆர் சமாதிக்கு அருகே நேற்று நல்லடக்கம்!

0
398

0d5105col191407881_5077612_06122016_kaa_cmyமறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பூதவுடல் இலட்சக்கணக்கான மக்களின் அழுகுரலுக்கு மத்தியில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர் சமாதிக்கு அருகே நேற்று மாலை 4.30 மணியளவில் முழு அரச மரியாதையுடன் முதலமைச்சரின் புகழுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

‘அம்மா ‘ என மக்கள் கதறி அழ கண்ணீர்க் கடலுக்கு மத்தியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மண்ணோடு சங்கமமானது.

இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கலைத்துறை பிரபலங்கள் என பெருந்திரளானோர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தியபின் முதல்வரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்திலிருந்து பூதவுடல் அரச மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலம் இடம்பெற்ற பாதைகளில் இருமருங்கிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு தங்கள் இதய தெய்வத்திற்கு கண்ணீரஞ்சலி செலுத்தினர்.

நேற்றுப் பிற்பகல் 4.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகின. அதனையடுத்து பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வருடங்களாக தமிழ் நாட்டை ஆட்சிசெய்து தமிழக மக்கள் ‘அம்மா’, ‘இதய தெய்வம்’ என அழைக்குமளவுக்கு அனைவரதும் மனங்களில் இடம்பிடித்த முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் 11.00 மணியளவில் காலமானர்.

கடந்த 75 நாட்களுக்கு முன் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சென்னை அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து மீண்டும் திரும்புவார். ‘அம்மா’வாக இருந்து ஆட்சிசெய்வார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த தமிழக மக்களுக்கு அவரது மறைவு தாங்கொணாத் துயரத்தைத் தந்திருந்தது என்பதை கடலாய் புரண்ட கண்ணீர்த் துளிகள் வெளிக்காட்டின.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவிலேயே ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெளியானது. அதனைக் கேள்விப்பட்ட மக்கள் அப்பலோ மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆயிரக்கணக்கான பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் மக்கள் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது.

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே ஜெயலலிதா காலமானர் என்ற செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. அந்த நிமிடம் தொடக்கம் நல்லடக்கம் வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ராஜாஜி மண்டபத்தருகிலேயே தங்கிவிட்டனர்.

சசிகலா இறுதிச் சடங்கு

ராஜாஜி அரங்கிலிருந்து எடுத்து வரப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்ஜிஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல், ‘புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா’ என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.

அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி மண்டபத்துக்கு வந்திருந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பும் இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை அவரது தோழி சசிகலா பெற்றுக் கொண்டார். பிறகு, ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையைச் சுற்றி வந்து பால் தெளித்தார். ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

பின்னர், 12 வீர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

‘அம்மா ‘ என மக்கள் கதறிஅழ கண்ணீர்க் கடலுக்கு மத்தியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பூமித்தாயின் மடியில் சங்கமமானது. இறுதி ஊர்வலம் இடம்பெற்ற பாதைகளில் இருமருங்கிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு தங்கள் இதய தெய்வத்திற்கு கண்ணீரஞ்சலி செலுத்தினர்.

சென்னை கடற்கரை சாலையெங்கும் மக்கள் திரண்டிருந்து மறைந்த முதல்வருக்கு கண்ணீராலும் மலர்களினாலும் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பத்தின் பேரிலேயே எம்,ஜி.ஆர் சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்வதற்காக கடலோர ஒழுங்குமுறை சட்டத்திலிருந்து அனுமதி பெறப்பட்டிருந்தது.

அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினமிரவு உயிரிழந்தார். அப்பலோ மருத்துவ மனையில் திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் செல்வி ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததையடுத்து அண்ணாரின் பூதவுடல் போயர்ஸ் கார்டனிலுள்ள அவரது வேதா இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போலோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டன் வரை சாலையின் இருமருங்கிலும் நின்றிருந்த பொதுமக்கள் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

மக்கள் கண்ணீரில் வெள்ளத்தின் மத்தியில் ஜெயலலிதாவின் உடல் இறுதி அஞ்சலிக்குப் பின்னர், மெரீனா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆரின் நினைவிட வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

ஜெயலலிதா காலமான செய்தியை அறிந்ததும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அஞ்சலி செலுத்த டில்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்தார். ராஜாளி கடற்படை தளத்தில் வந்திறங்கி பிரதமர் மோடியை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் வரவேற்றார்.

தொடர்ந்து அங்கிருந்து ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலுக்கு பிரதமர் சென்றார். அங்கு, ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து சசிகலா மற்றும் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை ஆகியோர் உடன் வந்தனர்.

கதறி அழுதார் பன்னீர்செல்வம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கதறி அழுதார்.

ராஜாஜி அரங்குக்குள் நுழைந்த மோடியைப் பார்த்ததும், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கதறி அழுதார். அவரது தோளைப் பற்றி ஆறுதல் கூறினார் மோடி.மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்திய மோடி, சசிகலாவுக்கும் ஆறுதல் கூறினார்.

தங்கப் பேழையில் புகழுடல்

தமிழக மக்களின் கண்ணீர் கடலுக்கு இடையே, ராஜாஜி அரங்கில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிப் பயணம் சரியாக 4.20 மணியளவில் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வாகனத்தில், தங்கப் பேழையுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது.

இராணுவ, கப்பற்படை, விமானப் படை வீரர்கள் ஜெயலலிதாவின் உடலை எடுத்துச் சென்றனர்.

‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்னும் தாரக மந்திரத்தைக் கொண்ட மறைந்த முதல்வரின் இறுதிப் பயணம், அவர் கூறியபடியே வாழ்ந்து காட்டினார் என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தது.

இரு அவைகளும் ஒத்திவைப்பு

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின்னர், இந்திய பாராளுமன்றத்தில் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தைரியமான மற்றும் துடிப்பான தலைவரை நாடு இழந்து விட்டதாக தலைவர்கள் புகழாரம் செய்தனர்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா சட்டசபைகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபைகள் ஒத்திவைக்கப்பட்டன. மகாராஷ்டிரா சட்டசபை துவங்கியதும், முதல்வர் பட்நாவீஸ், காங்., தலைவர் படங்க்ரோ கடம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் மற்றும் கங்கட்ரா தேஷ்முக், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு அருகிலேயே நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக கடலோர ஒழுங்கு முறை சட்டத்தில் இருந்து போதிய விலக்குப் பெற்று நினைவிடம் அமைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவரது உடல் அவரின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதன்பின்பு, சென்னை அரசினர் தோட்டத்துக்கு அருகேயுள்ள ராஜாஜி ஹாலில் பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி

நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கட்சியினர், அவரது புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க பொருளார் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மற்றும் சினிமா பிரபலங்களான இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், நடிகைகள் கவுதமி, சுஹாசினி, வெண்ணீராடை நிர்மலா, சச்சு உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ரஜனிகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்து முதலமைச்சரின புகழுடலுக்கு அஞ்சிலி செலுத்தியதுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ச்சிகலாவுக்கு ஆறுதல் கூறினார்.. மேலும் இலட்சக்கணக்கான பொதுமக்களும் ஜெயலலிதா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவரது உடல் சென்னை கடற்கரை சாலையில் நினைவிடம் அமைக்கப்பட்டு அங்கே வைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கடற்கரை ஓரங்களில் எந்தக் கட்டுமானங்களையும் கட்டக் கூடாது என்பது கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அம்சத்தில் குறிப்பிடப்படும் முக்கிய விதியாகும்.

ஆனால், அதிலிருந்து மத்திய அரசிடம் இருந்து விலக்குப் பெற்று, எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நினைவிடம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறப்பு சான்றிதழ்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி இணையத்தில் இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அவரது குடும்ப விவரங்கள் மற்றும் இறந்த நேரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்நேற்று 6ஆம் திகதி வழங்கப்பட்டது.

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை 4.30 மணியளவில் ஊர்வலாக எடுத்துச் செல்லப்பட்டது.

பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி

ஜெயலலிதா உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவும் உடன் வந்தார்.

முன்னதாக அவர் டில்லியிலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்தார். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானம் மீண்டும் டில்லி சென்றது. தொடர்ந்து வேறொரு விமானத்தில் ஜனாதிபதி சென்னை வந்தார். ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து ஜெயலலிதா உடல் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கப்பேழையில் ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டது.

கடந்த வருடங்களாக தமிழ் நாட்டை ஆட்சிசெய்து தமிழக மக்கள் ‘அம்மா’, ‘இதய தெய்வம்’ என அழைக்குமளவுக்கு அனைவரதும் மனங்களில் இடம்பிடித்த முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் காலமானர். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து மீண்டும் திரும்புவார். ‘அம்மா’வாக இருந்து ஆட்சிசெய்வார் என எதிர்பார்ப்புடன் காத்திருந்த தமிழக மக்களுக்கு அவரது மறைவு தாங்கொணாத் துயரத்தைத் தந்திருந்தது என்பதை கடலாய் புரண்ட கண்ணீர்த் துளிகள் வெளிக்காட்டின.

நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவிலேயே ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெளியானது. அதனைக் கேள்விப்பட்ட மக்கள் அப்பலோ மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆயிரக்கணக்கான பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்த போதும் மக்கள் கொந்தளிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே ஜெயலலிதா காலமானர் என்ற செய்திக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here