கைதான நபர்கள் மீது கடும் துன்புறுத்தல்;மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0
298

policeபயங்கரவாத தடுப்பு பிரிவினரால் (ரி.ஐ.டி) அண்மையில் யாழில் கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர்களது பெற்றோரால் கொழும்பு மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அண்மையில் பொலிஸாருக்கு அச் சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தமை போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 5,6,7, 8,9 ஆம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இதுவரை 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொக்குவில், திருநெல்வேலி, சில்லாலை, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு, சுன்னாகம், மல்லாகம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்களுடைய உறவினர்களும் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்து அவர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான 17 வயதுடைய மாணவனை கடந்த 7 ஆம் திகதி காலை கைது செய்திருந்த போதும் இரவுவரை பெற்றோருக்கு அது தொடர்பாக தெரிவிக்கவில்லை எனவும் நேற்றைய தினமும் அவரை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவில்லை என்றும் 4 ஆம் மாடியில் சென்று குறித்த மாணவனை பெற்றோர் சந்தித்த போது அவர் கடும் துன்புறுத்தலுக்கு உட்பட்டிருப்பதாகவும் பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட கொக்குவில் பகுதியை சேர்ந்த நல்லலிங்கம் சர்மிலன் என்பவரை நேற்று கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்ததுடன் அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
மேற்குறித்த நபருக்கும் உடல் ரீதியான துன்புறுத்தல் இடம்பெற்றிருந்ததால் முகத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் அவருடைய பெற்றோர் மனித உரிமை ஆணைக்குழுவில் தமது முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here