லெப். கேணல் . நாதன் கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும், செயலமர்வும் கடந்த
(08.05.2025 ஞாயிற்றுக்கிழமை பாரிசு புறநகர் பகுதியில் ஒன்றான சென்டெனியில் இடம்பெற்றது.
காலை சரியாக 9:30 மணிக்கு பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் செல்வன் திவாகர் ஏற்றி வைக்க தமிழீழத்தேசியக்கொடியை அரசியல் துறைப்பொறுப்பாளர் செல்வி. நிதுசா சதீசுவரன் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார்.
மாவீரர் பொதுப்படத்திற்கும், மாவீரர்கள் லெப். கேணல் நாதன், கப்டன் கயன் ஆகிய மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு 1989 இல் வவுனியாவில் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட மாவீரரின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார். மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு 2009 வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்ற மோதலில் வீரமரணமடைந்த மேஜர் செஞ்சுடர் அவர்களின் சகோதரர் மலர் மாலை அணிவித்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும், செயலமர்வும் பிரான்சு பாரிசு மண்ணில் மாவீரர்களாகிவிட்ட மாவீரர்கள் நினைவாக ஏன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் நாம் எமது தேச விடுதலையை நோக்கி அரசியல், சனநாயக வழியில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை நேர்த்தியாக ஓரணியில் அடுத்த தலைமுறையின் காத்திரமான பங்களிப்போடு பயணிக்க தேசப்பணியாளர்கள் நாம் பட்டை தீட்டப்பட வேண்டும் அதனுடைய செயலமர்வு முதற்கட்டமாக பிரான்சில் தேசப்பணியில் பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கானதாக அமைகின்றது என்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பரப்புரைப் பொறுப்பாளர் தொடக்கி வைக்க, அதனையடுத்து வரவேற்புரையையும், பட்டறையின் குறிக்கோளும், நோக்கமும் பற்றியும் பணிப்பாளர் திரு. செங்கதிர் அவர்கள் விளக்கியிருந்தார்..
இன்றைய காலத்தின் அரசியல் பணியென்பது நின்று நிதானமாக பயணிக்க வேண்டும் என்றும் அந்தப்பக்குவப்படுத்தும் ஓய்செயற்பாடே இப்பட்டறை என்றும், எதிர்காலத்திலும் இது பணியாளர்களை பக்குவப்படுத்தி பயணிக்க வைக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
தாயகத்தில் இருந்து அரசியல் ஆய்வாளர் திரு.நிலவன் அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழீழ தாயகத்தில் கடந்த காலத்தில் இருந்த அரசியல் நிலைப்பாட்டையும், இன்று இருக்கும் அரசியல் நிலைப்பாடு பற்றியும், தாயகத்தில் எமது மொழி, எமது வாழ்விட மண், எமது கலாசாரம் பண்பாடு அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கு அனைவரும் மக்களாகட்டும், தமிழ் அரசியல் வாதிகள் ஓரணியில் நிற்க வேண்டும். இதற்கு புலம் பெயர் தேசங்களில் பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் உண்மையின் வழியில் பயணிக்கும் தமிழர் கட்டமைப்புகளும் ஓரணியில் நின்று உண்மைக்குக் குரல் கொடுத்து வலிமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து ஐரோப்பிய நாட்டில் இருந்து சமகாலப்பார்வை என்ற கருப்பொருளில் திரு. சுஜி அவர்கள் உரையாற்றியிருந்தார். இன்றைய சர்வதேச அரசியல் நிலைப்பாடும், எமது தமிழினத்தின் விடுதலைப்போராட்டம் பற்றியும் தமிழீழ மக்கள் நாம் செய்ய வேண்டிய பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து “நாம் செய்ய வேண்டியது என்ன” என்ற தலைப்பில் பிரான்சில் வாழும் முந்நாள் ஈழநாதம் நாளிதழ் பொறுப்பாசிரியர் திரு. ஜெயராஜ் அவர்கள் ஆற்றியிருந்தார். தாயகத்தில் அன்று இருந்த நிலையில் செய்யப்பட்ட பணிகள் பற்றியும், இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகள் பற்றியும் இவையாவும் ஓர் நேர்கோட்டில் வரவேண்டும். அதற்கு காத்திரமானதொரு வழிகாட்டும் தலைமை உருவாக வேண்டும் என்றும் காலப்போக்கில் அது சரியாக உருவாகும் என்றும் அதுவரை இதுவரை காட்டிய பணிகளில் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.
தொடர்ந்து எமது கட்டமைப்பும், நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், சர்வதேச ஊடகங்களும் அதில் எமது பங்களிப்பும் பற்றி செயற்பாடுகளுடனான ஆதார ஆவணங்களுடன் கடந்த கால, நிகழ்காலம் எதிர்காத்துக்கான கருத்துக்களை திரு. சி. பார்த்தீபன் நடாத்தியிருந்தார்.
அதன் காத்திரமான செயற்பாடாக மூத்தவர், நடுத்தர வயதுடையவர், இளையவர் என மூவரை இன்றைய பட்டறை நிகழ்வை வைத்து குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் வழிநடத்திக்காட்டும் படி கேட்டிருந்தார். எதிர்பாராத நிலையிலும் அவர்களும் அதனை சிறப்பாகச சசெய்து காட்டியிருந்தமை முத்தாய்ப்பாய் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளும், தேசம் நோக்கிய செயற்பாடுகள் பற்றியும் து. மேத்தா அவர்கள் வழங்கியதுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன், தேசியக்கொடி கையேந்தலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அரசறிவியற் கல்லூரி ஆரம்ப நிகழ்வும், செயலமர்வும் 4.00 மணிக்கு நிறைவு பெற்றது. இன்றைய செயலமர்வு மட்டுப்படுத்தப்பட்டதொரு பட்டறையாக அமைந்திருந்தது. கலந்துகொண்ட அனைத்துச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியைத் தந்திருப்பதை அவர்களிடமிருந்து அறியக்கூடியதாக இருந்தது.
(ஊடகப்பிரிவு – மக்கள் தொடர் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு)










