நாளை பெப். 4 சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களின் கரிநாள்!

0
239

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் கவனயீர்ப்புப் போராட்டத்தோடு, பிரான்சுவாழ் தமிழீழ மக்கள் நாமும் இணைந்து தமிழீழ மக்களின் வேணவாவை சர்வதேசத்திற்கும், பிரான்சு தேசத்திற்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவோம். வாருங்கள்!

என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு பெப்.4 சிறிலங்கா தேசத்தின் சுதந்திர நாள் குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முழு வடிவம் வருமாறு:-

அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே !

22.01.2025
பெப்ரவரி 4 ஆம் நாள் சிறீலங்கா ( சிங்கள) தேசத்தின் சுதந்திரநாள். இது ஈழத்தமிழ்மக்களின் துயரம் நிறைந்த கரிநாள்.
கவனயீர்ப்புப் போராட்டம். 04.02.2025 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்: Esplanades des Invalides RER:C Metro: 8 – 13 Invalides. French பாராளுமன்றம் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு அண்மையில்.
இலங்கை என்னும் தேசம் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டாலும் கடந்த 77 ஆண்டுகளாக பெரும்பான்மையாக சிங்கள மக்களோ சரி அந்தநாட்டின் பூர்வீக குடிமக்களான தமிழ்மக்களும் சரி சுதந்திரமாகவே இந்த நிமிடம்வரை வாழவேயில்லை. ஆட்சிகளும், ஆட்சியாளர்களுமே மாறிமாறியிருக்கின்றன.
சொந்த மண்ணின் மக்களின் வாழ்வையும், சுதந்திரத்தையும் புறந்தள்ளி அவர்களின் செங்குருதியில் நின்று உலகமெங்கும் கடன்களைப் பெற்று அதனை அடைக்கமுடியாது நாட்டையே கூறுகூறாக வல்லரசுகள் விலைபேசும் அளவில் கொண்டுவந்து விட்டுள்ள நிலை ஒருபுறம், உரிமைகள் யாவும் திட்டமிட்டு பறிக்கப்பட்ட நிலையில் அதற்கெதிராக அறத்தின்பால் போராடிய தமிழ்மக்களையும் அவர்கள் போராட்டத்தையும் பயங்கரவாதமாகவும், உள்நாட்டு கலவரமாகவும் சித்தரித்து சர்வதேசத்துக்குக்காட்டி அதனை அழித்துவிட்டபோதும் இன்று உலகநாடுகள் அதன் காத்திரம் தெரிந்துகொண்ட போதும் சிங்களதேசத்தில் மாறுகின்ற அரசுகளும், அவர்களின் வாக்குறுதிகளையும் சர்வதேசம் இன்றும் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றது.
இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்த பிரித்தானிய தேசமே இதற்குப் பொறுப்புக் கூறல் வேண்டும். 77 ஆண்டுகளாகப் பெரும்பான்மை ஆட்சியாளர்களால் திட்டமிட்டுத் தமிழ்மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. பல்லாயிரம் கோடி பெறுமதிகளான சொத்துகள் சூறையாடப்பட்டன. சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டி வெளியேற்றப்பட்டனர். பல லட்சம் தமிழர் கைதுசெய்து காணாமல் ஆக்கப்பட்டனர். சொந்த நாடுகளைவிட்டு அகதிகள் என்ற பெயருடன் அயல்நாடுகளுக்கும், ஐரோப்பியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ்மக்கள் தஞ்சம் புகுந்தனர். தஞ்சம் புகுந்த நாடுகளில் தங்களின் தனித்துவமான திறன்களினால் அவர்கள் திறன் மிகுந்தவர்களாக மாறினாலும் அவர்களின் தாயகத்தைப் பெற்றிட வேண்டும் என்ற தாகம் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. அது இன்று பெரும் புயலாக இளையவர்களைப் பற்றிக்கொண்டுள்ளது.
இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும் தமிழர் தேசத்தை உலகம் அங்கீகரிக்கும் வரை தமிழ்மக்கள் ஓயப்போவதில்லை. இதனை சுத்தம் செய்யப்போகும் இன்றைய ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கைகொடுத்தவர்களும், சர்வதேசமும் உணரத்தான் போகின்றது.
ஐக்கிய நாடுகள் உரிமைப்பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் நாள் முதல் ஏப்பிரல் 4 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. 57 ஆவது கூட்டத்தொடர்கால வேளையில் சிறிலங்காவில் தேசிய மக்களின் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார். அதனால் பின்தள்ளப்பட்ட நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனிதஉரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் வாக்கெடுப்பின்றி மேலும் ஒருவருடத்திற்கு காலநீடிப்பு செய்யப்பட்டது. இது எதிர்வரும் செப்ரெம்பர் நடைபெறவுள்ள 60 ஆவது கூட்டத் தொடருக்குள் முடிவுக்கு வருகின்றது. இது தொடர்பான தீர்மானம் மீண்டும் புதுப்பிக்கப்படுமா? அல்லது புதிய பிரேரணை கொண்டு வரப்படுமா? என்ற உத்தரவாதம் கூறமுடியாது என்று மனிதவுரிமைகள் செயற்பாட்டாளர்கள் நிற்கின்றனர்.
இருப்பினும் ஐ.நா. மனிதவுரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும், இலங்கையில் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் தொடர்ந்து திரட்டும் பொறிமுறைகளும், சிறீலங்கா தேசத்தின் ஆட்சி அதிகாரம் மாறியபோது தமிழ்மக்கள், சிங்கள மக்கள் குருதிகள் பல்வேறுவழிகளில் வழிந்து கொண்டேயிருக்கின்றது. மாற்றமடையாத பயங்கரவாதச் சட்டம், தொடரும் அடக்குமுறைகளும், கைதுகளும், பஞ்சங்களும், பட்டினிகளும், பொருட்கள் விலையேற்றங்களும் போதைப்பெருட்கள் விற்பனைகளும் இனப்பாகுபாடுகளும், அச்சுறுத்தல்களும் இடம் பெற்றுக் கொண்டேதான் இருக்கின்றது.
சர்வதேச நாடுகளும் தமது வல்லரசு நாடுகளின் நலனுக்காக இலங்கைத் தீவை பகடைக்காயாக நகர்த்தியபோது, ஈழத்தமிழ் மக்களின் சுதந்திர நல்வாழ்வில், உரிமைப் போராட்டத்தைப் புறந்தள்ளிவிட முடியாது அந்தவகையில் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் கவனயீர்ப்புப் போராட்டத்தோடு, பிரான்சுவாழ் தமிழீழ மக்கள் நாமும் இணைந்து தமிழீழ மக்களின் வேணவாவை சர்வதேசத்திற்கும், பிரான்சு தேசத்திற்கும் மக்களுக்கும் தெரியப்படுத்துவோம். வாருங்கள்!
கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை இனப்பிரச்சினையிலும் தீர்விலும் ஆர்வம் கொண்டுள்ள அரசுகளையும், அதன் கட்சிகளையும் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு பல்லாயிரக்கணக்காக நாம் அணிதிரண்டு அவர்கள் கரங்களையும் பற்றிக்கொண்டு இப்போராட்டங்கள் ஊடாக எமக்குப் பலம் சேர்ப்போம்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here