யாழ்.வேலணையில் தாய் மற்றும் மாமனின் சடலங்களுடன் வசித்த மனநலம் பாதித்த பெண்!

0
7

யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் தாய் மற்றும் மாமனின் சடலங்களுடன் மூன்று நாட்களுக்கு மேல் ஒரே வீட்டில் வசித்து வந்த 45 வயதுடைய பெண்ணொருவர் இன்று (06) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார். குறித்த இருவரின் சடலங்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

வேலணையைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாலசுந்தரம் (74) மற்றும் அவரது சகோதரியான முத்துலிங்கம் புவனேஸ்வரி (72) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் புவனேஸ்வரியின் 45 வயதுடைய மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அயலவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இருவரும் வெவ்வேறு இடங்களில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். இதன்போது, புவனேஸ்வரியின் மகள் வீட்டினுள் இருந்துள்ளார்.

அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காகப் பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

வீட்டினுள் காணப்பட்ட புவனேஸ்வரியின் சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதுடன், வீட்டுக்கு வெளியே காணப்பட்ட பாலசுந்தரத்தின் சடலம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here