பிரான்சில் சிறப்படைந்த பொண்டி தமிழ்ச்சங்க தமிழ்ச்சோலையின் 23 ஆவது ஆண்டு விழா!

0
28

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான அதிகம் தமிழ்மக்கள் வாழும் பொண்டிநகரில் உள்ள பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 23 ஆவது ஆண்டு விழா தமிழ்ச்சோலைக் குழந்தைகளுடன் கடந்த 18.10.2026 ஞாயிற்றுக்கிழமை பொண்டி மாநகர மண்டத்தில் பி.பகல் 15.00 மணிக்கு ஆரம்பமாகியது.
தமிழர்களின் பாரம்பரிய இசையான இன்னியம் அணி இசையமைத்து வர நிகழ்வின் பிரமுகர்கள் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்சங்கக் கூட்டமைப்பினர், தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம், ஏனைய பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினர் தலைவர்கள், உறுப்பினர்களுடன், பொண்டி தமிழ்ச்சங்கத்தினரும், தமிழ்ச் சோலை ஆசியரியர்களும் அழைத்து வரப்பட்டனர்.
அகவணக்கம் செய்யப்பட்டு தமிழ்ச்சோலைக்கீதம் மாணவர்களால் இசைக்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்றதுடன் வரவேற்பு நடனமும் நடைபெற்றது.
சிறுவர்களின் குருவி நடனம், ஆத்திசூடி நாடகத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தலைமையுரையை பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திருவாட்டி துளசி அவர்கள் வழங்கியிருந்தார். நிகழ்வுக்கு பிரதம விருந்தினர் மாநகர முதல்வர் அவர்களுக்கும், ஏனைய சிறப்பு விருந்தினர்களுக்கும் மக்களுக்கும் நன்றியையும் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆண்டு விழாவை நடாத்துவதையிட்டு பெருமிதமும் சந்தோசமும் அடைந்ததாகவும் அதற்காக உழைத்த பெற்றோர்களையும், இளையோரையும் பாராட்டியிருந்தார். தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பணி தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நிகழ்வுகளாக கண்ணன் நடனம், காவடி நடனம், தமிழின் பெருமை பற்றிய பாடல் நடனம், விலங்குகளின் பாடல் நடனம், பரதநாட்டிய கீர்தன நடனம், இடுக்கண் களைவதாம் நட்பு நாடகம், இளையவர்களின் பட்டிமன்றத்துடன் தாயகத்தை நேசிக்கும் சுவாசிக்கும் பிரபாகரன் பெயரைச் சொல்லி பாடல், எப்போ மாமா விடுதலை ஏக்கம் தரும் பாடல், பனைமரமே பனைமரமே பாடல், தாயக உணர்வை மீண்டும் குழந்தைகள் மொழியில் செய்து காட்டியிருந்தனர். 18 வயதிற்குட்பட்டவர்களால் நடாத்தப்பட்ட காத்தவராயன் என்ற கூத்தின் ஒரு பகுதி மிகவும் சிறப்பாக இருந்ததுடன்; மிகுந்த பாராட்டுக்குமுரியதாக இருந்தது. கொற்றவை நடனம், அழகான ஊரெல்லோ, என்னோடு ஆடவா தன்னமானப்போரடா, பாடல் நடனங்கள், பழைய மாணவர்களின் நடனங்கள் சிறப்பு மிகுந்ததாகவும் இருந்தது.. நிகழ்வில் பிரதம விருந்தினர் மாநகர முதல்வர் அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பான உரையையும் வழங்கியிருந்தார். தமிழர்களின் மொழி, கலை கலாசாரத்தைத் தானும் நன்றாகப்புரிந்து கொண்டவர் என்றும் அவர்களின் அடிப்படை அரசியல் பாதையில் தன்னுடைய பயணம் இடம்பெறுகின்றது என்று இங்கு வாழும் தமிழ் மக்களின் அனைத்து விடயங்களிலும் தான் உதவிக்கரமாக எப்பொழுதும் இருப்பதாகவும் கூறியிருந்தார். இவருடன் பொண்டித் தமிழச்சோலையின் பழைய மாணவியும், தற்பொழுது மாநகரசபைத்தேர்தலில் ஆலோசகராகத் தெரிவுசெய்யப்பட்ட திருவாட்டி பானுசா பாஸ்கரன் அவர்களும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தால் மதிப்பளிப்பு செய்யப்பட்டார். தான் சிறிய வயது முதல் மொழியையும், கலை பண்பாட்டையும் கற்று வளர்ந்து இன்று உங்கள் முன் நிற்பதாகவும் அதற்குத் தமிழ்ச்சங்கமும், தமிழ்ச்சோலையும், தனது பெற்றோரும் காரணமாகும் என்றதுடன் இதனை ஒவ்வொரு பெற்றோர்களும் தமிழோடும், கலையோடும் பண்போடும் தமது குழந்தைகளை வளர்த்து இனத்திற்கு பெருமையை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
சிறப்பு மதிப்பளித்தல் நடைபெற்றது. எமது நம்பிக்கையின் நட்சத்திரங்களான எதிர்கால இளையோர்களை தட்டிக்கொடுத்து, ஊக்குவித்து அவர்களுக்கு உத்வேகமளிக்கும் வகையில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையில் தமிழ்க்கல்வி கற்ற காலம்முதல் இன்று வரை ஒவ்வொரு விடயத்திலும் எந்தப் பிரதிஉபகாரமும், காலநேரம் பாராது உதவிவரும் பழைய மாணவி செல்வி. அயாணி சிவராசா அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார். அவருக்கான மதிப்பளித்தலையும், நினைவுப் பொருள் ஒன்றையும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழ்ச்சங்கங்களின் இணைப்பாளர் திரு. மேத்தா அவர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதுடன். இந்த மதிப்பு செய்வதில் பெருமையடைவதாகவும் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் 23 வருடகால பயணத்தில் தனது 20 வருடகாலம் அதனுடன் இருந்திருக்கின்றது என்றதோடு எத்தனையே சோதனைகளை, நெருக்கடிகளை எல்லாம் உடைத்து இன்று 23 ஆவது ஆண்டை சிறப்பாக கொண்டாடுவதையிட்டும், இதற்கு பின்னால் இத்தனை வருடகாலமும் உழைத்த அத்தனை பேருக்கும் தனது இதயபூர்வமான நன்றிகளுடன் இனி வரும் காலம் இளையவர்கள் காலம் என்பதால் அதனைநோக்கி இனி இளையவர்களுடன் நாமும் எமது பயணத்தைத் தொடர்ந்து இலக்கை அடையவேண்டும் என்றும் இன்று மதிப்பளிக்கப்படும் இந்த இளையவர் போல் அடுத்து வரும் இளையவர்களும் தம் பணியை தாய்மண்ணுக்கும், மொழிக்கும் செய்யவேண்டும். அவர்களும் ஒருநாள் இவ்வாறு உயர் மதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் எமது தேசத்தின் எதிர்கால சிற்பிகள் அவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி ஊருக்கும் உழைக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆண்டு விழா மலர், மற்றும், வளர்தமிழ 12 நிறைவு செய்த மாணவர்கள், தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் மற்றும் செயலாளர் திருவாட்டி. சுபத்திரா அமலதாஸ் பொண்டி பிராங்கோ தமிழ்;ச்சோலை நிர்வாகி, உறுப்பினர்களால் நிகழ்வுக்கு வந்த ஏனைய பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினராலும் மதிப்பளிப்பு செய்யப்பட்டனர்.
பொதுத்தேர்வில் சித்தியடைந்த மாணவர்களையும், 23 ஆவது ஆண்டு மலர் வெளியிட உதவி விளம்பரதாரர்கள், ஆதரவாளர்கள் மக்கள் முன் மதிப்பளிக்கப் பட்டனர். நிகழ்வில் பல சுவாரசியமான நிகழ்வுகளை ஆசிரியர்களின் அற்பணிப்பில் குழந்தைகள் செதுக்கி எடுக்கப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது. நிகழ்வுக்கு அங்குள்ள இளையவர்களின் பங்கும் அளப்பரியதாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.. மண்டபம் நிறைந்த மக்களுடன் நிகழ்வுகள் யாவற்றையும் மக்கள் இறுதிவரை இருந்து கண்டுகளித்திருந்தனர். நீண்ட காலத்திற்கு பின் அனைவரையும் உள்வாங்கி ஆண்டுவிழா செய்யப்பட்டதால் நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலும் இரவு 9.30 மணிக்கு நிகழ்வுகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here