பிரான்சில் வன்முறைகளைக் கட்டுப்படுத்த பல நகரங்களில் இரவுநேர ஊரடங்கு (Couvre-feu)

0
29

அக்டோபர் 17 அன்று பிரான்சில் ‘விலைவாசி உயர்வுக்கு’ எதிராக நடைபெற்ற போராட்டங்கள் மாபெரும் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டப் பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு (Couvre-feu) உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, தற்போது வன்முறையாளர்களை ஒடுக்கும் பாதுகாப்பு ஆயுதமாக மாறியுள்ளது.

தெனான் (Denain – Nord): சோசலிஸ்ட் கட்சியின் நகர முதல்வரான அன் -லீஸ் டுபோர்-டோனினி (Anne-Lise Dufour-Tonini), தனது நகரில் சனிக்கிழமை நடந்த கொடூரமான சூறையாடல்களைக் கட்டுப்படுத்த நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) முதலே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும் இந்த உத்தரவின்படி, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எவரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வேலை மற்றும் அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வேடிக்கை பார்ப்பவர்களைத் தவிர்த்துவிட்டு உண்மையான வன்முறையாளர்களைக் குறிவைத்துக் காவற்துறை செயல்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கௌடலோப் (Guadeloupe): புவான் -அ-பித்ர் (Pointe-à-Pitre) மற்றும் அபிம் (Abymes) நகரங்களில் நடந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த, நேற்று அக்டோபர் 18 ஞாயிறு இரவு 8 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு மட்டும் ஒரு நாள் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பகுதி அளவிலான ஊரடங்குகளுக்குப் பிரதமர் உத்தரவு:

கலவரங்களால் சுமார் 3,000 வணிக நிறுவனங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திங்கட்கிழமை இரவு முதல் வணிக மையங்களைக் குறிவைத்து “பகுதி அளவிலான மற்றும் குறிப்பிட்ட உள்ளூர் பகுதிகளுக்கான” (partiels et localisés) ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு மாகாண ஆட்சியர்களுக்குப் (Préfets) பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அதிரடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் முழுமையான கலவரம் இல்லை என்றாலும், சில குறிப்பிட்ட நகர்ப்புறங்களில் நிலைமை மோசமாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், மேயர்கள் மற்றும் வர்த்தக சபைகளுடன் ஆலோசித்து இந்த ஊரடங்குகளை உடனடியாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

அவசரநிலை (état d’urgence) பிரகடனப்படுத்தப்படுமா?

நாட்டில் ‘அவசரநிலை’ பிரகடனப்படுத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், “தேவைப்பட்டால் அதுவும் அமல்படுத்தப்படும்; ஆனால் தற்போதைய சூழ்நிலைக்குக் குறிப்பிட்ட இடங்களுக்கான இரவு நேர ஊரடங்குகளே (Couvre-feu) அதிகப் பலன் தரும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அவசரநிலை என்பது 12 நாட்களுக்குப் பிறப்பிக்கப்படும் ஓர் அதிதீவிரச் சட்டம். இதை அமல்படுத்தினால் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களுக்கு முழுமையான தடை, பொது இடங்களை மூடுதல், வீடுகளில் கட்டாயமாக முடக்கிவைத்தல் (assignations à résidence), மற்றும் நிர்வாக ரீதியிலான தேடுதல் வேட்டைகளை (perquisitions administratives) நடத்தக் காவற்துறைக்கு உச்சக்கட்ட அதிகாரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here