கொரோனா தடுப்பூசி: வாழ்வது நானாகவும், நீங்களாகவும், எல்லோருமாகவும் இருக்கட்டும்!

0
306


இதில் எவற்றை நாம் முடிவு செய்வது ? இயற்கையின் சாபமா? அன்றி செயற்கை விஞ்ஞான வளர்ச்சியா? சிந்திக்க நேரமில்லை ! காரணம் நாம் தினம் தினம் இழப்பது எம் நேசமான தமிழ் உறவுகளை உலகின் அற்புதமான உயிர்களை. ஆனாலும் எம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.


உலகெங்கிலும் வாழும் எம் ஈழத்தமிழ் மக்கள் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய சுகாதார அறிவுரைகளுக்கு மதிப்பளித்து அதனைக் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும். அண்மையில் திடீர் மாரடைப்பால் இறந்தவர் ஒருவரின் இறுதிச்சடங்கில் சாவடைந்தவரின் பிள்ளைகள் சாவுவீட்டுக்கு வருகின்றவர்களுக்கு cimetiére இல் அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தனர். இந்நாளில் நேரடியாகத் துயரம் பகிர்கின்ற இடத்துக்கு வருகின்றவர்கள் தனிமனித சுகாதாரத்தைப் பேணும் படியும், கடந்த காலங்கள் போன்று கைகொடுத்தோ, கட்டிப்பிடித்தோ துயரைப்பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டதுடன். அதற்கான மருந்துகளையும் மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கும் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால், சாவுவீட்டுக்குச் சென்றவர்கள் ஒருசிலரைத் தவிர எவருமே அந்தத் துயர்பகிர்தலில் உரிய சில முறைகளைக் கடைப்பிடிக்காதது மிகுந்த கவலையைத் தந்தது. வழமைபோல இறந்தவர்களின் பிள்ளைகளை கட்டிப்பிடித்து, கைகொடுத்துத் துயரைப்பகிர்ந்து கொண்டனர். இதனால் மிகுந்த வேதனைக்கும் இக்கட்டுக்கும் உள்ளானவர்கள் தமது குடும்ப உறவைப் பறிகொடுத்து நின்றவர்களே! இதேபோலவேதான் 1 மாதத்திற்கு முன் நடை பெற்ற சாவுவீட்டில் கலந்து கொண்டவர் 21.04.2021 அன்று கொரோனா வைரசு தொற்றினால் சாவடைந்தார். எல்லோராலும் சொல்லப்பட்டது, முதல் நடைபெற்ற அந்த சாவுவீட்டுக்கு போய்த்தான் இவருக்கு இந்த நிலைமை வந்தது என்று வாய்க்கு வந்தபடி கூறிவிட்டார்கள்.  ஆனால், ஒருவர் தன் குடும்ப உறவு இறந்த வேதனையில் இருந்து மீளமுன்பே தம்மால் இன்னுமொரு உயிர் போய்விட்டதே என்று ஊர் உலகம் பேசுகின்றதே என்கின்ற இந்த வேதனை இன்னும் கொடியதாகவே அமைகின்றது.

கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி யாரைக்கொல்லும், யாரை விட்டுவைக்கப்போகின்றது இன்னும் எம் அன்பான எத்தனை உயிர்களை இழக்கப்போகின்றோம் என்பது எண்ணிப்பார்க்க முடியாதவைகளாகவே உள்ளது.
இதைக் குறைப்பதும், மற்றவர்களை வாழச்செய்வதும் எங்கள் ஒவ்வொருவரின் கைகளில்தான் தங்கியுள்ளது. அனைவரும் அரசின் சுகாதாரப்பணிப்பின் அறிவுறுத்தல்களையும் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசிகளைப் போடவேண்டும். பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதில் நான் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளேன் என்றால், அதனை மற்றவர்களுக்கு மறைக்காமல் சொல்ல வேண்டும். சிறிதுகாலம் நோயின்; தொற்றுத் தாக்கம் முடியும் வரை நேரடி சந்திப்பை நிறுத்த வேண்டும். இது ஒன்றும் வேண்டாததும், உலகத்திலிருந்தோ, சமூகத்திலிருந்தோ பிரித்து வைக்கும் ஒரு கேவலமான நோய்தொற்று அல்ல. ஆனால், மனித உயிருக்கு ஆபத்தானது. அண்மையில் வளர்ச்சிபெற்ற வல்லரசு நாடு ஒன்றில் தமிழ் மக்கள் அதிகமாக இருக்கும் ஓர் ஐரோப்பிய நாட்டின் நகரத்தில் ஏற்பட்ட இந்த வைரசு தாக்கமும் அதனைப் பரிசோதனை செய்து, நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ள விடயத்தை பெரியவர்கள், பெற்றோர்கள் மறைத்ததும். அதனை பிள்ளைகளுக்கு வெளியில் சொல்லக்கூடாது என்றதால் அது ஏனையவர்களை தொற்றிக்கொண்டிருக்கின்றது. அடுத்த தலைமுறையையும் தவறான பாதைக்கும் கொண்டுசெல்லவும் இவ்வாறன செயற்பாடுகளும் அமைகின்றது.
 ஒவ்வொரு நாடும் பல கடுமையான நன்மையான சட்டதிட்டங்களை போட்டு, தன் மக்களை இதிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்றே தினம் தினம் நாட்டின் சனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிவுறுத்தல்கள் சொல்வதோடு தடுப்பு ஊசிகளைத் தாமும் ஏற்றி மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகின்றனர். இதனை மதிக்கக் கற்றுக்கொள் வேண்டும். ஆரம்பகாலங்களில் தமிழ் மக்கள் தமது ஆயுள்வேத மூலிகைகள் கொண்ட உடலுக்குக்கு கேடுவிளைவிக்காத செயற்கை மூலிகை வைத்தியங்களைப் பயன் படுத்திவந்தனர். தற்பொழுது இவ்வைரசுத் தாக்கம் ஓர் ஆண்டைக் கடந்து விட்டதால் அந்தவழிமுறைகளை பெரும்பாலானோர் கையைவிட்டு விட்டனர். அதனால் இன்று பெரும் உயிரிழப்பை தமிழர்கள் நாம் சந்திக்கத் தொடங்கிவிட்டோம்.
எனவே நாட்டின் அரசினதும், சுகாதார அமைச்சினதும் சட்டங்களையும், ஆலோசனைகளையும் கடைப்பிடிப்போம். தடுப்பூசிகளை வைத்தியரின் ஆலோசனைக்கமைய போட்டுக்கொள்வோம். தேவையான ஆலோசனைகளுக்குத் தமிழர் கட்டமைப்புக்களை அணுகுவோம். எமது தமிழ் வைத்தியர்கள் இதற்கான உதவிகளை ஆலோசனைகளைத் தந்துகொண்டும் உதவிக்கொண்டுமே இருக்கின்றனர். நாம் எமது குமுகாயத்தின் மீதும், ஒவ்வொரு உயிர்கள் மீதும் அக்கறை கொள்வோம்.
ஒவ்வொரு உயிர்களும் பெறுமதியானது அவற்றை வாழவைக்கவே நாம் பல லட்சம் உயிர்களை விலையாக மண்ணிற்குள் விதைத்திருக்கின்றோம்.!
வாழ்வது நானாகவும், நீங்களாகவும், எல்லோருமாகவும் இருக்கட்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here