மட்டக்களப்பு மூத்த ஊடகவியலாளர் வாமதேவன் காலமானார்!

0
368

மட்டக்களப்பின் ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் (வயது 69) அவர்கள் காலமானார்.

நேற்று இரவு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானதாக உறவினர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் சமூக சேவகராக நுழைந்த இவர் ஏறாவூர் வீரகேசரிக்கான மூத்த ஊடகவியவலாளராக செயற்பட்டிருந்தார்.

அவ்வேளை மறைந்த அகமது லெப்பை மாஸ்டர் என்பவரிடம் இருந்து பத்திரிகைக்கு செய்தி எழுதும் பயிற்சியை பெற்றுக்கொண்டு முதல் முதலில் அக்காலத்தில் வெளியான சுதந்திரன் எனும் பத்திரிகையின் செங்கலடி நிருபராக சேவையாற்றி வந்தார்.

இளமைக்காலத்தில் ஊடகவியலாளருக்கான பயிற்சியை பெற்று தினபதி,சிந்தாமணி ஆகிய இரு பத்திரிகைக்கும் செங்கலடி நிருபராக செயற்பட்டவர்.

இவ்வேளை சிந்தாமணி பத்திரிகையிலே வாரம் ஒரு தடவை வெளிவந்த அத்தாணி மண்டபம் பகுதியிலும் தனது எழுத்து திறமையினை வெளிக்காட்டி தனியிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைத்துறையிலே தனக்கென தனியிடத்தினை பதித்திருந்த கலாபூசணம் வாமதேவன் ‘ஈழநாதம்’ உள்ளிட்ட பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் செய்தி எழுதுவதில் ஆர்வம்,அனுபவம் காரணமாக வீரகேசரி பத்திரிகைக்கு வெற்றிடமாக இருந்த பதவி வழங்கப்பட்டு மிகவும் சிறந்த ஊடகவியலாளர் சேவையில் ஈடுபட்டவராக விளங்கினார்.

அதுமாத்திரமன்றி பல்வேறு அமைப்புக்களிலும் பல்வேறு பதவிகளை வகித்த இவர் விருதுகள் ,சான்றுதல்கள் ,கௌரவிப்புக்கள் என பல பராட்டுக்களை தனது சேவைக்காக பெற்றுக்கொண்ட ஒரு சிறந்த பத்திரிகையாளராக மாவட்டத்தில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கலாபூசணம் வாமதேவன் தனது வாழ்கை காலத்திலே மக்களுக்கு சமூக சேவை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் சமாதான நீதவானாகவும் சமூக ஏற்பட்டாளராளாகவும் திகழ்ந்தவர்.இவருடைய ஊடக பணியினை பாராட்டி 2015ம் ஆண்டு இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் கலாபூசணம் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைத்துறையில் சேவையாளராக மாத்திரம் இவர் நின்று விடவில்லை அரச உத்தியோகமாகிய கிராம சேவையாளராக செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் ஒரு கடமை உணர்வுடன் இடமாற்றம் இன்றி தொடர்ந்து 30 வருடங்கள் பல மக்களுக்கு பணியாற்றிய பெருமையும் இவரைச்சாரும்.
ஆன்னாரின் உடலம் அஞ்சலிக்காக மட்டக்களப்பு,சூரியா வீதயில் வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

ஆன்னாரின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தெரிவித்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here