தமிழின அழிப்பின் பத்து வருட நிறைவில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிடவுள்ள பிரான்சு ஊடகமையம்!

0
952

வரலாற்றுக் கடமையை தவறவிடாதீர்கள் ஈழமுரசு விடுக்கும் பணிவான வேண்டுகோள்!

இன்னும் பல நூறு வருடங்கள் எம்மை கடந்து போனாலும் தமிழினத்தால் மறக்கமுடியாத வலிமிகுந்த ஓர் ஆண்டாக 2009 மே எமக்குள் ஆயிரம் இலட்சம் உணர்வுக் கலவைகளைத் தந்தபடியே இருக்கும். உன்னதம் மிகுந்த எமது விடுதலைப் போராட்டம் மௌனித்த பொழுது அது. பல ஆயிரம் எமது இரத்த உறவுகள் குதறி எறியப்பட்டு, கொன்று குவிக்கப்பட்ட குருதிகாயாத நாட்கள் அவை. உலகம் கள்ள மௌனத்துடன் பார்த்தும் பாரா முகமுமாக நின்றிருக்க, உலகின் பெரும் சக்திகள் சிங்கள பேரினவாதத்துக்கு ஆயுத, நிதி, வலுவூட்டல்களை எந்தவோர் அற உணர்வும் அற்று வழங்க, ஒரு தேசிய இனத்தின் மீது இனப்படுகொலை உச்சம் பெற்ற பொழுது அது. இப்போது பத்து வருடங்கள் கடந்துவிட்டன. நினைத்துப் பார்க்கமுடியாத பெரு வெறுமையையும் திசைகள் எதுவென்று தெரியாத காரிருளையும் இந்தப் பத்து வருடங்கள் எமக்கு தந்திருக்கிறது. பெரும் புயலும் ஊழிப்பெரு ஆட்டமும் நடாத்தி முடித்த மண்ணாக எமது நிலம் காணப்படுகிறது. உயிர்களையும் உடமைகளையும் மட்டுமல்லாமல் மானுடத்தின் மிக முக்கியமான உந்துசக்தியான நம்பிக்கையும் அந்த மே மாதத்து 2009 எம்மிடம் இருந்து வலுக் கட்டாயமாக பிடுங்கிச் சென்றுவிட்டது. ஒரு தேசிய இனம் என்று நாம் அடையாளம் காணப்படுவதற்கு ஏதுவான அத்தனை அடையாளங்களும் சிதைக்கப்பட்டு, குழப்பப்படுகிறது இந்த பத்துவருடங்களில். ஆனாலும் இத்தனை நம்பிக்கையீனங்கள் ஒளியே தெரியாத இருள் இவற்றுக்குள்ளாகவும் இந்த பத்துவருடங்களில் மிகச் சில குரல்களும் மிகச் சில எழுது கோல்களும் இன்னும் இன்னும் எமது விடுதலை வேட்கையை வென்றாகி விடவேண்டும் என்ற வேட்கையுடன் எமது தாயக விடுதலையை என்ற இலட்சிய நெருப்பை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றார்கள். யாரோ ஒரு சிலர் இப்போதும் தெருக்களிலோ, இராணுவமுகாம் வாசல்களிலோ, புலம்பெயர் தேசத்து வீதிகளிலோ – வெயிலிலும் மழையிலும் கொட்டும் பனியிலும் நின்றபடி தமிழ் மக்களுக்கான நீதிக்கான குரலை எழுப்பியபடியே இருக்கின்றார்கள். அந்த குரல்களில் ஒன்றாக கடந்த பத்து வருடங்களின் நினைவை, குருதி தோய்ந்த நினைவுகளை, உலகை நோக்கி நாம் இந்த பத்து வருடங்களில் எழுப்பிய குரல்களை நாம் பதிவுசெய்தாக வேண்டும். முப்பது வருடத்துக்கும் மேலாக எமது மாவீரர்களின் அற்புதமான அர்ப்பணிப்புகளாலும் மானுட வரலாறு காணாத தியாகங்களாலும் உருவான சுதந்திர எண்ணம் என்பது அழியாது அழியாது அழியாது என்பதை சொல்லுவதற்கும் இந்த பத்து வருட நினைவு பொழுதில் ஓர் ஆவணத் தொகுப்பை அச்சு வடிவில் வெளியிட உள்ளோம். இது வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சி மட்டுமல்ல. காலம் கடப்பதற்குள், நினைவுகள் அழிவதற்குள் நடந்த கொடூரங்களின் சாட்சியங்களாக உள்ள நாம் அவற்றை அப்படியே பதிவாக்கி வைத்துவிட வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பும், வரலாற்றின் கடமையும் கூட. இது எங்கள் நீதிக்கான சாட்சிப் பதிவு மட்டுமல்ல, எங்கள் இனத்திற்கு நடந்த பேரழிவு என்ன என்று அடுத்த தலைமுறைகள் வந்து தேடும்போது, நாம் அவர்களுக்கு விட்டுச் செல்லும் ஒரு பெரும் ஆதாரமாகவும், ஆவணமாகவும் இருக்கவேண்டும். இனத்தின் பேரழிவுகளை நேரில் பார்த்தவர்களும் அனுபவித்தவர்களும், அதற்காக உலகெங்கும் தொடர்ச்சியாக குரல் எழுப்பிப் போராட்டங்களை முன்னெடுத்தவர்களும், அமைப்புக்களும் இந்த அச்சு ஆவணத்துக்கு உங்கள் ஆதாரத்தை பதிவாக்குங்கள். நீங்கள் வழங்கும் சிறு பதிவும் வரலாற்றின் சாட்சியாக, தமிழர்களின் மீள் எழுச்சிக்கு உரம் சேர்ப்பதாக அமையும். உங்கள் அனுபவப் பதிவுகளை எதிர்வரும் 18.04.2019 இற்கு முன்னதாக எழுதி அனுப்பி வையுங்கள். இது வேண்டுகோள் அல்ல. உங்கள் ஒவ்வொருவரினதும் வரலாற்றுக் கடமை. அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: eelamurazu@gmail.com நன்றி! ஊடகமையம் – பிரான்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here