பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமானால் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் !

0
164

தமிழர் தாயகப் பிரதேசமான வடகிழக்கிற்கு பாரிய கைத்தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்ட முதலீடுகள் பொருந்தாது என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
70 க்கும் மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் முன்னிலையில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர், வடகிழக்கிற்கு சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளே சாலச் சிறந்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரும் முதலீட்டாளர்களும் வர்த்தக நிறுவனங்களும், தமிழ் மக்களின் தனித்துவ அடையாளங்களை மதித்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள முதலமைச்சர், முதலில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையான இனப் பிரச்சனைக்கு தீர்வான சுயாட்சியை சமஷ்டி மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமாகிய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வட மாகாண முதலமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (26) 9 வது யாழ் – சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.
ஆரம்ப நிகழ்வை அடுத்து பிரதம அதீதிகள் மற்றும் சிறப்பு அதீதிகள் ஊர்வலமாக கண்காட்சி நடைபெறும் யாழ் மாநகர சபையின் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு வடக்கில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க விரும்புகின்ற நிறுவனங்களுக்கான ஒரு உள்நுழைவு நிகழ்வாக கருதப்படுகின்ற போதிலும் இவை தொடர்பில் வடமாகாணத்தின் இன்றைய நிலைமை பற்றியும் எமது அத்தியாவசிய தேவைகள் பற்றியும் இத் தருணத்தில் குறிப்பிட வேண்டியது வடமாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் எனது கடப்பாடாகவுள்ளது.
இன்று சர்வதேச அளவில் இலங்கை ஒரு மத்திய வருவாயுடைய நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இந்த குறியீட்டினுள் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை வகைப்படுத்தப்பட முடியாதுள்ளது.
நீண்டகாலப் போரினால் முற்றாக அழிவடைந்த நிலையில் உள்ள இப் பிரதேசங்கள் அடிப்படை மட்டத்திற்கும் மிகக் கீழேயே இருக்கின்றன. இவற்றை அடிப்படை மட்டத்திற்கேனும் கொண்டுவருவதற்கு விரைந்து செயற்பட வேண்டிய பாரிய பொறுப்பு மத்திய அரசாங்கம், மாகாண அரசுகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது.
இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற வேளையில் மக்கள் விபரிக்க முடியாத இன்னல்களை அனுபவித்த போதும் அவர்களின் கைகளில் தேவைகளுக்கு போதுமான பணம் இருந்தது. யுத்தம் முடிவுற்று இயல்பு நிலை திரும்பியதும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்கள்.
ஆனால் அது நீடித்து நிலைக்கவில்லை. பிறநாட்டுக் கம்பனிகளும் நிதி நிறுவனங்களும் சர்வதேச தரத்திலான வர்த்தக நிறுவனங்களின் உள் நுழைவும் இப் பகுதியில் உள்ள நிதி மற்றும் மூலதனங்களை முழுமையாகச் சுரண்டிச் சென்றுவிட்டன. நிதி நிறுவனங்களின் ஆசை வார்த்தைகள் எம்முடன் பலரைக் கடனாளிகள் ஆக்கின.
அவர்களின் மிகை வட்டி அறவீடுகளின் காரணமாக அனைத்துத் தர மக்களும் இன்று கடனாளிகளாக காணப்படுவதுடன் ஒரு சிலர் தமது இன்னுயிர்களையும் மாய்த்துக் கொண்ட சம்பவங்கள் மனதிற்கு வேதனையைத் தருகின்றன.
இவ் விடயத்தை நான் யாரையுங் குறைகூறும் நோக்கில் கூறவில்லை. மாறாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் உள்ள மக்களை அவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பச் செய்வதற்கு வர்த்தகப் பிரமுகர்களாகிய உங்களின் உதவியை பெரிதும் எதிர்பார்க்கின்றௌம் என்பதைக் கூறிவைக்கின்றேன்.
உங்கள் உற்பத்திகளையும் மற்றும் தொழில்நுட்ப திறமைகளையும் இங்கு காட்சிப்படுத்துவதற்கும் உங்கள் தரமான உற்பத்திகளை எமது மக்களுக்கு விற்பனை செய்வதற்கும் வருகை தந்துள்ள உங்களை இன்முகம் காட்டி வரவேற்கின்ற இத் தருணத்தில் உங்களிடம் ஒரு அன்பான கோரிக்கையை விடுக்கலாம் என எண்ணுகின்றேன்.
வடமாகாண பூமியின் தட்ப, வெட்ப சூழ்நிலைகளைக் கருத்தில் எடுக்கும் போது இப் பகுதிகளில் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச்சிறந்ததாகத் தென்படுகிறது.
இன்று ஆரம்பமான வர்த்தக கண்காட்சி நாளையும் யாழ் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் வடகிழக்கில் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தினார்.
வறுமையில் வாடிய இந்திய நாடு இன்று பசுமைப்புரட்சி மூலம் உணவில் தன்னிறைவு கண்டுள்ளது. பல் துறைகளில் இந்தியா உலகத் தரத்திற்கு முன்னேறிவிட்டது. இவ்வாறு ஒரு நிலையைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது பாரத நாட்டின் மொழி, மதக் கொள்கை எனலாம். ஆங்கிலம் எல்லா மொழியினரையும் ஒன்றிணைத்து வந்துள்ளது. ஒரு மதம் ஒரு இனம் என்ற கொள்கையை பாரதம் வெறுத்தொதுக்கியுள்ளது.
மதச்சார்பற்ற நாடாகவே இன்றுவரையில் இருந்து வருகின்றது. யாவரின் மொழிகளையூம், மதங்களையும் மதிக்கும் சுபாவம் இந்திய மக்களிடையே இதுவரையில் இருந்து வந்துள்ளது. அந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றோம். அதுமட்டுமல்லாமல் எம்மவரும் மத – மொழி பக்கச்சார்பற்ற அந்த வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
அவர்களை அதிகாரத்துக்கு கொண்டுவந்த இலங்கையின் வடகிழக்குத் தமிழ் மக்களை உண்மையாக இன்றைய மத்திய அரசாங்கம் மதிக்கின்றதென்றால் எமக்குரிய சுயாட்சியை சமஷ்டி மூலம் பெற்றுக் கொடுப்பதே இந் நாட்டின் மக்களிடையே நல்லிணக்கம் வரத் துணைபுரியும்.
நல்லிணக்கம் என்று கூறிவிட்டு எம்மை வலுவிழந்தவர்களாக ஆக்கி பெரும்பான்மையினரின் பேரினவாதத்தை எம்மீது கட்டவிழ்த்து விடுவது நல்லிணக்கத்திற்கு வழிகோலாது. சமாதானம் உருவானால்த்தான் வணிகமும் வாணிபமும் வளர்ச்சி பெறலாம். இன்று பலவிதமான பின்ணணிகளில் இருந்து வியாபாரிகள், தொழிற்துறையினர், முதலீட்டாளர்கள் போன்றவர்கள் இந் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வந்துள்ளீர்கள். உங்களை வடமாகாணம் மனப்பூர்வமாக வரவேற்கின்றது. அதே நேரத்தில் எமது தனித்துவத்தை நீங்கள் மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.


வடக்கில் தொடர்ந்தும் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து வைத்துள்ள சிறீலங்கா இராணுவம் உட்பட அரச படையினர் அந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இராணுவம் எமது காணிகளை ஆக்கிரமித்துள்ளது. கடல்ப்படை எமது கரையோரங்களை ஆக்கிரமித்துள்ளது. அவர்தம் உறவினர் எமது சுற்றுலா மையங்களையூம், ஏ-9 தெருவின் கடைக்கூடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர்.
வேறு நிலங்களை மாகாணத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். ஆக்கிரமிப்பு நீங்கினால்த்தான் எமது தனித்துவம் பேணப்படும். தனித்துவம் மலர்ந்தால் வணிகமும் வாணிபமும் தொழில் முயற்சிகளும் சாலச் சிறப்பன. அப்போது நாம் ஒருமித்து இந்த நாட்டைக் கட்டி எழுப்பலாம். ஒருவர்க்கொருவர் பக்கபலமாக நிற்கலாம், வாழலாம். ஆகவே ஆக்கிரமிப்புக்களை அகற்றி நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் உருவாக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here