போலி முக நூல் பக்கத்தால் குழு மோதல்: 7 பேர் வைத்தியசாலையில்!

0
155

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இரண்டு குழுக்களிடையில் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஓரிரு தினங்களுக்கு முன்னர் புதிய காத்தான்குடியில் இடம்பெற்ற திருமணம் செய்த மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாக கூறி அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்றில் எழுதப்பட்டதாலேயே இந்த குழு மோதல் இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதிய காத்தான்குடி 04 ஆம் குறுக்குத் தெருவில் வசிக்கும் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற குழுவொன்று அவ்வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதையடுத்து அந்த இளைஞனின் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இளைஞனை காப்பாற்ற முற்பட்ட போது இரு சாராருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதில் 07 பேர் காயமடைந்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, அதில் மூவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த போலியான பேஸ்புக் பக்கத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியும் முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் அவரை தாக்கியதாக, குறித்த வீதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இன்னும் எவரும் இது தொடர்பில் கைது செய்யப்பட வில்லையெனவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here