“ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற ஈழவேந்தன் ஐயா சாவடைந்தார்!

0
168

ஈழவேந்தன் ஐயா கனடாவில் Toronto Western மருத்துவமனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவடைந்துள்ளார்..

“ஈழம் வெல்லும் அதை காலம் சொல்லும்” என்ற குரல் இன்று ஓய்ந்து விட்டது.

கனகேந்திரன் என்ற தனது இயற்பெயரை தூய தமிழில் ஈழவேந்தன் என மாற்றிய தமிழ் மொழிப் பற்றாளர்.

நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் மாணிக்கவாசகர் கனகசபாபதி அவர்களின் மகனான இவர், யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.

இவரின் துணைவியார் அருளாம்பிகை அம்மா சுகயீனமுற்ற நிலையில் தமிழகத்தில் மகளோடு வாழ்கிறார்.

“நீ ஒரு போராளியின்ட மனைவி! கலங்கக் கூடாது சரியோ! தைரியமாக திமிராக இருக்க வேணும் சரியா!”

2010 களில் ஒரு நண்பரின் வீட்டிலிருந்தபோது மனைவிக்கு தொலைபேசியில் இவ்வாறு அதட்டி ஆளுமையோடு சத்தமாக ஆறுதல் சொல்லும் அழகே தனி!

இனத்திற்காக இறுதிவரை உண்மைக் குரலாகவும் உணர்வுள்ள எழுத்தாகவும் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தார்..

இவருக்கு இரு மகள்கள் உண்டு. பிள்ளைகளைப் பிரிந்து கனடாவில் தனியாக வாழ்பவரைப் பார்த்து நாம் கவலைப்பட்டால் “என் இனப் பிள்ளைகள் இங்கும் இருக்கிறார்கள் .. எனக்கென்ன கவலை?” என்பார்.

இவர் நெருக்கமானவர்களை “குழந்தாய்” என அன்பாக அழைத்து நல்ல அறிவுரைகள் பல சொல்லிக் கொண்டேயிருப்பார்.

அவரிடம் வரலாற்றை அறிந்து கொள்வதில் மணிக்கணக்காக மெய் மறந்து கேட்டுக் கொண்டிருக்கலாம்..

தனித் தமிழ்ச் சொற்களை வானொலியில் பேசு என ஊக்குவிப்பார்.

ஆயிரம் நூல்கள் கரைத்துக் குடித்த அறிவுப் பெருக்கு ஊற்றாக அருவியாக காட்டாறாக கடலாக பெருகி ஓடும்…வீடு முட்ட நிரம்பி வழியும் நூல்கள்…

வானொலியில் ஐயாவை அழைத்துப் பேச விட்டாலும் நிறுத்த மாட்டார்… “நேரம் போகிறது ஐயா!” என கண்டிப்பாக இழுத்து நிறுத்தும் சூழ்நிலை.. ஒலிபரப்பாளர்களுக்கு.

கனடாவில் வசித்து வந்த அவர் டொரன்டோ மேற்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல் நிலை மிக மோசமடைந்திருந்த நிலையிலேயே தனது 92 ஆவது வயதில் சாவடைந்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1970 ஆம் ஆண்டில் வி.. நவரத்தினம் தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார்.

பின்னர் மீண்டும் தமிழ் அரசுக் கட்சியில் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் உறுப்புக்கட்சியாக இருந்தது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார்.1977 வன்முறைகளில்இவர்கடுமையாகப் – பாதிக்கப்பட்டார். 1980ஆம்ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழ் அரசுக் கட்சியில் இருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்தார். அக்கட்சியின் செயலாளராக ஈழவேந்தன் பணியாற்றினார். இலங்கையில் தமிழருக்கு எதிரான வன்முறைகள் கிளம்பிய காலகட்டத்தில் 1981 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாட்டுக்கு சென்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறு நால்வரும் 1997 பெப்ரவரியில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 1999 ஆம் ஆண்டில் அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும் ஈழவேந்தன் 2000 டிசெம்பர் 4 இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.

மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச்செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.

பின்னர் தாயகத்தில் இருந்து கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கும் அவரது அரசியல் பணி தொணர்ந்தது.

இன்று அந்த அறிஞரின் உயிரே எம்மை பிரிந்து போய்விட்டது.. ஓயாமல் பேசிய வாய் ஓய்ந்து போனதே!

ஈழவேந்தன் என்ற தமிழினத்தின் விடுதலைக்காக அயராமல் சிந்தித்துக் கொண்டிருந்த அந்த அடங்காத் தமிழன் சிந்தைகள் இனி இயங்கப் போவதில்லை…

உறுதி குலையாத கொள்கையோடு முழங்கும் சமரசம் இல்லாத சண்டைக்காரனான ஈழவேந்தன் ஐயாவின் இழப்பு தமிழினத்திற்கு கொடிய துயர்!

உறுதியான தமிழீழ வேட்கை கொண்ட ஈழவேந்தன் ஐயா நோயினால் சாவடைந்துள்ளார். இவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

(எரிமலையின் செய்திப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here