குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறித் தொடரும் கட்டுமானப் பணிகள்: ரவிகரன் கடும் கண்டனம்!

0
125

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிமன்றக்கட்டளையை மீறித் தொடர்ந்தும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலைக்கு 21.06.2023இன்று நேரடியாகச் சென்ற முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அங்குள்ள நிலைமைகளை நேரடியாகப்பார்வையிட்டு, அங்கு தொடர்ந்தும் நீதிமன்றக் கட்டளையை மீறி கட்டுமானப் பணிகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்திய பின்னர் இது தொடர்பில் தனது கடுமையான கண்டனங்களை அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலையில் 12.06.2023க்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் 19.07.2022அன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் இங்கு நீதிமன்றக் கட்டளையை மீறிக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந் நிலையில் அவ்வாறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமைக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடந்த 23.02.2022அன்று நான் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து 02.03.2023அன்று முல்லைத்தீவு நீதிமன்றில் AR/673/18 என்னும் வழக்கிலக்கத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு நீதமன்றக் கட்டளை மீறப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு முறையீடும் செய்யப்பட்டது.

தொடர்ந்தும் அதுதொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இதுதொடர்பான வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 07ஆம் திகதியும் முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் தற்போது இங்கு கட்டுமானப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை எம்மால் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

அந்தவகையில் விகாரையின் உச்சிப் பகுதியில் பலகைகள் பொருத்தப்பட்டு சிமெந்துக் கலவைகள் இடப்பட்டதற்கான அடையாளங்களை எம்மால் அதானிக்கக்கூடியதாகவுள்ளது.

அதனைவிட விகாரையின் அருகே புதிதாக ஒரு கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கல்வெட்டில் நீதிமன்றக் கட்டளையை மீறி, அத்துமீறி அமைக்கப்பட்ட பௌத்தவிகாரைக்கு, போலியான வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன.

அத்தோடு குறித்த விகாரையானது தொல்பொருள் திணைக்களத்தினர், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்புப் படையினர், பௌத்தலோகே நற்பணி மன்றத்தினர் ஆகியோருடைய முழுமையான ஒத்துழைப்புடனேயே கட்டப்பட்டதாகவும் குறித்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம் குருந்தூர்மலையில் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளக்கூடாதென்ற கட்டளையைப் பிறப்பித்திருக்கின்றது.

அதுதவிர நீதிமன்றக் கட்டளையை மீறிக் கட்டுமானப்பதிகள் இடம்பெறுவதாக எம்மால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையிலுள்ளது.

இவ்வாறு நிலைமைகள் இருக்கும்போது தொடர்ந்தும் இவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இவர்களின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கையை மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இவ்வாறு நீதிமன்றக் கட்டளையை மீறி தொடர்ந்தும் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பிலே எதிர்வரும் 04ஆம் திகதியன்று எமது சட்டத்தரணிகள் ஊடாக நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளோம்- என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here