
எதிர்வரும் மே 18 தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் தொடர்பில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் முழுவடிவம் வருமாறு:-
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தனது அனைத்துக்கட்டமைப்புகளுடன் தமிழின அழிப்பு மே 18 நினைவு நாளினை (14 ஆவது ஆண்டு) எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி ( வியாழக்கிழமை) அன்று பாரிசு பஸ்தில் நினைவுச்சின்னம் முன்பாகவும், பிரான்சு நாட்டின் ஏனைய 9 நகரங்களிலும் கவனயீர்ப்புக்களை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றைய நாளில் பல தமிழ் அமைப்புகள், தனியார் பாடசாலைகள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு கூட்டறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையிலே, கடந்த ஆண்டு மே 18ஆம் திகதியன்று, கனேடிய நாடாளுமன்றம் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு நாளை அங்கீகரித்தது, ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழின அழிப்பு நினைவு நாளாக பிரகடனப்படுத்தியது போன்று பிரான்சு தேசமும் இந்நாளினை தமிழின அழிப்பு நாள் மே 18 என அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைப்பதுடன், இன்றைய தமிழர் நிலஆக்கிரமிப்பு சம்பந்தமாகவும், பிரெஞ்சு பாராளுமன்றத்தில் பிரெஞ்சு பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் சார் ஆய்வுக்குழு மாநாடும் நடைபெறவுள்ளது.
தமிழின அழிப்பு நினைவாக பிரான்சு தேசத்தில் நாட்டப்பட்ட நினைவுச்சின்னங்கள் முன்பாக மே 2 முதல் மே17 வரையான காலப்பகுதியில் நினைவேந்தல்களும், மாநகரசபைகள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களும், நடைபெறவுள்ளதுடன், தமிழின அழிப்பு நினைவு நாள் மே 18 ஆம் நாள் ( வியாழக்கிழமை ) பிற்பகல் 15.00 மணிக்கு பஸ்தில் (Place de la Bastille) என்னும் திடலில் தமிழர் எழுச்சியின் அடையாளமாக தீபம் ஏற்றி மண்விடுதலைக்காக தம்முயிர் தந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தி எமக்கான சுதந்திர தேசம் தமிழீழமே அதனை அங்கீகரிக்க கோரியும் அதுவே தமிழர்களின் தீர்வு என்பதையும், சிறீலங்கா என்னும் சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புக்கு நீதியும், தமிழர் தாயகப்பிரதேசத்தையும் பௌத்த தேசமாக மாற்றும் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்கும், நிலப்பறிப்புக்கும் எதிராக சர்வதேசம் கண்டனக்குரல் தரவேண்டும் எனக்கோரியும், சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்ற பிரான்சின் உன்னத கோட்பாட்டுடன் தமிழீழ மக்களுக்காக குரல் கொடுத்து வரும் அரசியல் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற அமைப்புகள், விடுதலை அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது.
தமிழின அழிப்பு நாள் மே 18! பிரான்சு வாழ் தமிழீழ மக்களே!
அத்துடன் 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில், இந்த தமிழர்களுக்குக் கிடைத்த ஒரே உணவு, ஒரு சிட்டிகை உப்பு நீரில் சமைத்த ஒரு பிடி அரிசி மட்டுமே என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு தருணத்தைக் குறிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி மே 18 ஆம் நாள் கவனயீர்ப்புத் திடலில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுவதுடன், மே 2 ஆம் நாள் முதல் 17 ஆம் நாள் வரை பிராங்கோ தமிழ்ச்சங்கங்களினால் அந்தந்த நகரங்களில் நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் மக்களை கலந்துகொள்ளுமாறு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! தமிழின அழிப்பை பரந்த அளவில் அங்கீகரிப்பதற்காக பிரான்சு அரசும், மக்களும் சரியான நடவடிக்கைகளைப் பின்பற்றவும், ஈழத் தமிழ் சமூகத்திற்கு நீதி வழங்க இலங்கை அரசாங்கத்தையும் அதன் அதிகாரிகளையும் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதில் தீவிரப் பங்காற்றுமாறும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதாக பிரான்சு அனைத்து தமிழர் கட்டமைப்புகளும், தமிழ்ச் சங்கங்கள், ஆன்மீக ஒன்றியங்கள், தனியார் அமைப்புகளும் அழைப்பு விடுவதுடன் நீங்காத நினைவு கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் மே 18 அன்று அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
