துருக்கி மற்றும் சிரிய பூகம்ப உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியது!

0
87

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை (06) ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15,000ஐக் கடந்திருக்கும் நிலையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியிருப்போரை தேடும் மீட்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதால் உயிரிழப்பு 20 ஆயிரத்தையும் தாண்டலாம் என கவலை வெளியிடப்பட்டுள்ளது.

பெரும் சிரமங்களுக்கு மத்தியிலும், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருடன் இருப்பவர்களை மீட்கும் முயற்சி நேற்று (08) விரைவுபடுத்தப்பட்டிருந்தது. 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம் இடம்பெற்று 48 மணி நேரம் கடந்த நிலையிலும் பலரும் இடிபாடுகளில் இருந்து காப்பற்றப்பட்டு வருகின்றனர்.

இடிபாடுகளில் உறையும் குளிருக்கு மத்தியில் இரவை கழித்த குடும்பம் ஒன்று சிரியாவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இடிபாடுகளில் இருந்து பச்சிளம் குழந்தை உட்பட சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் காப்பாற்றப்பட்டு வரும் நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது.

பெரும் கொங்கிறீட், இரும்புத் தூண்களுக்குக் கீழ் சிக்கி இருப்போரை காப்பாற்றுவதற்கு கால அவகாசம் மணிக்கு மணி குறைந்து வருகிறது.

இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டு நேரப்படி துருக்கியில் புதன்கிழமை காலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 8,574 ஆக அதிகரித்திருந்ததோடு சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 2,662ஐத் தொட்டிருந்தது.

இதன்மூலம் இந்த பூகம்பம் 21ஆம் நூற்றாண்டின் அதிக உயிர்ப்பலி கொண்ட இயற்கை அனர்த்தமாக உருவெடுத்து வருகிறது.

தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்கான காலம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் எச்சரித்துள்ளார்.

பூகம்பம் ஏற்பட்டு இரண்டு நாட்களை எட்டிய நிலையில் பூகம்பம் இடம்பெற்ற மையப் பகுதிக்கு அருகில் உள்ள கரமன்மராஸ் நகரில் இருந்து 3 வயது சிறுவன் ஒருவன் இடிபாடுகளில் இருந்து காப்பாற்றப்பட்டான். சில மணி நேரங்களின் பின்னர் அடியமான் நகரில் 10 வயது சிறுமி ஒருவர் இடிந்த அவரது வீட்டில் இருந்து காப்பாற்றப்பட்டார்.

உயிர் தப்பியோரை மீட்கும் பணியில் துருக்கியின் 24,000க்கும் அதிகமான அவசர சேவை பிரிவினருடன் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தேடுதல் குழுக்கள் இணைந்துள்ளன.

எனினும் மீட்புக் குழுக்களின் வருகை தாமதம் அடைவதாக பாதிக்கப்பட்டவர்கள் சாடுகின்றனர். “எனது சகோதரனை இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் உள்ளது. எனது மருமகனை மீட்க முடியாமல் உள்ளது. இங்கே சுற்றிப்பாருங்கள் அரச அதிகாரிகள் யாரும் இல்லை” என்று கரமன்மராசைச் சேர்ந்த அலி சகிரொக்லு ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.

துருக்கியின் 85 மில்லியன் மக்கள்தொகையில் 13 மில்லியன் பேர் இந்த பூகம்பத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அந்நாட்டு ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் 10 மாகாணங்களில் அவசர நிலையை அறிவித்துள்ளார். அவர் நேற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேல் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில் மீட்பு பணிகள் மற்றும் உதவிகள் வருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் உறங்கிக் கொண்டிருந்த அதிகாலையில் ஏற்பட்ட பிரதான பூகம்பத்திற்கு பின்னர் 12 மணி நேரம் கழித்து 7.6 ரிக்டரில் மற்றொரு சக்திவாய்ந்த பூகம்பம் பதிவானதோடு அங்கு தொடர்ந்து 100க்கும் அதிகமான அதிர்வுகள் பதிவாகி உள்ளன.

இதனால் மக்கள் கட்டடங்களில் வசிக்க பயந்து வெட்ட வெளிப் பகுதிகளில் கூடாரங்களில் வசித்து வருகின்றனர். உறையும் குளிர் மற்றும் வீதிகள் சேதமடைந்திருப்பது மீட்புப் பணிகள் மற்றும் உதவி விநியோகங்களிலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here