பிரான்ஸ்: கொப்பிகள் பென்சில், எழுதுதாள் விலை உயர்வு; உதவிப் பணத்தைக் கூட்டக் கோரிக்கை!

0
187

பிரான்ஸில் கோடைகாலப் பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டது. எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள் மீண்டும் தொடங்கும் சமயத்தில் வாழ்க்கைச் செலவுச் சுமை மேலும் அதிகரிக்கும் என்று பெற்றோர்கள் சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

கொரோனா பெருந் தொற்று நோய், உக்ரைன் போர் என்பன காரணமாக ஏற்பட்டிருக்கும் மூலப் பொருள்களது பற்றாக்குறை, விலையேற்றம் அப்பியாசக் கொப்பி,எழுது கருவிகள், காகிதாதிகள் போன்ற பாடசாலை உபகரணங்களின் விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. உலக அளவிலான அச்சுத் தாள்களின் தட்டுப்பாடு கொப்பிகள் மற்றும் எழுதுதாள்களின் தயாரிப்புச் செலவுகளைப் பாதித்திருப்பதால் சந்தைகளில் அவற்றின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

புதிய கல்வியாண்டு தொடங்கும் போது மாணவர்களது பாடசாலை உபகரணங்களின் விலைகள்(Prix des fournitures scolaires) 20-25 வீதத்தால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பண வீக்கத்தையும் பொருள்களின் விலையுயர்வையும் கருத்திற் கொண்டு மாணவர்கள் பள்ளி செல்வதற்காக அரசினால் வழங்கப்படுகின்ற உதவி நிதியை (l’allocation de rentrée ARS) அதிகரிக்குமாறு பெற்றோர் – மாணவர் சங்கங்களின் சம்மேளனம் (La Fédération des conseils de parents d’élèves – FCPE) அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அரசின் பள்ளிசெல்வதற்கான உதவிக் கொடுப்பனவு ஆண்டு தோறும் ஒகஸ்ட் மாத நடுப்பகுதியில் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. பள்ளி செல்கின்ற 6 முதல் 18 வயதுகளுக்கு இடைப்பட்ட சகல மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு பெற்றோர்களது ஆண்டு வருமானத்தைக் கணக்கில் கொண்டு வழங்கப்படும்.

இந்த முறை-

6 – 10 வயதினருக்கு : €376.98

11 – 14 வயதினருக்கு : €397.78

15 – 18 வயதினருக்கு : €411.56

என்ற தொகைப்படி பெற்றோர்களது வங்கிக் கணக்கிற்கு இந்தக் கொடுப்பனவு செலுத்தப்படும்.

விலைவாசி உயர்வை அடுத்து அரசின் உதவிக் கொடுப்பனவு கிடைப்பதற்கு முன்பாகவே பள்ளி உபகரணங்களைக் கடைகளில் தேடி மலிவாக வாங்கும் முயற்சியில் பெற்றோர்களும் மாணவர்களும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

01-07-2022 ThasNews – Paris.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here