நெல்லியடி 7 இளைஞர்கள் படுகொலையின் 16 வருட நிறைவு!

0
431

நெல்லியடிப் படுகாலை – 04.05.2006

நெல்லியடிப் பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இரு முச்சக்கரவண்டிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நடாத்திய தாக்குதலில் 07 இளைஞர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 16வருடங்கள் நிறைவு!

04.05.2006 அன்று வியாழக்கிழமை மதியம் 01 மணியளவில் இரு முச்சக்கரவண்டியில் 07 இளைஞர்கள் தமது நண்பரொருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் நெல்லியடிச் சந்திக்கும் நாவலர் மடத்திற்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த இரு முச்சக்கரவண்டிகள் மீதும் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு மற்றும் ஆர்.பி.ஜிகளால் தாக்குதல் நடத்தினர். இதில் 07 பேரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவல்களின் அடிப்படையில், அப்போது நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டிகள் இரண்டும் அவ்வழியில் நின்ற இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அத்துடன் அவர்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனை செய்யப்பட்டபின் அவர்களை தொடர்ந்து பயணிக்க இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். அவர்கள் புறப்பட்டு சில மீற்றர்கள் சென்ற நிலையில் இராணுவத்தினரால் இரு முச்சக்கரவண்டிகள் மீதும் துப்பாக்கிச்சூடு மற்றும் ஆர்.பி.ஜி தாக்குதல் நடாத்தப்பட்டது. அதில் சம்பவ இடத்திலேயே 07 பேரும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடாத்தியபின் பொதுமக்கள் யாரையும் சம்பவ இடத்திற்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லையெனவும், அவ்வீதியில் 10 மீற்றர்களுக்கொருதடவை இராணுவத்தினர் நின்றிருந்தனர் எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

கொல்லப்பட்டோர் விபரம் :

  1. நாகரட்ணம் நகுலேஸ்வரன் என்பவர் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒரு கூலித் தொழிலாளியாவார். அவர் திருமணம் செய்து, மனைவி 04 மாதக்கர்ப்பிணியாக இருந்தார். மனைவியின் தகவலின் அடிப்படையில் பிறந்தநாளுக்குச் சென்றவர் கொல்லப்பட்டதாக தனக்கு 04 மணிக்கே தகவல் சொல்லப்பட்டது எனவும், தனது கணவனின் உடல் சிதைந்த நிலையில் இருந்ததாக தெரிவித்திருந்தார்.
  2. சுப்பிரமணியம் சுபாஸ் என்பவர் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞராவார். அவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். பிறந்த நாளுக்கென சென்ற தனது மகன் இராணுவத்தினராலும், ஈபிடிபியினராலும் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் கடுமையாக சிதைந்திருந்ததாகவும் அவரது தந்தையார் தகவல் வழங்கியிருந்தார்.
  3. தாமோதரம்பிள்ளை சைமன் என்பவர் கரவெட்டி இராஜகிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞராவார். அவர் தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். பிறந்தநாளுக்கென சென்ற தனது மகன் கொல்லப்பட்டதாக தனக்கு தகவல் தெரிந்ததாகவும், அதையடுத்து தான் சம்பவ இடத்திற்குச் சென்ற போது தனது மகனின் உடலைக் கண்டதாகவும், அது கடுமையாக சிதைந்திருந்தாகவும் அவரது தந்தையார் தெரிவித்திருந்தார்.
  4. பாலச்சந்திரன் கிரிகாந்தன் என்பவர் கரவெட்டி இராஜகிராத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞராவார். அவர் குழாய்க்கிணறுகள் அமைக்கும் தொழில் செய்துவந்துள்ளார். தந்தையார் குடும்பத்தை விட்டுப்பிரிந்த நிலையில் தனது சகோதரன் தரம் 06 உடன் பாடசாலைக்கல்வியை நிறுத்திவிட்டு வேலைகளுக்குச் சென்று தங்களது குடும்பத்தைப் பார்த்தாகவும், அவரது உழைப்பிலேயே குடும்பம் இருப்பதாகவும், தனது சகோதரன் உடல் முழுமையாக சன்னங்களால் துளைக்கப்பட்டிருந்ததாகவும், அவரது சகோதரி தெரிவித்திருந்தார்.
  5. நவரட்ணராஜா நாசன்னா என்பவர் கரவெட்டி இராஜகிராத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞராவார். அவர் குழாய்க்கிணறுகள் அமைக்கும் தொழில் செய்துவந்துள்ளார். அவரது உடல் கடுமையாக சிதைந்திருந்ததாக அவரது சகோதரன் தெரிவித்திருந்தார்.
  6. செல்வராசா சுமன் என்பவர் கரவெட்டி இராஜகிராத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞராவார். அவர் திருமணமாகி சில காலங்களிற்குள் கொல்லப்பட்டார்.
  7. வேலுப்பிள்ளை நிர்மலன் என்பவர் கரவெட்டி இராஜகிராத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞராவார். அவர் கூலித்தொழிலாளி ஆவார். அவர் திருமணமாகி சில காலங்களிற்குள் கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கடுமையாக சிதைந்திருந்ததாகவும், அதில் 05 பேரின் உடல்கள் திறக்கப்பட முடியாதவாறு பொலித்தீன் பைக்குள் சுற்றப்பட்டே தமக்கு கையளிக்கப்பட்டிருந்தாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here