
by News Desk (G.P)35 minutes ago198Views
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆகிய நாங்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தில் அரசியல் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி இன, மத பேதங்கள் இன்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மன்னார் நகர பேருந்து தரிப்பிடம் முன் இன்று (30) காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே உதயசந்திரா அவ்வாறு தெரிவித்தார். மேலும்,
“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும்,காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டு பிடித்து தரக் கோரியும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினத்தை பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாங்கள் கரி நாளாக அனுஷ்டிக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்ற உரிமையுடனும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை இன்று வீதிகளில் தேடிக் கொண்டுள்ள தாய்மார்கள் என்ற அடிப்படையிலும் உங்களிடம் ஆதரவு கேட்டு நிற்கின்றோம்.
எமது போராட்டத்தை சர்வதேச ரீதியில் வலு சேர்க்கும் வகையில் சர்வதேசம் எங்கள் மீது தமது பார்வையை செலுத்தியுள்ள நிலையில் மேலும் வலு சேர்க்கும் வகையிலும் அனைவருடைய ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம்.” என்றார்.