
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களாகியுள்ளன. இந்த ஒன்றரை மாதங்களிலும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்க முடியாத நிலையில் தான் எங்களுக்குப் போட்டியாகவுள்ள தரப்புக்களோ, சிறிலங்கா அரசோ இருந்திருக்கிறது. பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் எங்களுக்கு உரிய பதிலை வழங்க முடியாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களைக் குழப்புவதற்காகப் போலியான செய்திகள் பரப்பப்படலாம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தல் காலத்தில் கூட தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனும் எங்கள் மீது மோசமான பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தனர். ஊடகங்களில் பொய்யான கருத்துக்கள் வெளியிடுவதற்கு முன்னர் எங்களிடம் ஒரு வார்த்தையேனும் கேட்காமல் மக்களை எங்களுக்கெதிராகத் திருப்பும் வகையில் ஊடகங்கள் செயற்பட்டன.
இந்த முறையும் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறலாமென நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடாத்தி ஊடக அறத்தைச் சரியான கோணத்தில் கடைப்பிடித்து இவ்வாறான அரசியல் மோசடிகளுக்குத் துணை போக வேண்டாமென ஊடகங்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
ஊடகங்கள் நடுநிலை வகித்துச் செயற்படாவிட்டாலும் கூட மக்கள் இந்த முறை போலிக் குற்றச்சாட்டுக்களுக்குத் துணை போக மாட்டார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.