பிரான்சில் தமிழியல் மாணவர்கள் புதிய முயற்சி: ‘தொடரும் புறநானூறு’ நேரடி ஒலிபரப்பு!

0
1056

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு மாணவர்களால் நாடகத்துறையில் புதிய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘தொடரும் புறநானூறு’ எனும் தலைப்பிலான நாடகமொன்றை காயலை (SKYPE) ஊடாக நேரடியாக ஒலிபரப்புச் செய்துள்ளனர்.

இந்த நேரடி ஒலிபரப்பில் இலங்கை, இந்தியா, இங்கிலாந்து,பிரான்சு போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்குபற்றிச் சிறப்பித்ததோடு தமது திறனாய்வுகளையும் பாராட்டுகளையும் நேரடியாகவே பகிர்ந்துள்ளனர்.


தற்போது நடைமுறையில் இருக்கும் கோவிட் 19 உள்ளிருப்பைப் பயன்படுத்தி நாடகத்தில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது வீடுகளிலேயே இருந்தபடி காயலை (SKYPE) ஊடாக ஒத்திகை பார்த்ததோடு இறுதி நேரடி நிகழ்வையும் தமது வீடுகளில் இருந்தபடி காயல் ஊடாகவே நிகழ்த்தியுள்ளனர்.
தமிழின அழிப்பு மே 18 நிகழ்வையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் புதிய முயற்சி, முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் போர்க்குற்றங்கள் விசாரணைக்கான முக்கியத்துவத்தை இடித்துரைக்கும் வகையிலும் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவன் பரமலிங்கம் தனபாலன் அவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த கவிதையும் இடம்பிடித்தது.

நாடகத்தின் நிறைவில் அதில் பங்குபற்றிய மாணவர்கள் தம்மையும் தமது பாத்திரங்களையும் அறிமுகம் செய்திருந்தமை சிறப்பாக அமைந்திருந்தது.

அவர்களின் விபரம் வருமாறு:-

காலச்சாட்சியமாக கதை சொன்னவர் – நேசராசா சங்கீர்த்தனன்.
பிரான்சில் முகாமைத்துறை கற்கையும் அதாவது assistant manager ஆக கல்வி கற்கிறார் மற்றும் தமிழியல் பட்டப்படிப்பில் முதலாம் வருட மாணவனாக உள்ளார்.

ஔவைக்கு அருங்கனியை உவந்தளித்த அதியமானாகவும் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியாகவும் – சிறிகந்தராசா தமிழ்ப்பிரியன் .
பிரான்சில் வரியிருப்புத் துறை (international and european tax law) முதுகலைமாணி இறுதியாண்டு மேற்கொள்கிறார். தமிழியல் இளங்கலைமாணியில் இரண்டாம் ஆண்டை மேற்கொள்கிறார்.

அறம்பாடி போரைத் தடுத்த ஔவை – குகதாசன் மாதங்கி .
பிரான்சில் கணக்கியலில் (Accounting) இரண்டாவது வருட மாணவியாகவும், தமிழ்ப் பட்டப்படிப்பில் முதலாவது வருட மாணவியாகவும் உள்ளார்.

தகடூரை வெற்றி கொண்ட இரும்பொறையாகவும் என்றும் இளமையான பிசிராந்தையாகவும் – அன்ரனி ஜெராட் வென்சிலாஸ் .
“தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பின்” முதலாம் ஆண்டு மாணவராக உள்ளார்.

பாரி மன்னனின் மந்திரியாகவும் முரசுக் கட்டிலில் படுத்துறங்கிய மோசிகீசனார் – இராசலிங்கம் ரொஷான் .
பிரான்சில் பொதுத்துறைப் பொறியியலாளராகவும் (General Engineer) உலோகவியலாளராகவும் (Material Scientist) பணியாற்றுவதுடன் தமிழியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டை மேற்கொள்கிறார்.

பாரியின் காட்சியிலும் போர்க்காட்சியிலும் தாயாக வந்தவர் – சிவகணேசன் சிந்தூரி .
பிரான்சில் Management அதாவது முகாமையியல் இளங்கலைமாணிப் பட்டப்படிப்பில் இறுதியாண்டை மேற்கொள்வதுடன் தமிழியல் இளங்கலைமாணியில் 2ஆம் ஆண்டு மாணவியாக உள்ளார்.

இரும்பொறையை இடித்துரைத்த மகள் – முருகதாஸ் தவேதினி .
பிரான்சில் தரவு விஞ்ஞானி அதாவது data scientist ஆக உள்ளார் மற்றும் தமிழியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவியாக உள்ளார்.

தொடர்ந்து இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் எமது ஊடகப்பிரிவிடம் தெரிவித்துள்ளனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here