பிரான்சில் நாடளாவிய ரீதியில் இரத்தப் பரிசோதனை!

0
716

நாடளாவிய ரீதியில் தனது சனத்தொகையில் பெரும் பங்கினரை இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டம் ஒன்றுக்கு பிரான்ஸ் தயாராகிவருகிறது.

தற்போது மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்திருக்கும் ‘உள்ளிருப்புக் காலம்’ ( Confinement) முடிவடைந்ததும் இந்த மாபெரும் இரத்த மாதிரிப் பரிசோதனை (Serological test) பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருப்போருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் அதேநேரம் நாட்டு மக்களிடையே எந்தளவுக்கு வைரஸ் ஊடுருவி உள்ளது என்பதை அறிய இந்தப் பரிசோதனை நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை இரத்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும் வசதி தற்சமயம் உலகில் எங்கும் இல்லை. நோயாளியின் சளி, துப்பல் மற்றும் வாய் வழியான தொண்டைப் பரிசோதனைகள் மூலமே அது கண்டறியப்பட்டு வருகிறது.

பிரான்ஸில் இந்த நடைமுறை மூலம் தினசரி 5ஆயிரம் பேர் சோதிக்கப்படுகின்றனர். அடுத்துவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை 29 ஆயிரம் பேராக அதிகரிக்கப்படவுள்ளது.

இரத்தப் பரிசோதனை மூலம் புதிய கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் உயிரியல் நிபுணர்களின் உதவியோடு உள்நாட்டிலும் உலக அளவிலும் தொடங்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்தப் பரிசோதனை நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் அதன்பின் மக்கள் சாதாரணமாக இரத்தப்பரிசோதனை செய்து கொரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய வாய்ப்ப்பேற்படும் எனவும் சுகாதார அமைச்சு வட்டாரங்களை ஆதாரம் காட்டி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பிரெஞ்சு சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை சாடைமாடையாக வெளியிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

விரைவிலேயே நாடெங்கும் உள்ள இரத்தப் பரிசோதனை கூடங்களில் சாதாரணமாக ‘கொலஸ்ட்ரோல்’ பரிசோதிப்பது போன்று கொரோனா சோதனையையும் மக்கள் தாங்களாகவே செய்துகொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

(நன்றி: குமாரதாஸன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here