வவுனியாவில் பொதுக்காணியைத் துப்புரவுசெய்ய இராணுவத்தினர் தடை: மக்கள் ஆர்ப்பாட்டம்!

0
380

vavuniyaஇலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முஸ்லிம் ஊராகிய ஆண்டியாபுளியங்குளம் கிராமத்தில் பொதுத் தேவைக்குரிய காணிக்காக போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

பொதுத் தேவைக்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் காணியைத் துப்புரவு செய்தபோது அந்தக் காணி தமக்கே சொந்தமானது என உரிமை கோரி, இராணுவத்தினர் தடை செய்திருந்ததையடுத்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றிருக்கின்றது.

பொது விளையாட்டு மைதானம் ஒன்றும், ஆரம்பப் பாடசாலை ஒன்றும் இங்கு அமைப்பதற்கென அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமாகிய ரிசாட் பதியுதீன் அவர்கள் நிதியொதுக்கீடு செய்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.

சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றபோது அங்கு சமூகமளித்த அந்தப் பிரதேசத்துக்குப் பொறுப்பான இராணுவ முகாமின் உயரதிகாரி ஒருவர் இந்த விடயம் குறித்து அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர், திங்கட்கிழமை பேச்சுக்கள் நடத்தி தீர்வு காணப்படும் என்று போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

ஆயினும் சனிக்கிழமை இரவோடு இரவாக அந்தக் காணியைச் சுற்றி முள்ளுக்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்ததை மறுநாள் காலை கண்ட ஊர் மக்கள் ஒன்று திரண்டு இராணுவத்திற்கும் அரசுக்கும் எதிராகக் கண்டனங்களை வெளியிட்டு இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அந்த ஊரைச் சேர்ந்தவரும், செட்டிகுளம் பிரதேச சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமாகிய முகமட் முஸ்தபா சாஜுடீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, செட்டிகுளம் பிரதேச சபைத் தலைவர், பிரதேச செயலாளர், இராணுவ பொலிஸ் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுடன் பேச்சுக்கள் நடத்தி, 15 நாட்களுக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளதையடுத்து, இப்போதைக்கு இந்தப் பிரச்சினை ஓய்ந்திருக்கின்றது’ என்று செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சாஜுடீன் கூறினார்.

இந்த விடயம் குறித்து அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு சனியன்று கொண்டு வரப்பட்டிருந்த போதிலும், ஞாயிறன்று அவர் வெளிநாடு சென்றிருப்பதாகத் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்ததனால், அவருடன் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாமல் போயுள்ளது என்றும் சாஜுடீன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியவுடன் பிபிசி தொடர்பு கொண்டு கேட்டபோது, இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துரைத்தார்.

அத்துடன், பொதுமக்களின் காணிகளையோ அல்லது பொதுத் தேவைக்குரிய காணிகளையோ தாங்கள் கைப்பற்றவில்லை என்றும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காணிகளுக்கே தாங்கள் சென்றிருந்ததாகவும் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here