மாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை! – ச.ச.முத்து

0
197
lathan-300x1492008 மாவீரர் நாளுக்கு பின்பாக இப்படியான ஒரு உரை மிக அரிதாகவே கேட்க முடிகின்ற சூழலில் லதனின் உரை பற்றிய ஒரு சிறு பகுப்பை இதனூடு செய்ய முனைகிறது இந்த பொழிப்புரை. வெறும் உணர்ச்சிகர உரைகளும், திருக்குறள் மேற்கோள்களும் நிறைந்துவிட்ட மாவீரர்நாள் உரைகளுள் அடுத்த போராட்டத்துக்கான பயணக்குறிப்பு சம்பந்தமான ஒரு உரையாகவே லதனின் உரையை பார்க்கலாம்.
என்ன இருக்கப் போகிறது..வீரமுடன் கைகளை மடக்கி முஸ்டி நீட்டி முடியும் ஏதோ ஒரு பாடலுக்கான நடனங்களும், மாவீரரை பயங்கரவாதிகள் என்று பிரகடனப்படுத்திய அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் எந்தவித சலனமும், நீதி தவறிய நெடுஞ்செழிய குற்ற உணர்வும் அற்றவர்களாக மேடை ஏறி வாக்கு அரசியலுக்காக மாவீரரை புகழ்ந்தேத்தும் உரைகளும் என்று மிக வழமையாகவே இம்முறையும் இருந்து விட்டு போகிறது என்ற எண்ணத்துடன் மாவீரர் பாடலும், விளக்கேற்றலும் முடிந்து மலர் வணக்கத்துடன் வீடு திரும்பியதால் தவறவிட்ட லதனின் உரையை யூரியூப்பிலேயே முழுமையாக பார்க்க முடிந்தது.

பொதுவாகவே எங்கள் அமைப்புகள் எல்லாவற்றிலும் ஒரு பொதுக்குறைபாடு இருப்பதை காணமுடியும். மேற்கின் சட்டதிட்டங்கள் வரையறை செய்த உரிமைகளின் கீழ்விளிம்பில் மட்டுமே நின்று செயற்படுவதே அது.வரையறுக்கப்பட்ட உரிமையின் ஆகக்கூடிய மேல்விளிம்பை தொடும் முயற்சிகள் பெரிதாக இல்லை.(2009 ஏப்ரல்,மே மாதங்களில் மேல்விளிம்பை தொட்ட நிகழ்வுகள் உள்ளன).
இதற்கான காரணமாக நாம் தொடர்ந்து காலனி ஆட்சிகளின் நிலமாக மிக நீண்டகாலம் முடங்கி வாழ்ந்ததால் ஏற்பட்ட அடிமைக் குடியுரிமை எண்ணமும் கொலனி ஆட்சியாளர்களை எசமானர்களாக நினைத்தேந்தி வணங்கிய வாழ்வியலும் மனோவியலும் நிறைந்ததாகவே எங்கள் டிஎன்ஏக்கள் வழிகின்றன என்பதாகும்.

லதனின் உரை மிகத்தெளிவாக இந்த மேற்குலகின் வரையறை செய்யப்பட்ட சட்ட திட்டங்களினதும், மானுட உரிமை பிரகடனங்களினதும் மேல் விளிம்பு வரை சென்று தட்டிக் கேட்கச் சொல்லும் ஒரு உரையாகவே இருந்தது.

எந்தவொரு சுற்றிவளைத்த ராஜதந்திர தெளிதல்களும் சுழிப்புகளும் இல்லாமல் நேரடியாகவே விசயத்துக்கு வருகிறார் லதன்.’ நாங்கள் இங்கே பிரித்தானியாவில் எமக்கிருக்கும் சனநாயக உரிமைகளை பயன்படுத்தி ஒன்றாக கூடி இருக்கின்றோம்.
ஆனால் எமது மாவீரர்களை ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்களாகவே பிரித்தானிய அரசு கருதுகிறது.’கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு அது பெரும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.

அட எங்கள் மாவீரர்களை பயங்கரவாதிகளாகவா இன்னும் வைத்திருக்கிறார்கள் என்று.ஆனால் தடைசெய்து நீண்ட நாட்களாகி விட்டதாலும், இதனை பேசாப்பொருளாகவே எம் அமைப்புகள் இன்றுவரை இதனை தொடாமல் அரசியல் செய்யலாம் என்ற நினைப்புடன் தொடர்வதாலுமே மக்கள் இதனை மறந்திருக்கிறார்கள்.

லதன் இப்படி கூறியதும் மக்களுக்கு ஒரு எண்ணம் ஒரு கேள்வி நிச்சயம் தோன்றி இருக்கும். இது ஒரு சுவாரசியமான மனோரீதியான பேச்சு.முதலில் ஒரு செய்தி.கசப்பாக இருந்தாலும் சொல்லியே ஆகவேண்டிய செய்தியை சொல்லி மக்களை யதார்த்தத்துக்கு கொண்டுவந்து அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பேச்சு. தொடர்கிறார் லதன்.சில அடிப்படையான வியடங்களை பேசாப்பொருளாக வைத்திருந்து எம்மை நாமே ஏமாற்றிகொள்ள கூடாது.

ஐரோப்பியஒன்றியம் தடைசெய்து இருக்கின்றது என்பதை மூடிமறைத்து அதனைப் பேசத்துணியாமல் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் என்பதை வெறுமனே சிங்களபேரினவாதத்தை சர்வதேச அரங்கில் தண்டித்தல் என்பது மட்டுமே நோக்கம் என்றளவில் செயற்படும் அமைப்புகளாகிய எம் எல்லோரையும் நோக்கியதாகவே அந்த கோரிக்கை அமைந்திருந்தது.

ஒரு விடுதலைக்கு போராடும் மக்களுக்கு, விடுதலைக்கு போராடும் அமைப்புக்கு இருந்தாக வேண்டிய அடிப்படையான கொள்கைரீதியான நெறிநிலை முடிவை பற்றி எடுத்து சொல்ல தேசியதலைவரின் 2006ம்ஆண்டின் அறிவிப்பை மேற்கோள் காட்டி சொன்னது நல்லதொரு உதாரணம்.

ஒரு தேசியவிடுதலைப் போராட்டம் வளர்ச்சியடையும் போது அது விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச மயப்பட்டே ஆகவேண்டும்.சர்வதேச மயப்படுவதன் ஊடாகவே அது விடுதலையை வென்றிடவும் முடியும்.

இந்த நேரத்தில் சர்வதேசத்தின் பூகோள-வல்லரசு-பொருளாராத அரசியல் என்ற பெரும் சுளியின் பலத்த பிரேரணைகள், ஆலோசனைகள், வீரியம் குறைக்கும் அறிவுரைகள் என்பனவற்றை உள்வாங்கி நகர வேண்டிய தேவையும் விடுதலைப் போராட்டத்துக்கு வந்து சேருகின்றது.

சர்வதேசம் தரும் எந்த எந்த மாற்றீடுகளை ஏற்பது என்பதும் எது எதை மறுப்பது என்பதும் ஒரு முக்கியமான விடயம்.இந்த ஒரு இடத்தில்தான் கடும்போக்காளர்களாக கருதப்படும் ஒரு அபாயகரமான வளைவும் இருக்கிறது.

ஆனால் மிகமிக அடிப்படையான விடயங்களில் ஒருபோதும் ஒரு விடுதலை அமைப்பு சமரசம் செய்வது இல்லை.அதிலும் உறுதியும் தீரமும் அர்ப்பணமும் நிறைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் விடுதலையின் மிக அடிப்படையான விடயமான தேசிய விடுதலை அமைப்பு அதன் தடையற்ற செயற்பாடு என்பனவற்றில் மிக நேர்த்தியான நெறிநிலையிலேயே நின்று வந்துள்ளது.

இதனையே லதனும் தன் உரையில் பல இடங்களில் ‘அடிப்படையான விடயங்களை பேசாப்பொருளாக வைத்திருக்க கூடாது ‘ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

தடையை பற்றி கதைத்தால் அவன் போர்க்குற்றத்தை எடுக்க மாட்டான்,தடையை பற்றி கதைத்தால் அவன் எம்மை பயங்கரவாதி என்று நினைத்து விடுவான் என்று எமக்கு நாமே போட்டிருக்கும் வளையங்களை உடைத்தெறிந்து எமக்காக உலகம் அறிந்திராத சரித்திரம் இதுவரை கேள்விப்பட்டிராத தியாகங்களை அர்ப்பணங்களை செய்து உறுதியுடன் நேர்மையுடன் போரிட்ட ஒரு அமைப்பை வரலாற்றின் அவப் பெயரில் இருந்து வெளியே எடுப்பதுதான் உண்மையான மாவீரர் வணக்கமாக இருக்க முடியும் என்பதை ‘இந்த தடையை உடைத்தெறிந்த பின்னர் நாம் மாவீரருக்கு செலுத்தும் அஞ்சலிதான் அர்த்தமுள்ள ஒன்றாக அமையமுடியும் ‘என்று அழுத்தமாக கூறினார்.
மாவீரரின் கனவுகளை நனவாக்குவதற்கு முதலில் செய்ய வேண்டியதை சொல்லும் போது ‘ தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையாக மாற்றும் அளவுக்கு இலங்கைத்தீவின் அகச்சூழல் காரணமாக இல்லை.

இலங்கைத்தீவுக்கு இருக்கும் புறச்சூழலே அதற்கு காரணம் ஆகிறது.’என்று சொல்லிவிட்டு அதற்கு தீர்வும் சொல்கிறார்..எப்படி ‘ இந்த புறச்சூழலை எதிர்கொள்ள தயாரானாலே மாவீரரின் கனவை எம்மால் நனவாக்க முடியும்’என்று.

வடிவாக கூர்ந்து கவனித்தால் அவர் ஒன்றை அழுத்தி சொல்கிறார் ‘இந்த புறச்சூழல் எதுவென்று முதலில் தெளிவு வேண்டும்.பிறகு அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.தமிழீழ விடுதலை என்பதை ஒரு சனநாயக முறையிலான கோரிக்கை என்று லதன் குறிப்பிடுவது ‘ தமிழீழத்துக்கான கோரிக்கையை முன்வைத்த தேர்தலில் கிடைத்த வாக்குகளை அதன் மூலமான சனநாயக ஒப்புதலை குறிப்பிட்டே.
இத்தகைய தமிழீழ விடுதலை என்ற சனநாயக கோரிக்கையை முன்வைக்கும் எவரையும் விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்தக்கூடிய அபாயம் ஒன்றே அதனை உடைத்தெறிய வேண்டிய தேவையை உருவாக்கியதாக லதன் குறிப்பிட்டார்.

இதே நிலைப்பாடு தொடர்ந்தால் மக்கள் போராட்டம் ஒன்றின் மூலமே மாற்றமுடியும் மாற்ற வேண்டும் என்று லதன் இறுதியாக குறிப்பிட்டு இருந்தது ‘ மக்கள் ஒன்றிணைந்த போராட்டங்களை அமைப்புகள் கட்டி எழுப்ப வேண்டிய தேவை இருப்பதை சுட்டி காட்டியே..
ஆழமான உரை..எல்லோருக்குமான உரை…

– ச ச முத்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here