கோயிலில் ஆட்கள் குறைந்து கொஸ்பிற்றலில் கூடிய காதை!

0
476

மண் வீட்டில், பூவரசம் வேலிச் சலசலப்பில், வீட்டின் தலைவாசல் திண்ணையில், பழங்கஞ்சி குடித்து துலா மிதித்து தண்ணீர் பாய்ச்சி வயல் விதைத்து நெல் அறுவடை செய்து பச்சைப் பெருமாள் அரிசியில் கஞ்சி காய்ச்சிக் குடித்த காலம்.

மொட்டைக் கறுப்பன் அரிசியில் சோறு; பட்டி தந்த பால் நெய்; வீட்டு முற்றத்து வேப்பம் பூவில் செய்த வடகம்; உழுத்தம் களிப் பிட்டு; ஒடியல் கூழ்;  புழுக்கொடியல் மாக் குழையல் உணவாய் உண்டிருந்த காலத்தில் ஒரு வியாதியும் இல்லை.
சலரோகம், உயர் குருதி அழுத்தம், புற்று நோய், மாரடைப்பு, எதுவும் கிட்ட நெருங்காத பாலை மரத்து வைரத்தில் உடல் ஆரோக்கியம்.
ஆனால் இன்று எல்லாம் அதிரடி. இரண்டு நிமிடத்தில் அவியும் நூடில்ஸ், நொறுக்கு மிக்சர், நஞ்சு தெளித்த கீரை, கூடிய விளைச்சல் என்ற பேராசையில் கொட்டிப் பரவிய உர வகைகள், வாழைப்பழத்துக்கு அபிஷேகம் செய்யும் போமலின் மருந்து, வெளிநாட்டில் இருந்து பிள்ளைகளின் வரவுக்காக காத்திருக்கும் தந்தையின் பூதவுடல்போல ஏழெட்டு நாள் குளிர்கட்டிக்குள் அடங்கிக் கிடக்கும் மீன்கள்.
போதாக்குறைக்கு 45 நாளில் மாரடைப்பு வந்த புறொயிலர் கோழி, இதுதான் போதாதோ என்றால், புறொயிலரின் பேரன்ட் என எல்லா மும் சேர்ந்து எங்கள் ஆரோக்கியத்தை நாச மாக்கி, இனிய வாழ்வை வேதனையாக்கி இந்த உலகத்தையே நரகமாக்கிவிட்டது.
பதற்றம், பதகழிப்பு, அவசரம் என இயந்திர வாழ்வாகிப்போக, ஆலயங்களில் ஆட்கள் இல்லை, அடியார் கூட்டம் இல்லை என்றாகி; இறைவனை வழிபாடு செய்வது, கோயிலில் கூடுகின்ற உறவுகள் சந்தித்துக் கதைத்து ஆறுதல் அடைவது, கடவுளைத் தூக்கி வருவது, அங்கு இசைக்கப்படும் மங்களவாத்தியத்தில் மனம் மகிழ்வது.
சுண்டல், கடலை, நிறையுணவு மோதகம் என்ற பிரசாதங்கள் என எதுவும் இல்லை என் றாகிப் போக,
கோயில்களிலும் மேளம் மணி யாவும் மின் சார சாதனங்களாகிவிட்டன. சுவாமி காவும் வண்டில்களும் இயந்திரமாகிக் கொள்ள, இப் போது ஆட்கள் கொஸ்பிற்றல்களில் கூடிக் குவிந்து பரீட்சைப் புள்ளி போல சுகர் வீதம் கதைத்துவிட்டு, காசைக் கட்டி குளிசை எடுத்து; நாம் மறந்துபோன மூன்று நேரப் பாராயணத் துக்குப் பதிலாக ஒரு சிறங்கை மாத்திரையை மூன்று வேளை விழுங்கி வாழ்கின்றோம்.
அந்தோ! இப்போது சிறுநீரக வியாதியும் எங் களிடம் அதிகரிக்குதாம். குடிநீரெல்லாம் யூரியா உரமாகிப் போனால், சிறுநீரகம் என்ன தண்ட வாளத்து இரும்போ நின்று பிடிப்பதற்கு.
ஓ இறைவா!  அன்றைய எங்கள் ஆரோக்கியம் எப்போது மீண்டும் திரும்ப வரும் என்ற இந்த ஏக்கமும் என்ன வியாதியைத் தருமோ யாரறிவார்.

(valampuri)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here