எமது பிள்ளைகளுக்கு மொழிமட்டுமல்ல எம் வரலாறும் தெரியவேண்டும்!

0
2670
புலம்பெயர் வாழ் தமிழ்ச் சிறார்களின் தாய்மொழிக் கல்விக்கு வழிசமைக்கும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பிரான்சு அலுவலகத்தில் அதன் சமகால செயற்பாடுகள் குறித்த ஈழமுரசுடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரட்ணம் மற்றும் ஆசிரியர் குழுவினர் ஈழமுரசுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இது.

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையின் உருவாக்கத்தின் நோக்கம்  குறித்தும் அதன் செயற்பாடுகள் குறித்தும் குறிப்பிடுங்கள்?

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ்ப்பெற்றோர்களின் பிள்ளைகள் பல்வேறு நாடுகளில் வாழ்கின்றபோதும் கல்லெறிபட்ட கூட்டுப்பறவைகள் போல் அவர்களின் வாழ்வியல் முறை சிதறிவிடாமல்  தாய்மொழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்டு தங்கள்  அடையாளத்தைக் காக்கவேண்டும். தங்கள் வேரை அறிய வேண்டும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழினம் ஒரு குடையின் கீழ் நிற்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இவ்வமைப்பு  14 நாடுகளுக்கு அதாவது பிரான்சு, பிரித்தானியா, யேர்மன்,  பெல்சியம், நோர்வே, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, சுவீடன், அவுத்திரேலியா, நியூசிலாந்து, கனடா, பின்லாந்து,  மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு வளர்தமிழ் பாடநூல்களை வழங்குகின்றது. எமது வளர்தமிழ்ப் பாடநூல்களில் இலக்கியம், இலக்கணம், வரலாறு  உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நூல்கள்

மழலையர்நிலை,
பாலர்நிலை,
வளர்தமிழ் 1
வளர்தமிழ் 2
வளர்தமிழ் 3
வளர்தமிழ் 4
வளர்தமிழ் 5
வளர்தமிழ் 6
வளர்தமிழ் 7
வளர்தமிழ் 8
வளர்தமிழ் 9
வளர்தமிழ் 10
வளர்தமிழ் 11
வளர்தமிழ் 12

வரை  உருவாக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பாடநூல்களாகவும் பயிற்சி நூல்களாகவும் மொத்தம் 25 நூல்களும் துணை நூல்களாக வாசித்தல் நூல்கள் : மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்ப்பதற்குரிய நூல்களாகவும் 1 – 4 வரை, 5 – 8 வரை, 9 – 12 வரை மாணவர்களின் பேச்சுத் திறனைத் தூண்டும் வகையில் படங்களை உள்ளடக்கிய கட்புல நூலும், இலக்கணத்தை விரும்பிக் கற்க கற்றல் வள இலக்கண நூல்களும்,  பட்டயக் கல்வி நூல்கள்  எனப்பலவாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் 46 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றின் பாடத்திட்ட ஒழுங்கமைப்பு வாழிட நாட்டின் பள்ளிகளின் பொதுக்கல்வித் திட்டத்தோடு இணைந்து செல்கிறது. இப்பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் மொழி கற்பதோடு மட்டுமன்றித் தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றையும் கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் சமய இன வேறுபாடுகள் அற்ற அரசியல் சாராத வகையில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் பாடநூல்கள்  உருவாக்கப்பட்டுள்ளன. இக் கற்றல் வள நூல்களை 14 நாடுகளில் உள்ள கல்விக்கழகங்களுக்கும் அனுப்பப்படுகின்றது. கல்விக் கழகங்கள் நூல்களைப் பெற்று அந் நாட்டின் வாழும் தமிழ்கற்கும் பிள்ளைகளுககு வழங்கி தமிழ்மொழியை ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக பிள்ளைகளின் அடைவுகளை அறிந்து கொள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் அனைத்துலகத் தேர்வு நடாத்தப்படுகின்றது. அவுத்திரேலியா, மொறிசியசு தவிர்ந்த ஏனைய நாடுகளில் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தேர்வு நடாத்தப்படுகின்றது. ஏனைய நாடுகளிலும் காலப்போக்கில் எமது வினாத்தாள் அடங்கிய தேர்வு நடாத்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. தேர்விலே மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன.

 

1. அரையாண்டுத் தேர்வு
2. புலன்மொழிவளத் தேர்வு
3. அனைத்துலக எழுத்துத் தேர்வு.  

அரையாண்டுத்தேர்வு

மாதிரி வினாத்தாள் ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் இறுதிச் சனிக்கிழமை நடைபெறுகிறது. அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் தமிழர்கல்வி மேம்பாட்டுப் பேரவையினாலே அணியஞ் செய்யப்பட்டு 12 நாடுகளிலுள்ள கல்விக்கழகங்களுக்கு அதாவது…

பிரித்தானியா : தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கிளை நிறுவனம்.

யேர்மனி : தமிழ்க் கல்விக் கழகம்

பிரான்சு : தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்

நோர்வே : அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம்

டென்மார்க் : மாலதி தமிழ்க் கலைக் கூடம்

நெதர்லாந்து : திருவள்ளுவர் தமிழ்க் கலைக் கூடம்

கனடா : அறிவகம்

நியுசிலாந்து : சிறுவர் பூங்கா

பின்லாந்து : அன்னை பூபதி தமிழ்க் கலைக் கூடம்

இத்தாலி : திலீபன் தமிழ்ச்சோலை

பெல்சியம் : தமிழ்ச்சோலை

சுவீடன் : தமிழ்ச் சோலை

ஆகிய கல்விக் கழகங்களிற்கு அனுப்பப்படுகின்றது. அதன் பிற்பாடு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் இலகுபடுத்தும் பொருட்டு மாதிரி வினாத்தாள்களுக்கான விடைத்தாள்களும் அனுப்பப்படுகின்றன.

புலன்மொழி வளத்தேர்வு

அடுத்ததாக புலன்மொழி வளத்தேர்வு. அதிலே கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற அடிப்படையில், மாணவர்களுக்கு கேட்டல் திறனையும் பேசுதல் திறனையும் வாசித்தல் திறனையும் வளர்க்கும் நோக்குடன் இடம்பெறுகின்றது. புலன்மொழித்தேர்வு வளர்தமிழ் 1 முதல் வளர்தமிழ் 12 வரை நடைபெறுகின்றன.  கேட்டலுக்கு ஒலிவட்டும், பேசுதலுக்கு பேசுதல் பகுதியும் வாசித்தலுக்கும் வாசிக்கும் பகுதி கல்விமேம்பாட்டு பேரவையினால் அணியஞ் செய்யப்பட்டு அந்தந்த கல்விக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

பேசுதலுக்கு வளர் தமிழ் 1, 2 வகுப்புகளுக்கு படம் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். வளர்தமிழ் 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டு வினாக்கள் கேட்கப்படும். வளர்தமிழ் 6 முதல் 12 வரை தலைப்புகள் கொடுக்கப்பட்டு அவை தொடர்பாகப் பேசவேண்டும். தலைப்புகள் இரண்டு பிரிவுகளாக இருக்கும். பாடநூல் தலைப்பு பொதுத் தலைப்பு என இரு தெரிவுகள் இருக்கும். அவர்கள் இரண்டு தலைப்புகளிலும் ஒன்றைத் தெரிவுசெய்து பேசவேண்டும். வகுப்புகளிற் கேற்ப பேசும் மணித்துளிகள் மாறுபடும். சில வகுப்புகளிற்கு 2 மணித்துளிகளும் சிலவகுப்புகளுக்கு 3 மணித்துளிகளும் பேசுதலுக்குக் கொடுக்கப்படும். புலன்மொழித்தேர்வுப் புள்ளிகள் எழுத்துத் தேர்வு புள்ளிகளுடன் சேர்க்கப்பட்டு மாணவர்களுக்கான புள்ளிகள் மொத்தமாக வழங்கப்படும்.

 

கேட்டல், பேசுதல், வாசித்தல் தேர்வில் முறையே 10 புள்ளிகள் அடிப்படையில் 30 புள்ளிகள் வழங்கப்டும். எழுத்துத்தேர்வுக்கு 70 புள்ளிகளும் வழங்கப்படும். புலன் மொழித் தேர்வில் மயக்க ஒலிகளுக்கு கவனம் செலுத்தப்பட்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்களுக்கான  படம்பார்த்துப் பேசுதல் தேர்வில் தமது வாழிட மொழியில் பேசுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதற்குரிய தமிழ்ச்சொல்லை ஆசிரியர் திரும்பக் கேட்கவேண்டும். அத்துடன் வடமொழிச் சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களும் ஏற்புடையதல்ல. புலன்மொழித்தேர்வில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பேசுதலும் வாசித்தலும் மட்டுமே. கேட்டல் பகுதி இல்லை. இந்த இரு வகுப்புகளுக்கும் 20 புள்ளிகள் வழங்கப்பட்டு, எழுத்துத் தேர்வுக்கு 80 புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

அனைத்துலக எழுத்துத் தேர்வு

கேட்டல், பேசுதல், வாசித்தல் ஆகிய மூன்று திறன்களையும் புலன்மொழிவளத் தேர்வு மூலம் நிறைவு செய்த பிள்ளைக்கு எழுதுதல் திறனாக எழுத்துத் தேர்வு அமைகின்றது. எழுத்துத் தேர்வு 12 நாடுகளுக்கும் ஒரே நாளில் அதாவது ஆனிமாதம் முதல் சனிக்கிழமை நடைபெறுகின்றது. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தேர்வுத்தாள்கள் அணியஞ் செய்யப்பட்டு அனைத்து நாடுகளிலுமுள்ள கல்விக்கழகங்களுக்கும் மே மாத இறுதியில் அனுப்பி வைக்கப்படும்.

கல்விக் கழகங்கள்  தேர்வினை நடாத்தி மாணவர்களின் விடைத்தாள்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். அனைத்து நாடுகளிலிருந்தும் வகுப்பு நிலைக்கேற்ப ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படும்.

* ஒரு நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அந்த நாட்டு விடைத்தாள்கள் திருத்த வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.
* ஒவ்வொரு விடைத்தாளும் வெவ்வேறு ஆசிரியர்களால் மூன்று முறை மீள்பார்வை செய்யப்படும்.
* தேர்வுப் பெறுபேறுகள் ஆகத்து மாத நடுப்பகுதியில் அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
* ஒக்ரோபர் – நவம்பர் காலப்பகுதிகளில் பெறுபேறுகளுக்கான சான்றிதழ்கள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வழங்கப்படும்.

2017 இல் அனைத்துலகத் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள்

பிரான்சு     – 5931
யேர்மனி     – 5500
பிரித்தானியா     – 4900
நோர்வே     – 1200
டென்மார்க்     – 1300
நெதர்லாந்து     –    500
கனடா     – 6000
இத்தாலி     –   500
சுவீடன்     –    100
பெல்சியம்      –    18 

இதுவரை தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி…?

நாங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றோம். இவற்றுள் முக்கியமாக சிலவற்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அதில் ஒன்று நாங்கள் தனித்தமிழ் அதாவது தூய தமிழோடு பாடநூல்களை ஆக்குகின்றோம். ஆனால், தாயகத்தில் நாங்கள் படித்த தமிழ் தனித்தமிழுக்குள்ளேயோ,  தூய தமிழுக்குள்ளேயோ நிற்கவில்லை. அந்த வகையில் நாங்கள் தூய தமிழுக்குள்ளே நிற்கும்போது, பெற்றோர்கள் குழப்பமடையும் தன்மை இருக்கின்றது. தெரியாத சொற்களை நீங்கள் சொல்லிக்கொடுக்கின்றீர்கள். புதிதாகக் கண்டுபிடிக்கின்றீர்கள். இது பிள்ளைக்கு விளங்காது. நீங்கள் புதிதாகக் கொண்டுவரும்போது பிள்ளைகளுக்கு எம்மால் சொல்லிக்கொடுக்க முடியாமல் இருக்கின்றது. போன்ற குழப்பங்கள் இருக்கின்றன.

ஆனால், தூயதமிழ், தனித்தமிழ் என்று சொல்லும்போது, நாங்கள் ஒன்றும் புதிதாகக் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே இருந்த பழைய, பயன்படுத்தாமல் இருக்கும் சொற்களை நாங்கள் தூசுதட்டி வெளியில் கொண்டுவருகின்றோம். உதாரணமாக நாங்கள் ‘வாங்கு’ என்று கதைக்கின்றோம். நாங்கள் அதற்கு ‘காவிருக்கை’ என்று கொடுக்கின்றோம். ‘கதிரை’ என்று சொல்கின்றோம். கதிரை என்பது தமிழில்லை. அதனை ‘இருக்கை’ என்று கொடுக்கின்றோம். அதேபோன்று நிறைய தமிழ்சொற்களை நாங்கள் பயன்படுத்துகின்றோம். இது பெற்றோருக்கு கடினமாக உள்ளது. ஏனென்றால், பெற்றோரின் பார்வையில் நாங்கள் அப்படிப்படிக்கவில்லை என்ற எண்ணம்தான் உள்ளது. நாங்கள் எழுதித்தந்த பாடத்திட்டத்தை அப்படியே படித்துவிட்டு வந்துள்ளோம். பெற்றோருக்கு அது தெரியாமல் உள்ளபோது பிள்ளைகளுக்கும் அது கடினமாக உள்ளது.

ஆனால், எமது நூல்களில் அவற்றுக்குரிய விளக்கமும் இருக்கின்றது. வடசொல் என்றால் வடசொல் எது, தமிழ்ச் சொல் எது என்று நாங்கள் கொடுத்துள்ளோம். அந்த இடர் வந்து ஓரளவிற்கு எமக்கு எதிர்ப்பு இருந்தாலும் தற்போது அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அனைவரும் வந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாக இளைய இணையர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு நற்றமிழ்ப் பெயர்களை இடுகின்றனர். எடுத்துக்காட்டாக எழிலன் செழியன் இனியா ஓவியா காவியா மகிழினி குறிஞ்சி போன்ற தமிழ்ப்பெயர்களை இடுகின்றனர்.

நாங்கள் இந்த தூயதமிழுக்கான அகராதி ஒன்று, அதாவது அகராதி என்றால் ஆங்கில அகராதி போலல்லாமல், வடசொல், தமிழ் சொல், வேறு பிறமொழிச்சொற்கள் அடங்கிய அகராதியாக இது உள்ளது. இதனை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இது பெற்றோருக்காவே வெளியிடப்பட்டுள்ளது. பெற்றோரும் இதனை ஏற்றுள்ளனர்.

அடுத்ததாக மற்றொரு சிக்கலும் உள்ளது. எங்களுடைய பாடநூல்களை விட வேறு அமைப்புக்கள் பாடநூல்களை உருவாக்கிவருகின்றனர். எமது பாடநூல்கள் வளர்தமிழ் பாடநூல்கள். அவர்கள் அவ்வாறில்லாமல், வேறுபாடநூல்களை உருவாக்கித் தனித்தமிழுக்குள் நிற்காமல், எங்களுடைய வரலாற்றைச் சொல்லாமல், எங்களின் அடையாளத்தை எமது பிள்ளைகளுக்கு சொல்லாமல், தனியே தமிழ் அதாவது, இருக்கை என்றால் Irukkai என்று எழுதிக்கொடுக்கின்றார்கள். அப்படிப் படிக்கும் நூல்களை எமது பெற்றோர் விரும்புகின்றார்கள். ஏனென்றால் அது பிள்ளைக்கு படிக்க இலகுவாக இருக்கிறது. பிள்ளை இடர்ப்படத்தேவையில்லை. அந்தவகையில் அதனை முறியடித்துக்கொண்டு போகவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. அப்படிக் கற்கக்கூடாது எங்களுடைய தாய்த்தமிழை வாசிக்கத் தெரியவேண்டும் பேசத்தெரியவேண்டும். அந்த ஓர் இடர் இப்போது நிறையவே உருவாகி வருகின்றது. இதற்கு தமிழ்க் கல்வி என்ற பெயரில் நிறைய நிறுவனங்கள் அமைப்புக்கள் உருவாகிவருகின்றன.  நாங்கள் தமிழ் படிப்பிக்கின்றோம். நாங்கள் தமிழ் படிப்பிக்கின்றோம் என்று இவர்கள் தமிழ்ப் பெற்றோரை அழைக்கின்றனர். தனித்தமிழை விரும்பாத பெற்றோர், தூயதமிழை விரும்பாத பெற்றோர் அந்தப்பக்கங்களை நாடிச்செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால் பெற்றோர்தான் அதனை உணர்ந்து கொள்ளவேண்டும். இதிலே எவ்வளவு தேவை உள்ளது என்று. நாங்கள் ‘குசினி’ என்றுதான் கதைக்கின்றோம். ஊரிலே குசினியை அடுக்களை, அடுப்படி என்று கதைத்தோம். ஆனால் அந்த சொற்கள் எல்லாம் மறந்துபோகின்றோம். நாங்கள் வேறு நூல்களை பயன்படுத்தும் நேரத்தில் நாங்கள் ஊரில் இருந்த அடையாளமே இல்லாமல்போகும். இதிலே பெற்றோர் மிகக் கவனமாக இருக்கவேண்டும். இதனை பெற்றோர் மத்தியில் கொண்டுபோவதற்கு நிறைய இடர்கள் இருக்கின்றன.

வரலாறு என்று பார்க்கும்போது வரலாறு பிள்ளைகளுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கும். அதனைக் கற்பிக்கும் தன்மையிலேயே இருக்கின்றது. நாங்கள் நூல்களில் கொடுப்பதை வாசித்து விடுவதென்றால், பிள்ளைக்கு வரலாற்றில் விருப்பமே வராது. நாங்கள் அங்கே படித்த வரலாறு எங்களுக்குத் தந்தவரலாறு. விகாரமாதேவி மகன் துட்டெகெமுனுவிடம் ‘ஏன் குடங்கிக் கொண்டு படுத்திருக்கிறாய்’ என்று கேட்ட போது, ‘வடக்கே தமிழன் தெற்கே கடல் அதுதான் குடங்கிக்கொண்டு படுத்திருக்கிறேன்’ என்றுதான் துட்டகெமுனு தாயாருக்குப் பதிலளித்ததாக  நாம் எல்லோரும் படித்தோம். இங்கே எல்லாளன் என்ற பாடம் இருக்கின்றது. எல்லாளனுடைய முழுமையான வரலாற்றை அறிய முடிகின்றது. அங்கே இருந்து வந்த ஆசிரியர்கள் கூட எம் பாடநூல்களைக்கண்டு வியப்படைந்ததுமுண்டு. எல்லாளன் மட்டுமல்ல வரலாற்றின் உண்மைத் தன்மையை எங்களுடைய நூல்களில் இருந்துதான் அறியக்கூடியதாக இருக்கின்றது. அதுவும் சில பெற்றோர் வரலாறு பிள்ளைக்குத் தேவை இல்லை. ஏன் தமிழுக்குள்ளே வரலாற்றைக் கொண்டுவருகின்றீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர். தமிழ்மொழியைத் தனியே படித்தால் போதாது. எங்களுடைய அடையாளம் தெரியவேண்டும். எங்களுடைய வேர் தெரியவேண்டும். நாங்கள் எங்கே இருந்து வந்தவர்கள் என்று தெரியவேண்டும். எங்கள் முகவரி  தெரியவேண்டும். அதனை இந்த மொழிமூலம்தான் கொடுக்கலாம். இதற்கு நாங்கள் ஒரு முயற்சி எடுத்துள்ளோம்.

தமிழர் வரலாற்றை ‘கார்ட்டூன்’என்று சொல்லப்படுகின்ற கோட்டுச் சித்திரங்கள் மூலம் காணொளி வடிவில் மாணவர்களுக்கு வெளியிட எண்ணியுள்ளோம். மாணவர்கள் கணினி முன்பாக நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கல்விமேம்பாட்டுப் பேரவையினால் மாற்றியமைக்கப்பட்டு சில புதிய நூல்களின் வருகை பற்றி…?

வளர்தமிழ் 10 பாடநூல் அடுத்த கல்வி ஆண்டு முதல் மாற்றியமைக்கப்படவுள்ளது. அதற்குரிய காரணம், அது ஏற்கெனவே ஒரு கனதியான நூல் என்று கல்விக் கழகங்கள் குறைப்படுகின்றன. பிள்ளைகளுக்கு விளங்குவது கடினமாக இருப்பதனால் மாற்றப்படுகின்றது. அதற்குரியவேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களுக்கு இலகுவாக்கப்படுவதற்கே இந்த மாற்றமேயன்றி வேறு காரணமல்ல. 10 ஆம் வகுப்புப் பாட நூல் முதன் முதலாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. பிள்ளைகள் படித்துக்கொண்டுபோகும்போது, ஆசிரியர் மட்டத்தில் நிர்வாக மட்டத்தில் கல்விக் கழகமட்டத்தில் நாங்கள் தகவல் திரட்டும்போதும், தேர்வு முடிவுகள் வரும்போதும் பிள்ளைகளின் குறைபாடுகள் அறியக் கூடியதாக இருந்தது. இதனை வைத்து நாங்கள் ஆய்வு செய்தபோது குறித்த நூல் பிள்ளைகளின் தகுதி நிலைக்கு அதிகமாக இருந்தது. அதற்காகவே அதில் உள்ள 14 பாடங்களை 12 ஆகக் குறைத்து இலகு மொழி நடையில் மாற்றியமைக்கப்படவுள்ளது. ஏனைய பாடநூல்கள் 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் மாற்றியமைக்கப்படவேண்டியது கல்வித் திணைக்களத்தின் வேலைத்திட்டத்தில் ஒன்று. பெற்றோர்கள் மத்தியில் நூல்கள் மாற்றியமைக்கும்போது சில எதிர்ப்புகள் வருவது வழமையே. மாற்றம் செய்யும் போது பிள்ளைகளுக்கு இலகுவானதாகவும் நன்கு கற்கக்கூடியதாகவுமே மாற்றம் செய்கின்றோம். கடினமாக வந்துவிடுமே என்று பெற்றோர் பயப்படவேண்டிய தேவை இருக்காது.

நாடு தழுவியரீதியில் உங்களால் நடாத்தப்படும் பட்டறைகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்?

குறிப்பாக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமையகத்தில் ஏனைய நாடுகளில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது. இதில் பயிற்றுவிக்கப்படும் ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் என்று அழைக்கப்படுவர். இவர்கள், தங்கள் நாடுகளிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிப் பட்டறை நடாத்தி கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டங்களுக்கேற்ப ஆசிரியர்களை வளப்படுத்துவார்கள். எமது செயலமர்வில் சிறப்பாக ஒவ்வொரு நாடுகளில் இருந்துவரும் ஆசிரியர்கள் தமது கற்பித்தல் முறைகளையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வார்கள். இது அனைவருக்கும் மிகவும் நன்மைபயக்கும் விடயமாக உள்ளது.

இவ்வாறு வரும் ஆசிரியர்கள் தங்கள் நாடுகளுக்கு சென்று அந்தந்த கல்விக்கழகங்களின் ஊடாக அங்குள்ள தமிழ்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர். இதில் நிறைய முன்னேற்றம் உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் தமது பிள்ளைகளுடன் பழகிய அனுபவத்தைவைத்தே கற்பித்தல் முறைகளைக் கண்டுபிடிக்கின்றனர். இதனால் நன்மையும் வளர்ச்சியுமே மேலோங்கியுள்ளது.

தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையினால் நடாத்தப்படுகின்ற தமிழ்மாணி பட்டயக்கற்கைநெறி தொடர்பாகக் குறிப்பிடுங்கள்?

தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவையினால் 2015 ஆம் ஆண்டு தமிழ்மாணி பட்டயக் கற்கைக்கான பாடநூல்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பட்டயக்கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்குரிய தேர்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. ஓராண்டுக்கு 6 பாடநூல்களும் ஈராண்டுக்கு 6 பாடநூல்களும் உள்ளன.

வளர்தமிழ் 12 வரை படித்து முடித்த அத்தனை பிள்ளைகளும் எமது பட்டயக் கற்கைநெறியைத் தொடரலாம். 12 ஆம் வகுப்பிலே 500 பிள்ளைகள் தேர்வு எழுதுகின்றார்கள் எனில், அதிலே எண்ணி பத்து இருபது பிள்ளைகள்தான் ஆசிரியர்களாக வரும் வாய்ப்பு இருக்கிறது. ஏனையவர்கள் 12 ஆம் வகுப்பை முடித்துக்கொண்டு தமது வாழிட வாழ்க்கை முறைக்குள் போய்விடுகின்றனர். இதனால்தான் கல்விமேம்பாட்டுப்பேரவை சிந்தித்துப் பார்த்தது. இந்தப்பிள்ளைகளை எங்களோடு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்குடனும், அத்தோடு தாயகத்தில் இருந்து வருகின்ற ஆசிரியர்களும் இங்கு கற்பிக்கின்றனர். தாயகத்தில் இருந்து வந்த ஆசிரியர்கள் எங்களுடைய பாடநூல்களைக் கற்பிக்கும் தகுதி நிலை இல்லாமல் இருக்கலாம். இவர்களையும் வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயும் தான் இந்த பட்டயக் கற்கைநெறியை ஆரம்பித்தோம்.

வளர்தமிழ் 12 வரையுமுள்ள பாடநூல்களின் விரிவான விளக்கம்தான் இந்தப்பட்டயக்கல்விக்குரிய பாடங்கள். வளர்தமிழ் 2 வகுப்பிலேயே வரலாறு தொடங்குகின்றது. இலக்கணம் தொடங்குகின்றது. வளர்ந்துகொண்டுவரும் அடுத்தகட்ட வளர்ச்சிதான் இந்தப் பட்டயக் கற்கைக்குரிய பாடங்கள். இதை ஆசிரியர்கள் படித்தார்கள் என்றால், எந்த வேளையிலும் எந்த வகுப்பையும் எடுக்கும் திறன் இருக்கும். இங்குள்ள பிள்ளைகளுக்கு எதற்கும் விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும். ஆனால், தாயகத்தில் ஆசிரியர் சொல்வதை நாங்கள் அப்படியே கேட்டு இருந்தோம். இங்கு அவ்வாறு கற்பிக்கமுடியாது பிள்ளைகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆகவேண்டும். ஆசிரியர்கள் தமது தகுதிநிலையோடு, தமது ஆளுமையுடன் வகுப்பில் போய் நிற்கவேண்டும் என்பதற்காகவும், முன்னாயத்தம் செய்யாமலே வகுப்பிற்கு செல்லமுடியும் என்பதற்காகவும் தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை இந்தக் கற்கைநெறியை ஆரம்பித்துள்ளது. இரண்டு ஆண்டுக்கற்கை நெறியிலும் நிறைய நூல்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ‘நாமார்க்கும் குடியல்லோம்’. இது எமது விடுதலைப் போராட்டம் பற்றியது. எமது விடுதலைப்போராட்டம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு முன் இப்படியயான்று நடந்துள்ளது என்பது பற்றியதாகும்.

இது ஓராண்டு கற்கைநெறிக்குரியது. அதே போன்று இரண்டாம் ஆண்டு கற்கைநெறிக்குரிய நூல்களில்   ‘இராவணகாவியம்’ என்னும் நூல் உள்ளது. இதில் இராவணன் ஒரு நல்ல தமிழ் மன்னன் என்று கூறுகின்றது. நாங்கள் இராமனை நல்லவன் என்று தான் படித்தோம். இன்னும் இராமனை வணங்கிக்கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், இராவணனுக்கு 10 தலைகள் இருப்பதாக ஓர் அகோரமான உருவத்தில் காட்டப்பட்டது. இராவணனுக்கு 10 பேரின் வலிமை இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டுத்தேர்வும் இந்த ஆண்டு ஜனவரி 07 ஆம்திகதி அனைவரும் எழுதிமுடித்துள்ளனர். அனேகமானோர் இத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.  இவர்களுக்காக வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி சனிக்கிழமை தமிழ்மாணி என்ற பட்டமளிப்பு விழா பிரான்சில் முதன்முறையாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  இதனை ஒரு பட்டமளிப்பு விழாவாக கல்விமேம்பாட்டுப்பேரவை பார்க்கவில்லை. இதனை தமிழுக்கான பெருவிழாவாகத்தான் பார்க்கின்றது. தமிழ் மக்கள் அத்தனைபேரையும் இணைக்கும் ஒரு விழாவாகப் பார்க்கின்றது. புகழ், பெருமை, பதவி, வறுமை என்பவற்றோடு வாழ்ந்தாலும் அனைவரையும் இணைப்பது எமது மொழிதான். அந்த மொழிக்கான விழாவாகத்தான் இதனைப் பார்க்கின்றோம்.

இந்தப்பட்டயக் கற்கையை நிறைவுசெய்த அத்தனைபேரும், அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தமது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் கொடுத்த தலைப்புக்கள்  இனமானம், நடுகற்கள், ஒன்றுசேர்வோம் போன்றவை. இனியில்லையயன்று மிகமிகத் திறமாக எழுதியிருக்கின்றார்கள். குறித்த ஆய்வுக்கட்டுரைகள் விழாவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன. இதைப்பார்த்து கல்விமேம்பாட்டுப்பேரவை பெருமையடைகின்றது. நாங்கள் எமது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எமது மக்களை எங்களின் ஆசிரியர்களை, மாணவர்களை அந்த இனம் அழியாமல் இனத்தைக்காக்கின்ற அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வளர்ந்து கொண்டு போகவேண்டும் என்ற நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றோம்.

நிறைவாக ஊடகங்களிடம் இருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கின்றீர்கள்?

ஊடகம் என்பது தனது பணியைச் செய்யவேண்டும். கல்விமேம்பாட்டுப்பேரவையை எடுத்துக்கொண்டால், எங்களுடைய மக்களுக்குத் தெரியாது. கல்விக்கழகங்களில் இருக்கின்ற ஆசிரியர்களுக்கே தெரியாது கல்விமேம்பாட்டுப்பேரவை என்ன செய்கின்றது என்று. யார் இவர்கள் என்ற அந்த விடயம் தெரியாது. ஏனென்றால் கல்விக்கழகங்களுக்குத்தான் நாங்கள் நூல்களைக்கொடுக்கின்றோம். இதுவரை கல்விமேம்பாட்டுப் பேரவை 46 நூல்களை உருவாக்கியிருக்கின்றது. இந்த 46 நூல்களையும் நாங்கள் தனியாகவோ, பெற்றோருக்கோ, பள்ளிகளுக்கோ கொடுப்பதில்லை. ஒவ்வொரு கல்விக்கழகங்களுக்கூடாகத்தான் கொடுக்கின்றோம்.

பெற்றோரோ, ஆசிரியர்களோ, பிள்ளைகளோ அந்தக் கல்விக்கழகங்களுக்கூடாகத்தான் பெற்றுக்கொள்கின்றனர். கல்விமேம்பாட்டுப்பேரவையின் அடையாளம் பரவலாகத் தெரிவதில்லை. 10 வீத, 20 வீத மக்களுக்குத்தான் கல்விமேம்பாட்டுப்பேரவை என்ன செய்கின்றது என்று தெரியும். அடுத்தது இந்தத் தேர்வுத் தாள்கள். அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் செய்வது. வினாத்தாளுக்குரிய விடைகளை அளிப்பது. மற்றது அனைத்துலகத் தெர்வுக்குரிய வினாத்தாளை அளிப்பது. அனைத்துலகத் தேர்வு விடைத்தாள் திருத்துவது. விடைத்தாள் திருத்துவதற்கு யூன், யூலைமாதத்தில் எல்லாநாடுகளில் இருந்தும் ஆசிரியர்கள் வருவார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் ஆசிரியர்கள் இங்கேயே தங்கியிருந்தும் பிரான்சு ஆசிரியர்களும் சேர்ந்து இரண்டுமாதங்கள் திருத்துவோம். சிலவேளைகளில் இரண்டரை மாதங்களும் எடுக்கும். சென்ற ஆண்டு கனடாவுடன் சேர்த்து 26 ஆயிரத்து 111 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வுத்தாள் திருத்துவற்கு முதன்முறையாக வருபவர்களுக்கு அதற்குரிய விளக்கத்தை கல்விமேம்பாட்டுப்பேரவை செயற்பாட்டாளர்கள் பயிற்றுநர்கள் கொடுப்பார்கள். விடைத்தாள் திருத்துபவர்கள் தமது நாட்டு விடைத்தாளைத் திருத்தமாட்டார்கள். அதாவது பிரான்சு நாட்டு திருத்துநர்கள் இன்னொரு நாட்டு விடைத்தாளைத் திருத்துவார்கள். தேர்வு முடிவுகளையும் கல்விமேம்பாட்டுப்பேரவை கல்விக்கழகங்களுக்கு அனுப்பிவைக்க, கல்விக்கழகங்கள் பள்ளிகளுக்கு வழங்கும். அதற்கான சான்றிதழ்களையும் கல்விமேம்பாட்டுப்பேரவைதான் வழங்குகின்றது. அதற்கு முன்னதாக புலன்மொழிவளத்தேர்வுக்கான வினாத்தாள்கள் புள்ளியிடல் படிவங்கள் அனைத்தும் கல்விமேம்பாட்டுப் பேரவையினால் கல்விக்கழகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு கல்விக்கழகங்களே புலன்மொழிவளத்தேர்வையும்  நடத்துகின்றன.

தேர்வுத்தாளை நாங்கள் திருத்தும்போது முதலாவதுபார்வை சிவப்புப்பேனாவால் திருத்தப்படுகின்றது. இரண்டாவது பார்வை பச்சைப் பேனாவால் திருத்தப்படுகின்றது. பின்னர் கணனியில் பதிவிடப்படுகின்றது. இதற்கும் இரண்டுபேர் பதிவிடுவர். அனேகமாக ஒரு விடைத்தாளுக்கு புள்ளியிடுவதற்கு 6 பேர் பங்கெடுக்கின்றனர். இந்த 6 பேரின் முடிவுதான் தேர்வு முடிவாக வருகின்றது. இந்தளவு பணியும் கல்விமேம்பாட்டுப்பேரவை செய்வது என்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு கல்விமேம்பாட்டுப்பேரவைக்கு பேர்கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. இப்படி ஓர் அமைப்பு ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்.

கல்விமேம்பாட்டுப்பேரவை மறைவாக இருந்துகொண்டு, தன்னை வெளிக்காட்டாமல் கல்வியின் அடி அத்திவாரமாக ஆணிவேராக இருந்து செயற்படுவது. இதன் உண்மைத் தன்மையையும் நம்பிக்கையையும் ஊடகங்கள் வெளியில் கொண்டுவரவேண்டும். இப்படி ஊடகங்கள் செய்தால், நிறைய மக்கள் கல்விமேம்பாட்டுப்பேரவையின் தேவையை உணர்ந்துகொள்வார்கள். இந்தவராலாறுகள் எமது பிள்ளைகளுக்குத்தேவை இன்னொரு பாடநூல் அழகாக வருகிறது என்றால், அந்த மாயைக்குள்ளே போகமாட்டார்கள். இதற்குள்ளேயே நிற்பார்கள். இது எமது தேசியம் பேசுகின்ற பாடங்கள். ஆனால், அரசியலைப் புகுத்தவில்லை. பிள்ளைகளுக்கு என்ன விபரம் தேவையோ, தன்னை அடையாளம் காட்ட என்ன என்ன தேவையோ அத்தனையும் எமது பாடநூல்களில் உள்ளன.

தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவையுடன் ஈழமுரசின் சிறப்புச் சந்திப்பு
தொகுப்பு: கந்தரதன்

(     நன்றி: ஈழமுரசு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here